சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 10 April 2026

ஒரு நூற்றாண்டு வெறி

  ஒரு நூற்றாண்டு வெறி

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.

******************



வெறுப்பின் உச்சம் பாசிசம். அது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, நாக்பூரில், 27. 9. 1925 அன்று உருவம் பெற்றது. அதன் பெயர் 'ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்' (ஆர். எஸ். எஸ்). இச் சங்கம் கே. பி. ஹெட்கேவர் என்பவரால், இந்து தேசியத்தைக் கட்டமைக்கவும், தேசத்தை இந்துத்துவ மயமாக்கும் நோக்கத்தோடும் தொடங்கப்பட்டது.

இந்த ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஒரு குடும்ப அமைப்பாகச் செயல்படும்போது 'சங்பரிவார்' என்று அழைக்கப்படுகிறது. இந்துக் கோட்பாடுகளின் அடிப்படைத் தன்மையில் மனங்களைக் கட்டமைத்து அமைக்கப்படும் இந்து சமுதாயத்தின் மூலம், இந்து ராஜாங்கத்தைக் கட்டமைப்பதே இதன் செயல்திறன்.

தொடங்கப்பட்ட தொண்ணூறு ஆண்டுகளுக்குப் பிறகு, 2014 ஆம் ஆண்டில், இந்தியாவில் 60 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக இந்த ஆர். எஸ். எஸ். அமைப்பு வளர்ந்துள்ளது. 1940 ஆம் ஆண்டில் கென்யாவில் கிளைகள் தொடங்கிய இவ் அமைப்பு, இன்று 156 உலக நாடுகளில் 3289 கிளைகள் கொண்ட உலக அமைப்பாக வளர்நிலை பெற்றிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் நாடு முழுமையும் சிபிஎஸ்சி அல்லது மாநிலக் கல்விப் பாடத்திட்டங்களில், 34 லட்சம் மாணவர்கள் பயிலும் 12,828 கல்விச்சாலைகளைக் (வித்யா பாரதி) கொண்டுள்ளது. இது தவிர 11,353 முறைசாராக் கல்விக் கூடங்களையும் இயக்கி வருகிறது. இதன் ஊழியர்களுக்கு அதிக அளவிலான ஊதியம், ஆண்டுக்கு சராசரி 18 லட்சம் ரூபாய், வழங்கப்படுகிறது.

இந்துத்துவம், இந்து நாடு என்ற சொற்பழக்கம் 1890 களில் சந்திரநாத் பாசு என்பவரால் தொடங்கப்பட்டுப், பின்னர் பாலகங்காதர திலகரால் வழிமொழியப்பட்டு அந்தக் கருத்தியல் வழியில் ஓர் அமைப்பாக மாறியது. இந்திய அரசியலுக்கு மாற்றுக் கருத்தியலாகத்தான் இச்சொற்கள் கையாளப்பட்டன. அவற்றிற்கு இந்துக்களுக்கான நாடு என்று பொருள் கொடுத்து மெருகேற்றியவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.


இதே காலத்தில் (1925) குடியரசு இதழ் வழி, இடதுசாரி இயக்கமாகத் தொடங்கப்பட்டது தான், பெரியார் ஈ. வெ.ரா. அவர்களைத் தலைவராகக் கொண்ட சுயமரியாதை இயக்கம். அதற்கு முன்பு, 1916 ஆம் ஆண்டு பார்ப்பனர் அல்லாதோர் இயக்கமாகத் தொடங்கப்பட்ட நீதிக்கட்சி, சமூக நீதிச் செயல்பாடுகளைச் சட்டமாக்கும் முயற்சிகளைச் செய்து வந்தது. நீதிக்கட்சி உடனான ஒருங்கிணைந்த கருத்தியல், செயல்பாடுகளால் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் திராவிட இயக்கமாகப் பரிணமித்தன.

