சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 31 July 2026

குந்தித்தின்றால் குன்றும் கரைந்திடும் ...

 'தந்தை வாங்குகிறார், மகன் கட்டுகிறார், பேரன் விற்கிறான், அவன் மகன் பிச்சை எடுக்கிறான்'. என்கிறது ஸ்காட்லாந்து பழமொழி ஒன்று. 

இந்தப் பழைய நாட்டுப்புறப் பழமொழியிலிருந்து, ஒழுக்கமும் கடின உழைப்பும் இல்லாமல் பரம்பரைச் செல்வம் எப்படி மறைந்துவிடும் என்பதற்கான ஒரு அருமையான வாழ்க்கைப் பாடம் கற்பிக்கப்படுகிறது. 

வாழ்க்கைப்பாடத்தை உலகெங்கும் பல மொழிகளில் பழமொழியாக சொல்லிக்கொடுத்துள்ளனர் முன்னோர்கள். 

"குந்தித்தின்றால் குன்றும் கரைந்திடும்" என்கிறது ஒரு தமிழ்ப்பழமொழி.
 தனிமனித வாழ்க்கையில் உழைப்பும், சேமிப்பும், சிக்கனமும், ஒழுக்கமான வாழ்க்கையும் அடிப்படையான ஒன்று. முன்னோர்கள் என்ன உழைத்து சேர்த்து வைத்திருந்தாலும் அவரவர் சக்திக்கு தகுந்தார் போல் உழைப்பில் ஈடுபடுதலும், குறைந்தபட்சமாவது சேமிப்பு செய்தலும், ஆடம்பரம் அற்ற வாழ்க்கை வாழ்தலும், ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்தால் மட்டுமே சேர்த்து வைத்த சொத்துக்கள் மேலும் வளரும். இல்லை என்றால் இருக்கிற சொத்துக்கள் போய் பின்வரும் தலை முறைகள் பிச்சை எடுக்கும் வாழ்க்கை தான் வாழ வேண்டி இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது அந்த பழமொழி.

உழைத்து பணம் சம்பாதித்தல் என்பது நேர்மையான முறையில் தான் இருக்க வேண்டுமே தவிர எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும், யார் குடியை  கெடுத்தாவது சம்பாதிக்க வேண்டும் என்று அல்ல, சமூக ஒழுங்குக்கு கட்டுப்பட்ட உழைப்பும் ஊதியமாக தான் இருக்க வேண்டும்.
அடுத்தபடியாக சேமிப்பு என்பது உண்ணாமல், துளி கூட அனுபவியாமல், குறைந்தபட்ச தேவையை கூட பூர்த்தி செய்யாமல், பார்க்கின்ற இடங்களிலெல்லாம், பார்க்கின்ற பொருளிலெல்லாம் பணத்தை போட்டு சேமித்து வைப்பது என்று அல்ல. அதேபோல் சிக்கனம் என்பது கஞ்சத்தனம் அல்ல தேவையற்ற செலவுகளை குறைத்து ஆடம்பரம் செய்யாமல் வாழ்ந்தது தவிர அத்தியாவசிய செலவுகளை செய்யாமல் கணக்கு பார்த்து வாழ்வது அல்ல. 
அதேபோல ஒழுக்கமான வாழ்க்கை என்பது சமூகத்தின் ஒழுங்குக்கு கட்டுப்பட்டு ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழ்வதும், போதைபழக்கவழக்கங்கள், சூதாட்டங்கள், தில்லுமுல்லுகள் போன்றவற்றில் சிக்கிக் கொள்ளாமல், சமூகத்தில் பிறருடைய வாழ்க்கைக்கு கெடுதல் இல்லாமல், முடிந்தால் நல்லது செய்தவாறு வாழ்ந்தாலே ஒழுக்கமான வாழ்க்கை. 
 அதை மறந்து முன்னோர் சம்பாதித்து வைத்த சொத்தை வைத்துக் கொண்டு வேலைக்கு போகாமல் உட்கார்ந்து இடத்திலேயே நல்ல சாப்பாடு ஆடம்பரம் வெட்டிக் கச்சேரி சூதாட்டம் போன்றவற்றோடு வாழ்வதற்கு பெயர் சுக ஜீவனம். 
"சுயார்ஜிதம் உத்தமம்; பிதுரார்ஜிதம் மத்திமம்; அந்நியார்ஜிதம் அதமம்."என்றொரு சமஸ்கிருத தொடருண்டு. 
சுயார்ஜிதம் உத்தமம் (மிகச்சிறந்தது)தன் உழைப்பால் தேடும் பொருள்.இது மனநிறைவையும் சுயமரியாதையையும் தரும்.
பிதுரார்ஜிதம் மத்திமம் (பரவாயில்லை/சாதாரணமானது)பெற்றோர் அல்லது முன்னோர்கள் சேர்த்த சொத்து.இது உழைக்காமல் கைக்கு வரும் பொருள்.இதனால் தனிமனித திறமை வெளிப்படாது.
அந்நியார்ஜிதம் அதமம் (மிகவும் மோசமானது)அடுத்தவர் உழைப்பை ஏமாற்றிப் பறிப்பது.லஞ்சம் மற்றும் திருட்டு மூலம் வாங்குவது.இது பாவத்தையும் அழிவையும் மட்டுமே தரும்... 

. அவ்வாறு மேற்கூறிய பழமொழிக்கு தகுந்தார் போல் வாழ்ந்தால் முந்தைய தலைமுறை என்னுடைய சேமிப்பு அடுத்த முறையில் அடுத்த தலைமுறை உடைய கௌரவமான வாழ்க்கைக்கு பயனுள்ளதாக இருக்கும். 
இந்த தத்துவம் என்பது தனிநபருக்கு மட்டுமல்ல நிறுவனங்களுக்கும் அரசுக்கும் மிக மிக பொருந்தக் கூடியதே!!!

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...