சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 15 July 2026

ராகுல்ஜி க்கு அவமரியாதை.

கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள இயலாத கயவர்கள் செய்கின்ற காரியமெல்லாம் பிறர் படைப்புகளையும் நினைவுச்சின்னங்களை அழிப்பது தான். 

இவ்வாறு இன்று உடைக்கப்பட்டிருக்கிறது ராகுல சங்கிருத்தியாயன் என்ற ராகுல்ஜியின் சிலை தான். 
 (ஏப்ரல் 9, 1893 - ஏப்ரல் 14, 1963) 

யார் அந்த ராகுல்ஜி? 
அவர் என்ன சமூக விரோதியா? மக்களிடையே மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், இனத்தின் பெயரால் விரோதத்தை பரப்பியவரா? அல்லது புராணங்கள் என்ற பெயரிலே புளுகு மூட்டைகளை ஆபாச கருத்துக்களை விதைத்தவரா? அல்லது ஆங்கிலேயரின் அடிவருடியா? 


இந்திய பயண இலக்கியத்தின் தந்தை என அறியப்படுபவர், தன் வாழ்நாளில் 45 வருட காலத்தை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணத்தில் செலவழித்தவர் பன்மொழிப்புலவர், பல்துறை வித்தகர் தான் இராகுல் சாங்கிருத்தியாயன். 
அதுமட்டுமன்றி ஆங்கிலேயர் ஆட்சிக்கெதிரான கருத்துகளை எழுதியதற்காக மூன்றாண்டு கால சிறைவாசம் அனுபவித்தவர். 
இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றதோடு மட்டுமன்றி நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், முன்னாள் சோவியத் உள்ளிட்ட உலக நாடுகளுக்கும் சென்றுள்ளார். திபெத்திற்கு இவர் புத்த துறவியாகச் சென்று அங்கிருந்து பல மதிப்புள்ள புத்தகங்களையும் ஓவியங்களையும் இந்தியாவிற்குக் கொணர்ந்தார்.
 இருபது வயதில் எழுத ஆரம்பித்த இராகுல்ஜி பல்வேறு துறைகளில் 146 புத்தகங்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய நூல்களில் அனைவரும் அறிந்தது வால்கா முதல் கங்கை வரை வரலாற்றுப் புனைவு நூலாகும். கி.மு. ஆறாயிரத்தில் துவங்கும் இந்நூல் கி.பி. 1942இல் முடிகிறது. இந்நூல் கண. முத்தையா என்பவரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. தெலுங்கு மற்றும் மலையாள மொழிபெயர்ப்புகளும் அம்மொழிகளில் புகழ்பெற்றுத் திகழ்கின்றன.அவற்றுள் சில
பொதுவுடமைதான் என்ன?
வால்காவிலிருந்து கங்கை வரை
சிந்து முதல் கங்கை வரை போன்றவை குறிப்பிடத்தக்கவை. 

1958 ஆம் ஆண்டு இலக்கியத்திற்காக வழங்கப்படும் மிக உயரிய விருதான சாகித்திய அகாதெமி விருது மத்திய ஆசியாவின் இதிகாசம் எனும் இவரது புத்தகத்திற்கு வழங்கப்பட்டது. 1963 ஆம் ஆண்டு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது.

அப்பேர்ப்பட்ட இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட மக்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு இலக்கியங்கள் படைத்திட்ட பயண இலக்கியத்தில் முன்னோடியாக திகழ்ந்த மனித குல மேம்பாட்டு சிந்தனையாளர் மார்க்சியவாதியாக திகழ்ந்த மாபெரும் மேதைக்கு மேற்கு வங்கத்திலே ஒரு சிலை அமைக்கப்பட்டு இருந்தது. 

அவரது சிலை இன்று பிற்போக்காளர்களால், சனாதன சிந்தனைவாதிகளால், மனித குல விரோதிகளால் மதவெறியர்களால் உடைத்தெரியப்பட்டிருக்கிறது. 
மனிதநேயத்தை, மக்கள் ஒற்றுமையை, முற்போக்கு சிந்தனையை போற்றி புகழ்பவர்கள் இந்த அக்கிரம செயலை கண்டிக்க முன்வரவேண்டும். 

1 comment:

  1. வால்கா முதல் கங்கை வரை தோலுரித்த வலது சாரிகளின் காழ்ப்புணர்ச்சி!

    ReplyDelete

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...