சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 4 April 2026

தேர்தல் திருவிழா 9

 ஆளுமை எதிர்ப்பு காரணிகள்-anti incumbency factors.

பழகப் பழக பாலும் புளிக்கும் என்பார்கள். எப்பேர்பட்ட அரசாக இருந்தாலும், எல்லா காலத்திலும், எல்லா மக்களையும் திருப்திப்படுத்த இயலாது. அது போக ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் வளர்ச்சி, திட்டங்கள், கொள்கைகள் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அந்த அரசு மட்டுமல்ல, அது சார்ந்திருக்கும் நாட்டு, புவிசார் அரசியலையும் பொருத்தது. அது மேம்போக்காக பார்த்தால் புரியாது. ஆழமாக ஆய்ந்து பார்த்தால் உள்ளூர் அரசியல் மட்டுமே எல்லா விஷயத்தையும் தீர்மானிப்பதில்லை என்பது புரியும். ஆனால் எளிதில் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அது போக அந்த அரசை நடத்தக்கூடிய கட்சிகள், அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள், எல்லாருடைய ஒழுக்கமான, நேர்மையான பங்கேற்பு இருந்தால் மட்டுமே வளர்ச்சி என்பது சாத்தியம். 

ஊழல், ஆடம்பரம், மக்களை விட்டு வெகு தூரம் விலகி இருத்தல், ஆள்பவர்களிடையே ஒற்றுமையின்மை, ஒழுங்கு கட்டுப்பாடு இல்லாத இருத்தல் ஆகியவை ஆளுமைக்கு எதிரான உணர்வையே மக்கள் மத்தியில் உருவாக்கும். இக்காரணியும் கூட தேர்தலை பெருமளவு பாதிக்க கூடியதாகும். 

நேர்மையோடும் நடுநிலைமையோடும் இதைப்பற்றி விவாதிக்கும் போது பலருடைய வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்கும். சார்பு நிலை அரசியலாக முத்திரை குத்தப்பட நேரிடும்.  ஆளுமைக்கு எதிரான காரணி தேர்தலை பெரிய அளவில் பல முறை பாதித்திருக்கின்றன. 

தேர்தலுக்கு முன் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை ஆளும் அரசு நிறைவேற்றத் தவறுவது முக்கிய எதிர்ப்பலைக்கு காரணமாகிறது.

வேலையின்மை, விலைவாசி உயர்வு, மற்றும் மோசமான சமூக-பொருளாதார சூழல் ஆளுமைக்கு எதிரான மனநிலையை உருவாக்குகிறது. 

ஆட்சியில் இருக்கும் கட்சி மீது சுமத்தப்படும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்கள் மக்கள் மத்தியில் அதிருப்தியை உண்டாக்குகின்றன.

உள்ளூர் எதிர்ப்பாக (Local anti-incumbency)அமைச்சர்கள் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தொகுதிகளில் மக்கள் பணிகளைச் செய்யாதது, கட்சிக்கு எதிரான வாக்குகளாக மாறுகின்றன.

 அடிப்படை வசதிகள் (சாலை, குடிநீர், மின்சாரம்) வழங்குவதில் அரசு தோல்வியடைந்தஎ போன்ற நிர்வாக சீர்கேடுகளும் எதிர் விளைவுகளை உருவாக்குகின்றன. 

 வலுவான எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களின் பிரச்சார உத்திகள் ஆளும் கட்சியின் பலவீனங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்றன.

இதற்கு உதாரணமாக பல தேர்தல்களை குறிப்பிடலாம்.

1967 இல் அன்றைய தமிழக அரசு மக்களை விட்டு வெகுதூரம் விலகி சென்றதன் விளைவு காமராஜர் போன்ற பிரபலமான தலைவர்கள் ஒதுங்கி சென்று பிரபலமற்ற தலைமை இருந்தது உணவு பஞ்சம் ஹிந்தி திணிப்பு பிரச்சனை யால் மாணவர்கள் மற்றும் மக்களுடைய வெறுப்பை சம்பாதித்தது எல்லாமே ஆளுமைக்கு எதிரான ஒரு மிகப்பெரிய அலையை உருவாக்கியது கூடவே எதிர்க்கட்சிகள் பலம் வாய்ந்த கூட்டணியை உருவாக்கிய போது அத்தேர்தல் முடிவுகள் ஆளும் கட்சிக்கு படு பாதகமாக அமைந்தது.

அதேபோல 1996 ஜெயலலிதா தலைமையிலான அரசு கட்டவுட் கலாச்சாரம் ஆடம்பரம் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்களை விட்டு வெகுதூரம் விலகிச் சென்றது ஆகியவை ஆளும் கட்சிக்கு எதிரான ஒரு பெரிய மனோபாவத்தை உருவாக்கியது தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியதை காண முடிந்தது இது போன்ற பல உதாரணங்களை இந்தியா முழுக்க காண முடியும் ஆக ஆளுமைக்கு எதிரான காரணி பலமாக இருக்கும்போது தேர்தல் முடிவுகள் ஒரு வீச்சை போல அல்லது அலையைப் போல மிகப் பெரிய பாதிப்புகளை உருவாக்கின.

மேலும் சிந்திப்போம்... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...