உலகில் போர் எதற்காக தான் காலம் காலமாக நடத்தப்படுகிறது? இலக்கியங்கள் எதற்காக தான் போரைப் போற்றி பாடுகின்றன
உண்மையில் போர் மரியாதைக்காகவும், கௌரவத்திற்காகவும், இனப்பெருமைக்காகவும், தேசிய பாதுகாப்பிற்காகவும் நடத்தப்படுகிறதா... கதாநாயகர்களின் பெருமை, புகழுக்காகவா? சக்திவாய்ந்தவர்களின் லட்சியங்கள் மற்றும் இலாபங்களுக்காகவா?
காலம் காலமாக வரலாறு, இலக்கியம் படித்தவர்கள் பல போர்களை படித்திருக்கிறோம். நம் இலக்கியங்கள் அல்லது வரலாற்று ஆவணங்களை தான் சற்று பின்னோக்கி பார்ப்போமே!
தமிழ் கூறும் நல்லுலகின் போர்ப்பெருமைகளை நாம் காலம்காலமாக பெருமையுடன் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்
தமிழகத்தை பொருத்தமட்டில் சங்ககாலம் என்பது கி.மு 300க்கும் கி.பி 100க்கும் இடைப்பட்ட காலம் என்கிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள்.
அந்த 400 ஆண்டுகளில் தமிழகத்திலும்,தமிழகத்தில் நடந்த போர்கள், வரலாற்றிலும் இலக்கியத்திலும் பதிவாகியுள்ளன. பன்மொழிப் புலவர் அப்பாதுரையாரின் "தென்னாட்டுப் போர்க் களங்கள்" என்ற நூலில் அவர் கணக்கெடுத்துச் சொல்கிற வகையில் சுமார் 40.அதாவது, 400 ஆண்டுகளிலேயே 40 போர்கள் என்றால், 10 ஆண்டுக்கு ஒரு போர் நடந்திருக்கிறது.
அடுத்ததாக,சங்கம் மருவியகாலம் எனப்படும் கி.பி 101க்கும் கி.பி 900க்கும் இடையேயான 800 ஆண்டு காலமாகும் .
இதில் வரலாற்றை இருட்டடிப்புச் செய்த 300 ஆண்டுகளில், இருண்ட காலமென ஏமாற்றப்பட்ட களப்பிரர் காலமும், சோழப் பேரரசுக்கு அடித்தளமிட்ட 9 ஆம் நூற்றாண்டின் மத்தியப் பகுதியும் உள்ளிட்ட இக்காலத்திலே 80 போர்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதாவது இக்காலத்திலும் 10 ஆண்டுகளுக்கு ஒரு போர் வீதம் நடந்துள்ளது.
சோழப்பேரரசு 850களில் தழைக்கத் தொடங்கி ஏறத்தாழ 130 ஆண்டுகள் தழைப்பிற்குப் பின் 300 ஆண்டுகாலம் கடல் கடந்தும் பிரதேசங்களை கைப்பற்றி பேரரசாக விரிந்து பரந்தது.
ஆகவே கி.பி 901க்கும் சோழர்கள் நலிந்த 1300க்கும் இடைப்பட்ட காலமான அந்த 400 ஆண்டுகளில் 166 போர்கள் நிகழ்ந்ததாகக் காணக் கிடைக்கிறது.
இது தமிழகத்தில் கொஞ்சமும், சோழப்பேரரசு வடக்கே கங்கை, கிழக்கே கடாரம், மேற்கே சேரம், தெற்கே மாலத் தீவுகள் வரை எல்லை விரிவாக்கத்திற்குச் செய்யப் பட்டப்போர்களின் எண்ணிக்கையும் கிடக்கிறது.
ஆக இந்தக் கால கட்டத்தில் சராசரியாக 2.5 ஆண்டுகளுக்கு ஒருபோர் வீதம் நடந்திருக்கிறது. அதாவது சராசரியாக 10 ஆண்டுகளுக்கு 1 போர் என்று இருந்த போர்விகிதம் திடீரென 2.5 ஆண்டுக்கு 1 போர் ஆக அதிகரித்துள்ளது.
அடுத்ததாகக் கி.பி.1301க்கும் 1750க்கும் இடைப்பட்ட 450 ஆண்டு காலம். இக்காலத்தில்தான் மொகலாயர், மராட்டியர், தெலுங்கர், கன்னடர், போர்த்துக்கீசியர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், பிரித்தானியர் என 8 வகையானவர்களின்அன்னிய படையெடுப்பாளர்களுக்கு அன்னிய தாக்கம் ஏற்பட்ட காலம். இவர்களோடு ஒய்சளர்கள் என்ற பிரிவினரும் வந்தனர்.
இக்காலத்தில் நடைபெற்ற போர்கள் 120.சராசரியாக 3.75 ஆண்டுகளுக்கு ஒரு போர். இந்தப் போர்கள் தமிழர்களோடும்,தமிழர்களிடையேயும், மற்றவர்களுக்கு இடையிலேயும் நடந்ததாக உள்ளன.
1750க்குப் பின் ஏறத்தாழ இந்தியா பிரித்தானியரின் கீழ் அடங்கி விட்டது; 1750க்கும் 1850க்கும் இடையேயான 100 ஆண்டுகளில் மட்டும் தமிழகம் 50 போர்களைக் காண்கிறது. அதாவது 2 ஆண்டுகளுக்கு ஒரு போர் என்ற அளவிலானது.
