ஒரே ஒரு உண்மையைக் கொண்டு 50 அறிஞர்களை உங்களால் அமைதியாக்க முடியும், ஆனால் 50 உண்மைகளைக் கொண்டு ஒரு முட்டாளை உங்களால் அமைதியாக்க முடியாது.
இந்த மேற்கோள் ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த பாடத்தைக் கற்பிக்கிறது. ஒரு ஞானி உண்மையை மதிக்கிறார். அவர்கள் ஒரு உண்மையைக் கேட்கும்போது, சிந்தித்து, ஆழ்ந்து ஆராய்ந்து, தங்கள் மனதை மாற்றிக்கொள்ளத் தயாராக இருக்கிறார்கள். அவர்களின் நோக்கம் அகந்தையைப் பாதுகாப்பதல்ல, மாறாக எது நிஜம் என்பதைப் புரிந்துகொள்வதே ஆகும்.
அறிவாளிகள் எப்பொழுதுமே உண்மையைத் தேடும் போது யார் சொன்னார்கள் என்பதை வைத்தோ அல்லது எந்தப் பொருளை மட்டுமே வைத்தோ முடிவு செய்வதில்லை.
வள்ளுவர் கூறியதைப்போல"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு." என்ற வகையில் யார் சொன்னார்கள் என்பதை வைத்து முடிவு செய்வதில்லை.
அதே போல "எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு."என்று எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும் மயங்காமல், அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதைக் காட்டுவார்கள்.
ஆனால் ஒரு அறிவற்றவர் கற்றுக்கொள்வதற்காக விவாதிப்பதில்லை. அவர்கள் வெற்றி பெறுவதற்காகவே விவாதிக்கிறார்கள். அறிவாளிகள் அவர்களுக்கு ஆதாரம், தர்க்கம் மற்றும் உண்மையைக் கொடுத்தாலும், அதை மறுப்பதற்கு அவர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள். உண்மைகள் பலவீனமாக இருப்பதால் அல்ல, மாறாக அவர்களின் அகந்தை புரிதலை விட வலிமையானது.
அதனால்தான் ஒவ்வொரு விவாதமும் அறிவாளிகள் ஆற்றலுக்குத் தகுதியானதல்ல. சிலர் உண்மையைத் தேடுவதில்லை; அவர்கள் கவனத்தைத் தேடுகிறார்கள். அவர்களை நம்பவைக்க முயற்சிப்பது நம் அமைதியை வீணாக்குவதோடு, நம் மனதை அவர்களின் இரைச்சலுக்குள் தாழ்த்துகிறது.
எப்போது பேச வேண்டும், எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பதை ஞானம் அறியும். நீங்கள் அனைத்தையும் அனைவருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை. முட்டாள்கள் நிராகரித்தாலும் உண்மை உண்மையாகவே இருக்கும்.
இல்லாவிடில் நாம் முட்டாள்களுடன் விவாதிக்கும் போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாத மேடைகள் நடைபெறுவதைப் போலத்தான் இருக்கும். பல நேரங்களில் தொலைக்காட்சிகளில் நடைபெறக்கூடிய விவாத மேடைகளில் அறிவுபூர்வமாக, தர்க்கரீதியாக உண்மையை வைத்து வாதாடுவதை விட வெற்றி பெறுவதற்காக காட்டுக்கூச்சல் போடுபவர்கள் தான் அதிகமாக வருகிறார்கள்.
ஆகவே, உங்கள் அமைதியைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் போராட்டங்களைக் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். ஞானம் வளரக்கூடிய இடத்தில் பேசுங்கள், அகங்காரம் ஏற்கனவே கதவை மூடிவிட்ட இடத்திலிருந்து விலகிச் செல்லுங்கள்.
ஏனெனில் உண்மை எப்போதும் உண்மை தான். வெற்றி மட்டுமே உண்மையாகி விடாது.

No comments:
Post a Comment