அந்தக் கருத்தியலின் தொடர்ச்சியாக அறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி வளர்ந்த அரசியல் இயக்கமான திமுக, ஆட்சி அதிகாரத்தை அடைந்து, சமூகநீதிக் கோட்பாடுகள் பலவற்றையும் தமிழ்நாட்டில் சட்டமாகச் செயலாற்றியது. அறிஞர் அண்ணாவின் காலத்திற்குப் பிறகு, திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கோட்பாடுகள் நீர்த்துப்போயின என்று குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சமூக நீதிக்காகப் போராடும் இயக்கமாக இன்றும் தமிழ்நாட்டு அரசியலில் திமுக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு 2025 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

இதேபோல் 1925 ஆம் ஆண்டில் கான்பூரில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் மாநாடு, இந்தியாவிற்கு மற்றொரு தீவிர இடதுசாரி இயக்கத்தைக் கொண்டு வந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, 17.10.1920 அன்று, தாஷ்கண்ட் நகரில் எம்.என்.ராய் போன்ற ஆளுமைகளால் தொடங்கப்பட்டாலும், இந்தியாவில் முதல் கம்யூனிஸ்ட் மாநாடு 26.12.1925 அன்று கான்பூரில் நடைபெற்றது தான் அதன் தொடக்கம். இம்மாநாட்டிற்குத் தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று போற்றப்படும் சிந்தனைச் சிற்பி ம. சிங்காரவேலர் தலைமை ஏற்றார். இதன் நூற்றாண்டும் 2025 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.

இதே காலகட்டத்தில் (1925) மேற்குலகில் கல்வி கற்றுப் பேரறிஞராகத் திரும்பி வந்த டாக்டர் அம்பேத்கர், அறிவுசார் இயக்கத்தைத் தொடங்கி சமூக, அரசியல் இயக்கமாகக் கொண்டு வந்தார். இப்படி இந்திய அரசியல், சமூக வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாக 1925 ஆம் ஆண்டு அமைந்திருந்தது.

திரு. ம. சிங்காரவேலர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் பாதை சமூக நீதி அமைப்பிலான இடதுசாரிப் பாதையாக இருக்க, ஆர். எஸ். எஸ். இன் பாதை, மத அடிப்படையில் ஆனதாகவும், பாசிச, வலதுசாரிப் போக்கினதாகவும் அமைந்திருந்தது.

தொடங்கும் போதே எதிர்மறை எண்ணங்களின் அடிப்படையில், ஒரு வலதுசாரி அமைப்பாகத் தொடங்கப்பட்ட ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம், 2025 ஆம் ஆண்டில் தன் நூற்றாண்டைக் கொண்டாடியது. அந்த நூற்றாண்டு விழாவின்போது இந்தியா முழுமையும் தனது முழு அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற உறுதியில், பிஜேபியை மீண்டும் வெற்றி பெற வைத்து, இந்திய அரசாங்கத்தை மீண்டும் கைப்பற்றியதுடன், இந்தியாவை இந்துத்துவத் தீவிரவாத நாடாக ஆக்கும் தீவிர முயற்சிகளை, இன்னும் பெருமுனைப்போடு இவ்வியக்கம் மேற்கொண்டு வருகிறது.

இந்திய அரசாங்கத்தின் மைய அதிகாரம், ஆர். எஸ். எஸ். இன் கையில் முழுமையாக இருக்க வேண்டுமானால், அந்த அரசாங்கம் சட்டத் தகுதியோடு பின்பற்றக்கூடிய அரசியலமைப்பானது, இந்து ராஷ்ட்ரியத்தின் அரசியல் அமைப்பாக இருந்தாக வேண்டும். அதைச் செயல்படுத்துவதற்கு அரசு கட்டமைப்பும், வலை அமைப்புகளும் தேவைப்படுகின்றன. அதற்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர். எஸ். உள்ளிட்ட அனைத்து அரசுத் துறைகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு இணக்கமான சட்ட அமைப்பினில் இயங்க வேண்டும்.