ஆக விருப்பு வெறுப்பின்றி யோசித்தால் எல்லா காலத்திலும் அந்நிய படையெடுப்பு என்பது எல்லா பிரதேசத்தினருக்கும், எல்லா இனத்திற்கும் பொதுவானது. நாங்கள் மட்டும் நல்லவர்கள் அவர்கள் மோசமானவர்கள் என்று மற்றவர்களை குறை சொல்ல வரலாறு யாரையும் அனுமதிக்கவில்லை
1850க்குப் பிறகு இந்திய தேசிய விடுதலை இயக்கம் ஓங்க ஆரம்பித்து 1947 வரைக்கும் நீண்டது வேறு வகையானது.
இப்பொழுது, 1947க்குப் பிறகு தமிழகத்தை உள்ளிட்ட இந்தியா செய்த போர்கள் எத்தனை ?
1948-49 - காசுமீரப் போர், 1965 - கட்ச் போர், 1971 - கிழக்கு வங்கப் போர், 1999 - கார்கில் போர் என்று பாகிஸ்தானுடன் நான்கு போர்கள்., 1962 - இமயப் போர் / அருணாச்சலப் போர் நாங்கள் -சீனாவுடன் 1 போர், 1987 - சிங்களச் சார்புப் போர்கள் என 80.
தமிழ்நாடு இந்திய மாநிலங்களுள் ஒன்று என்பதால் இந்தியா செய்கின்ற போர்களால் தமிழ்நாட்டு அரசியலுக்கும் பொருளியலுக்கும் சமூகத்திற்குள்ளும் அவற்றின் தாக்கம் உண்டு.
ஆக, விடுதலை அடைந்து இந்த 61 ஆண்டுகளிலேயே மொத்தம் 6 போர்களில் இந்தியா ஈடுபட்டுள்ளது.
இங்கே சராசரிப் போர் வீதம் பார்த்தால் அது 10 என்கிறது.
இந்தச் சூழலுக்குள்தான் தமிழ் மக்களின் நீண்ட நெடிய செத்த வரலாறும் வாழ்ந்த வரலாறும் நடந்து வந்துள்ளன.போர்களின் நோக்கம் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதும்,எல்லைகளை விரிவுபடுத்துவதும் தான்.
இது நம் தேசத்து கதை என்றால் உலகம் முழுக்க உள்ள மொத்த கதை இதுதான்.
போர்மூள்வதும், மக்கள் மாய்வதும், நாடு, நகரங்கள் அழிதலும், சொத்துக்கள் சூறையாடப்படுதல், உயிரினங்களின் துயரங்கள் போன்றவை இல்லாத நாட்களே இல்லை எனலாம்.
மக்களுக்கு இதனால் எந்தப் பிரயோசனமும் இல்லை.அழிந்தது தான் மிச்சம்.
உலகில் போர்களை ஆய்வு செய்த அறிஞர் ஸ்மெட்லி பட்லர் போரை "ஒரு மோசடி" என்று பிரபலமாக அழைத்தார், இராணுவ மோதல்கள் பெரும்பாலும் சக்திவாய்ந்த பொருளாதார நலன்களுக்கு பயனளிக்கின்றன, அதே நேரத்தில் சாதாரண வீரர்கள் செலவழிக்கிறார்கள் என்று வாதிடுகிறார்.
எர்னஸ்ட் ஹெமிங்வே போரின் கொடூரமான யதார்த்தங்களைப் பற்றி தெளிவாக எழுதினார். எ ஃபேர்வெல் டு ஆர்ம்ஸ் போன்ற படைப்புகளில், போர்க்களத்தின் பயம், குழப்பம் மற்றும் துன்பத்தை வெளிப்படுத்தும் மகிமையின் காதல் கட்டுக்கதைகளை அவர் அகற்றினார்.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக வெளியான SIPRI ஆண்டு புத்தகம் 2025, சர்வதேச பாதுகாப்பு, ஆயுதங்கள் மற்றும் தொழில்நுட்பம், இராணுவச் செலவு, ஆயுத உற்பத்தி மற்றும் ஆயுத வர்த்தகம், ஆயுத மோதல்கள் மற்றும் மோதல் மேலாண்மை ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள், வழக்கமான, அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.
அதன் ஆய்வறிக்கையின்படி 2024 முழுவதும் உலகளாவிய பாதுகாப்பு தொடர்ந்து மோசமடைந்தது. , இராணுவச் செலவு $2.7 டிரில்லியனைத் தாண்டியது.) 1 டிரில்லியன் டாலர் என்பது தோராயமாக ₹83-84 லட்சம் கோடி ரூபாய்கள் (8.3 - 8.4 Trillion INR)) .
உலகம் முழுக்க ராணுவத்திற்கு செலவிடப்படும் தொகையை உணவு இருப்பிடம் மருத்துவம் மற்றும் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்படுத்தினால் இந்த உலகம் எவ்வாறு மாறி இருக்கும்
போர் பற்றிய விவாதங்கள் மூலோபாயம் மற்றும் தேசிய நலன்களை மட்டுமல்ல, போராடுபவர்களால் செலுத்தப்படும் மகத்தான மனித இழப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதை இந்த முன்னோக்குகள் நமக்கு நினைவூட்டுகின்றன.
இன்று போர்வெறியின் உச்சமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈரான் நாட்டை மட்டுமல்ல அதனுடைய கலாச்சாரம் அனைத்தையும் அழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார்.
உங்கள் சிந்தனைக்கு ஒரு கேள்வி
போர் அந்த ஹீரோக்களுக்காக நினைவுகூரப்படுகிறதா...
அல்லது அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நினைவுகூரப்பட வேண்டுமா?
No comments:
Post a Comment