சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 17 April 2026

உலக சர்க்கஸ் தினம்.

     பெரியவர்களில் இருந்து சிறு குழந்தைகள் வரை சர்க்கஸை விரும்பாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்ற பதில் வரும். ஏன் என்றால் இந்த நவீன காலத்தில் கூட சர்க்கஸை பார்க்க எல்லோருக்கும் விருப்பம் இருக்கத்தான் செய்யும். 

நான் சிறுபிள்ளையாய் இருந்த காலத்தில் எங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கக்கூடிய அதாவது தினமணி டாக்கீஸ் அருகில் உள்ள திடலில் சின்னமனூர் பேமஸ் சர்க்கஸ் போட்டிருந்தார்கள். அதுதான் நான் முதலில் பார்த்த சர்க்கஸ் என நினைக்கிறேன். அது ஒப்பீட்டளவில் சிறிய சர்க்கஸ் தான். எனவே அதைவிட பிரம்மாண்டமான சர்க்கஸான ஜெமினி சர்க்கஸ் போன்ற பெரிய பெரிய சர்க்கஸ்களெல்லாம் மதுரையில் அரசரடி திடலில் நடத்துவார்கள். இரவு நேரமாய் ஆகிவிட்டால் போக்கஸ் விளக்கின் மூலமாக ஒளிவெள்ளத்தை வானத்தில் பாய்ச்சுவார்கள். அது அலையைப் போல சுற்றி வரும்போது, ​​குறைந்தது 10 கிலோமீட்டர் தூரத்திற்காவது வானத்தில் வெள்ளையாய் கோடு அலைவது தெரியும். பார்க்க வேடிக்கையாக இருக்கும். 
அது என்ன பெரிய சர்க்கஸ் சிறிய சர்க்கஸ் என்று நினைக்கிறீர்களா? ஏராளமான பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகள், பார் விளையாட்டு காரர்கள், மோட்டார் சைக்கிள் வளையத்திற்குள் சுற்றி வருபவர்கள், பபூன்கள், வித்தைகளினுடைய எண்ணிக்கையை வைத்து பெரிய சர்க்கஸ் சிறிய சர்க்கஸ் என்று சொல்லலாம். 
சர்க்கஸ் அமைக்கப்படும்போதே வேடிக்கை பார்க்க ஏராளமாய் கூட்டம் கூடும். மிகப் பிரம்மாண்டமான கூடாரங்கள், விலங்குகளுக்கென்று தனி இருப்பிடங்கள் என்று இவற்றைப் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருக்கும். 
தொலைக்காட்சிகள் வருவதற்கு முன்பு நாடகங்கள், திரைப்படங்களுக்கு இடையே சர்க்கஸ்கள் ஏராளமாக நடைபெறும்.

திரைப்படங்களில் கூட பிரபல்யமும் வெற்றியும் அடைந்த சந்திரலேகா பறக்கும் பாவை அபூர்வ சகோதரர்கள் போன்ற திரைப்படங்கள் சர்க்கஸை காட்சிப் படுத்தி வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஆகும். 