ஒரு சமூக அமைப்பைக் கந்தலாக்கி விட்டு, அதைப் பாதுகாப்பது என்பது வரலாற்று ரீதியாக மிகக் கடுமையான ஒன்று. சாத்தியம் இல்லாத இந்தப் பணியைத் தங்களின் 'புனித லட்சியமாக'க் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ். இதை சாத்தியப்படுத்த வேண்டும் என்றால் பாசிசம் தான் அதன் ஒரே வழி. சுதந்திரமானதும், எல்லையற்ற அதிகாரம் கொண்டதும், கட்டுப்பாடற்ற அரசு கட்டமைப்பைக் கொண்டிருந்தால் மட்டுமே பாசிசத்தை நடைமுறைப்படுத்த முடியும்.

அதற்காகவே புதிய அரசியலமைப்பை ஏற்படுத்தும் முயற்சியிலும், பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் முயற்சியிலும் முனைந்து, தற்போது அதற்கான சிறப்புப் பாராளுமன்றக் கூட்டத்தை, இந்தத் தேர்தல் நேரத்தில் கூட்டி இருக்கிறது.

இந்தியாவில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் தோன்றிய இயக்கங்களில் இடதுசாரி இயக்கங்களும் உண்டு; வலது சாரி இயக்கங்களும் உண்டு. தென்னிந்தியாவில் நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், இந்திய அளவில் இந்தியப் பொதுவுடமைக் கட்சி, டாக்டர் அம்பேத்கரின் அரசியல் கருத்தியல் ஆகியவை இடதுசாரி இயக்கங்களாக மிளிர்ந்தன. காங்கிரஸ் கட்சியும், பிற தேசியம் பேசியக் கட்சிகளும் வலதுசாரிகளாகச் செயல் பட்டன.

வலது சாரி இயக்கங்களில் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரே இயக்கம் ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான். நாடு தழுவிய, வலதுசாரி முறையில் இயங்கும், முழுமையான அதிகாரம் உள்ள அரசாங்கத்தையும், சமூக அமைப்புகளையும் கொண்டிருப்பது தான் பாசிசம் என்பதற்கான சரியான பொருள்.

அப்படியான ஓர் அரசு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டுமானால், அதற்கு முதற்கட்டமாக மக்களாட்சி முறையில் இயங்கும் அரசியல் கட்சிகள், இயக்கங்களைப் பலவீனப்படுத்த வேண்டும்; மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும்; அந்த வேலையைத்தான் அரசியல் போர்வையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும், பி.ஜே.பி. அரசியலும் செய்து கொண்டிருக்கின்றன.


சமூகத்தைக் கந்தலாக்கும் வேலையில் முதலாவது, மதத்தை அடிப்படையாகக் கொண்ட கலவரங்கள் ஆகும். இதைத் திட்டமிட்டு, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் நினைவு நாளில் (டிசம்பர் 6,1992) பாபர் மசூதியை இடித்ததன் மூலம் நாடு தழுவிய மதக் கலவரமாக மாற்றிவிட்டது, ஆர். எஸ். எஸ்.

அதைத் தொடர்ந்து வருபவைதான் ஆன்மிகத்தைப் போதிக்கின்ற இந்துத்துவ வாதிகளால் கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகள்.

குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் வன்முறை,

பசுவதைத் தடுப்பு என்ற பெயரில் இஸ்லாமியர் படுகொலைகள்,

பிற மதத்தவரிடம் நாட்டின் குடியுரிமைச் சீட்டு கேட்டு வலியுறுத்தல்,

பிற மதத்தினர்க்கு அரசுப் பணிகளும், பிற சலுகைகளும் மறுப்பு,

உணவு, உடைகளில் மதநெறி (மதவெறிக்) கட்டுப்பாடுகள்,

இந்துவாகவே இருந்தாலும் வருண, சாதி அமைப்பில் சிறுமைப்படுத்தி, அடிமைப்படுத்துதல்,

எல்லாரையும், எல்லா வகையிலும் பார்ப்பனியத்திற்கு அடிவருடிகளாக ஆக்குதல்,

முற்றிலும் தலைகீழான, சாத்தியம் இல்லாத சமூகத்தைக் காட்சிப்படுத்திக் கந்தலாக்குவது,

இவற்றையெல்லாம் கண்முன்னே நிகழ்த்திக் காட்டி மனரீதியாகவும் ஒடுக்குவது,

இதற்குப் பக்கபலமாகக் கலை வடிவங்களைக் கைக்கொள்வது,

இசை வடிவில் இஸ்லாமிய ஒழிப்பையும், ஆங்கிலேயர் ஆதரவையும் கொண்டாடும் 'வந்தே மாதரம்' பாடல்,

திரை வடிவில் காஷ்மீர் கோப்புகள், ராக்கெட்ரி, ஆனந்தமடம் போன்ற மனுதர்மம் போதிக்கும் திரைப்படத் தொகுப்புப் போர் வியூகங்களைச் சாமானிய மக்கள் மீது திணித்தல்,

ஆகிய இவையெல்லாமே பாசிசத்தின் ஆக்டோபஸ் கைகள்தான்.

"தற்போதைய இந்தியாவின் வளர்ச்சி மட்டுமே குறுகலாக இல்லை; அதன் சிந்தனை, அறிவு, மூளை எல்லாமே குறுகல்தான்" என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ரொமீலா தாப்பர்.

ஒரு நூற்றாண்டு வெறி (6)

மக்களின் கருத்தைச் சிதைப்பதில் மதவெறியைத் தூண்டிக் குழப்பம் விளைவிப்பது முதலாவது;

பொருளாதார ரீதியில் அனைத்து மக்களையும் நலிவடையச் செய்தல் இரண்டாவது.

அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் கட்டுக்கடங்காத விலை ஏற்றம்;

அனைத்துப் பொருட்களுக்குமான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு;

வங்கி நடைமுறைகளில் தீவிரக் கட்டுப்பாடும், சேவைக் கட்டணங்களும்;

பொதுமக்களின் அனைத்துக் கடன்களுக்கும் ஏறும் வட்டி விகிதம்;

அம்பானி, அதானி, மெகுல் சோக்ஷி, சந்தீப், விஜய் மல்லையா, ஜதின் மேத்தா உள்ளிட்டோருக்கு 68 ஆயிரம் கோடி கடன் ரத்து;

அதானி, டாட்டா, எஸ்ஸார் மின் உற்பத்தி நிறுவனங்களின் 35 ஆயிரம் கோடி கடன் ரத்து என்று உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஒப்புகை;

"ஒருவன் ஒருவன் முதலாளி" என்றால் அவன்தான் அதானி, "உலகில் மற்றவன் தொழிலாளி" (அடிமை) என்றால் அவன்தான் இந்தியக் குடிமகன்;

இந்தியப் பண முதலைகளுக்கு லட்சம் கோடிகளில் கடன் ரத்து, மாணவர்களுக்குக் கல்விக் கடன் ரத்து இல்லை;

நீதிமன்றங்களில் வெளிப்படையான ஆர்.எஸ்.எஸ். ஊடுருவல்;

தீர்ப்புகளில் மனுதர்மம் கோலோச்சுதல்;

ஆர்.எஸ்.எஸ். எதிர்ப்பாளர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்படுதல்;

சங்கிக் குற்றவாளிகளுக்கு விடுதலை என்று இப்படியாக அனைத்து அரசுத் துறைகளிலும், அனைத்து வகையிலும் இந்து ராஷ்ட்ரியக் கோட்பாட்டைச் செயலாக்குதல்;

மக்களைக் குழப்பி, சமுதாய இணக்கத்தைக் காலில் போட்டு மிதித்துக் கலவரங்களை ஏற்படுத்தல்; அனைத்து மக்களையும் மன, உடல் ரீதியாக எப்போதும் ஒடுக்கி வைத்தல்; இந்நிலையைத் (பாசிசத்தைத்) தொடர்ந்து நீடிக்கச் செய்தல் இவையே ஆர்.எஸ்.எஸ். இன் நூற்றாண்டுக் கொண்டாட்டக் கனவுகளாக அவர்களின் அறிவிப்பில் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது.

(தொடரும்)


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...