 எந்த ஊரிலும் சர்க்கஸ்கள் நிரந்தரமாக இருப்பதே இல்லை. ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஊர் விட்டு ஊர் மாறிக்கொண்டே இருக்கும். வந்த புதிதில் சுவாரஸ்யம் அதிகமாக இருக்கும் போது கூட்டம் ஏராளமாய் இருக்கும். நாளடைவில் கூட்டம் குறையும்போது அவர்களால் நடத்த முடியாமல் அடுத்த ஊரை பார்க்க கிளம்பி விடுவார்கள்
 சர்க்கஸ் நடத்தி பெரும் பொருளீட்டியவர்கள் என்று அனேகமாக யாராலும் இருக்க முடியாது. புலி வாலைப்பிடித்த கதையாக ஆரம்பித்துவிட்டத ,விட்டு விடாமல் அதையே தொடர்ச்சியாக நடத்தி நொடித்து காணாமல் போனவர்கள் தான் நிறைய பேர் உண்டு. 
இந்த சர்க்கஸ்கள் ஒழிந்ததற்கு பல காரணங்கள் உண்டு. தொலைக்காட்சிகள் என்று வந்த பிறகு எப்படி நாடகங்கள் திரையரங்குகள் மவுஸ் இழந்ததைப் போலவே சர்க்கஸ்களும் காணாமல் போக ஆரம்பித்தன. 
இரண்டாவதாக அதில் பணிபுரியக்கூடிய ஏராளமான கலைஞர்கள், பணியாளர்கள், விலங்குகள் செலவு செய்து கட்டுபடியாக முடியாமல் போனது. மூன்றாவதாக விலங்குகளின் மேல் அதீத பாசம் கொண்டு விலங்குகளை சர்க்கஸ்களில் பயன்படுத்துவதை மாண்புமிகு ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி தடை செய்த பிறகு விலங்குகள் இல்லாத சர்க்கஸ்கள் காணாமலே போயின. அதற்கடுத்தபடியாக வரவுக்கும் செலவுக்கும் கட்டுபடியாகாமல் போனது. பல்வேறு அரசு அதிகாரிகள் விஐபிகள் ஓசி பாஸில் சர்க்கஸ் பார்த்தது போன்ற காரணங்களால் சர்க்கஸில் காணாமலே போனது. 

ஆரம்ப காலத்தில் தெருவோரத்து கழைக்கூத்தாடிகளில் ஆரம்பித்து மாபெரும் சர்க்கஸ்களாக மாறி காணாமல் போய்விட்டது மக்கள் கலை இது. 


உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் மற்றும் ரசிகர்களை ஒன்றிணைத்து சர்க்கஸ் கலை பாரம்பரியத்தை கொண்டாடுகிறது , உலக சர்க்கஸ் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. . சர்க்கஸ் கலைகளின் விழிப்புணர்வு மற்றும் கலைஞர்களின் திறமையை கொண்டாடுவதை நோக்கமாக கொண்டது உலக சர்க்கஸ் தினமாகும். 

இன்று ஏப்ரல் 4, 1768ஆம் ஆண்டு இதே நாளில்தான் தற்போதைய வடிவத்திலான சர்க்கஸ் நிகழ்ச்சியை, முதன்முதலாக ஃபிலிப் ஆஸ்ட்லீ என்பவர் லண்டனில் தொடங்கினார்.

பொதுவாக, சர்க்கசின் வரலாறு பண்டைய ரோமில் தொடங்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. ஆனால், அப்போதைய சர்க்கஸ் என்பது, குதிரை, தேர் பந்தயங்கள் நடைபெற்ற அரங்கினைக் குறித்தது. சர்க்கஸ் என்ற லத்தீன் சொல்லுக்கு வட்டமான என்பது பொருளானாலும், இந்த அரங்கங்கள், நீள்வட்டமாக, சரியாகச் சொன்னால் செவ்வக வடிவத்தின் இருபுறமும் வட்டங்களைப் பொருத்திய வடிவத்தில்தான் இருந்தன. 

கி.மு.2ஆம் நூற்றாண்டு வாக்கில் அமைக்கப்பட்ட, அக்காலத்தின் மிகப்பெரிய அரங்கான, 'சர்க்கஸ் மேக்சிமஸ்' என்பதன் நீளம் 2,037 அடி, அகலம் 387 அடி என்பதுடன், ஒரே நேரத்தில் ஒன்றரை லட்சம் பார்வையாளர்கள் அமர் முடியும். இந்த அரங்கங்களில், மேற்குறிப்பிட்ட பந்தையங்களைத் தவிர, விளையாட்டுப் போட்டிகள், விலங்குகளைக் காட்சிப்படுத்துதல், பயிற்றுவிக்கப்பட்ட விலங்குகளிடையே சண்டைகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டிருந்தாலும், தர்ப்போதைய சர்க்கசைப் போன்று, இணைந்த தொகுப்பாக அங்கு நடைபெற்றதில்லை. 

குதிரையேற்றத்தில் வித்தைகளைக் காட்டிய ஆஸ்ட்லீ, அதனை வட்டவடிவ அரங்கில் நிகழ்த்தினார். மற்றவை, கழைக்கூத்தாடிகள், கயிற்றின்மீது நடப்பவர்கள், ஒரே நேரத்தில் பல பொருட்களை வீசி, மாற்றிமாற்றிப் பிடிக்கும் செப்பிடு வித்தைக்காரர்கள் பணியிலமர்த்தி, தொகுப்பான நிகழ்ச்சியை நடத்திய இவர், அந்நிகழ்ச்சிகளுக்கிடையே இடைவெளியை நிரப்ப, கோமாளிகளையும் 1770இல் நியமித்தார். 


1782இல் லண்டனில் ராயல் சர்க்கசைத் தொடங்கிய சார்லஸ் டிப்டின் என்பவர்தான் சர்க்கஸ் என்ற பெயரைச் சூட்டினார். அக்காலத்திய சர்க்கஸ்கள், நிரந்தரமான அரங்கங்களில்தான் நடைபெற்றன. எப்போதாவது வேறு ஊர்களில் நடத்தப்பட்டாலும், மேற்கூரையின்றித்தான் நடத்தப்பட்டன. 1825இல் அமெரிக்காவில் ஜோசுவா பிரவுன் என்பவர்தான், முதன்முதலாகக் கூடாரத்தில் சர்க்கசை நடத்தினார். கூடாரம் 1838இல் இங்கிலாந்துக்கு வந்ததைத் தொடர்ந்து, பல ஊர்களுக்கும் செல்வதாக சர்க்கஸ் மாறியது. 1882இல் பி.டி.பர்னத்தின் சர்க்கசில் இடம்பெற்ற மிகப்பெரிய ஆஃப்ரிக்க யானையின் பெயரான ஜம்போ என்பதே, மிகப்பெரிய என்பதற்கான ஆங்கிலச் சொல்லாகிப்போனது. சர்க்கசை முக்கியக் கலையாகக் கருதிய லெனின், அதை நாட்டுடைமையாக்கினார். சர்க்கசுக்காக ஒரு பல்கலைக்கழகத்தையே 1927இல் சோவியத் தொடங்கியது. ஜிம்னாஸ்டிக்ஸ் இணைந்த பல நிகழ்ச்சிகள் அங்குதான் உருவானவை. கதையமைப்புடன்கூடிய சர்க்கஸ், 1970களில் ஐரோப்பிய நாடுகளில் உருவானது.


பண்டைய காலத்திலிருந்து இந்தியாவில் சர்க்கஸ்களைப் போன்ற தெரு நிகழ்ச்சிகள் வந்தபோதிலும், நவீன சர்க்கஸின் தந்தை என்று அழைக்கப்படும் பிலிப் ஆஸ்ட்லி 1770-ல் விவரித்ததைப் போன்ற ஒரு சர்க்கஸ், 1880-களில் இந்தியாவில் தோன்றியது.

1879 ஆம் ஆண்டில், கியூசெப்பே கியாரினியின் ராயல் இத்தாலிய சர்க்கஸ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அவருடைய எல்லா நிகழ்ச்சிகளும் தொடங்குவதற்கு முன்பு, இந்தியாவில் ஒரு முறையான சர்க்கஸ் இல்லை எனினும் விஷ்ணுபந்த் சத்ரே என்ற கலைஞர் சியாரினியிடமிருந்து பெரும்பாலான சர்க்கஸ் உபகரணங்களை வாங்கி, இந்தியாவின் முதல் சர்க்கஸ் நிறுவனமான கிரேட் இந்தியன் சர்க்கஸை உருவாக்கினார் . அன்று தொடங்கிய சர்க்கஸ் பயணம் இந்தியாவில் பிரம்மாண்டமாக வளர்ந்து பின்னாளில் தொய்வடைந்து தற்காலத்தில் அநேகமாக காணாமலே போய் விட்டது இதை நம்பி இருந்த பல சர்க்கஸ் கலைஞர்கள் விபத்துக்குள்ளாகி, வறுமையில் வாடி தற்போது கைவிட்டு சென்றுவிட்டனர்.


 ஒரு மக்கள் கலையானது தொய்வுற்றது மிகவும் வருத்தமான விஷயம் அதை மீட்டெடுத்து மீண்டும் சர்க்கஸ் கலையை வளர்த்த அரசு மக்களுக்கு உதவ வேண்டும். 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...