சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 3 April 2026

தேர்தல் திருவிழா 8

1+ 1+1=3

1+ 1 +1= 2

1+ 1+ 1= 4

இந்த கணக்கில் எந்த கணக்கு சரி?.. முதல் கணக்கு சரி, மற்ற இரண்டும் தவறு என்றால், கல்வி கணக்கு சரி...

 ஆனால் அரசியல் கணக்கில் மூன்றுமே சாத்தியம்தான்.... 

என்ன குழப்பமாய் இருக்கிறதா? ! குழப்பம் தான்! ஆனால் அதுதான் வரலாற்று உண்மை. உதாரணத்திற்கு சில அரசியல் கட்சிகள் கூட்டணி சேருகிறார்கள். சில நேரங்களில் அவர்களுடைய வாக்கு வங்கி சரியாக செலுத்தப்பட்டு அந்த பலாபலன் அப்படியே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. 

சில நேரங்களில் பொருந்தா கூட்டணி அல்லது மக்களின் நம்பிக்கையை பெறவில்லை என்றால் அதனுடைய பலாபலன் இருக்கிற வாக்கு வங்கியை குறைக்கிறது. 

சில நேரங்களில் கூட்டணி இயல்பானதாய் அமைந்தது, மக்கள் விரும்புகிற மாதிரி ஏற்றுக்கொள்ளத்தக்கதாய், நம்பிக்கையைப் பெற்றதாய் இருக்கும் போது அதனுடைய பலாபலன் உண்மையான வாக்கு வங்கி கணக்கை விட கூடுதலான பலனைத் தரும். 

இதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். 

உதாரணத்திற்கு பொருந்தாத கூட்டணி அல்லது நம்பிக்கை பெறாத கூட்டணி என்றால் அதனுடைய பலாபலன் எப்படி குறைகிறது என்று பார்ப்போம். 

டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற்ற போது ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தேர்தலை சந்தித்தனர். ஆம் ஆத்மி கட்சியும், பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியின் பலவீனங்களை அதிகமாக மக்களிடம் பரப்பி, ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்து கடுமையாக விமர்சித்தவர்கள். அவர்கள் எதிர் எதிர் முனையில் இருந்தபோது ஆம் ஆத்மி கட்சி தனித்து நின்று பெரும்பான்மை பலம் பெற்றது .

ஆனால் பின்னாளில் அவர்கள் இணைந்து நின்ற போது மக்கள் கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த கூட்டணி பலாபலன் எதிர்வினையை ஆற்றியது என்பதை பார்த்தோம்.

 அதேபோல மேற்கு வங்காளத்தில் காலம் காலமாக காங்கிரஸ் கட்சியும் இடதுசாரி கட்சிகளும் கடுமையாக மோதிக்கொண்டனர். ஏன் ஏராளமான வன்முறை உயிரிழப்புகளை கூட சந்தித்திருக்கிறார்கள் .அவர்கள் தேர்தல் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தபோது பலாபலன் மிகவும் கேவலமாக அமைந்தது.

 அதேபோல 1980 பாராளுமன்றத் தேர்தல் அமைந்தபோது மத்தியில் அமைந்திருந்த ஜனதா கட்சி பிளவுபட்டு மக்களுடைய வெறுப்பை சம்பாதித்து எதிரெதிர் முனைகளில் திமுகவும் காங்கிரசும் கூட்டணி அமைத்தனர். ஜனதா ஆட்சிக்கு எதிரான மனோநிலை, கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது ஆகிய விடயங்களை பயன்படுத்தி மாபெரும் வெற்றி கண்டனர். 

ஆனால் அதே நேரத்தில் பின்னர் சட்டசபையை கலைத்து தேர்தலை சந்திக்கும்போது இருவரும் இடங்களை சமமாக பகிர்ந்து கொண்டு தேர்தலை சந்தித்தனர். ஒருவருக்கொருவர் அவநம்பிக்கையுடன் தான் மட்டுமே கூடுதலாக இடங்களை பெற வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்ட போது அந்த கூட்டணி கணக்கு தோல்வியில் முடிந்தது. 

ஆக இம்மாதிரி நம்பிக்கையை பெறாத போது கூட்டணி காரணி வெற்றி பெறவில்லை. பெறுவதில்லை.

1967 இல் திராவிட தமிழகத்தில் முன்னேற்றக் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுதந்திரக் கட்சி, பார்வர்டு பிளாக், தமிழரசு கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து தேர்தலை சந்தித்தனர். அன்றைய மாநில அரசு அந்த கூட்டணி வெகுவாக மக்களின் ஆதரவைப் பெற்றதால் மாபெரும் வெற்றி பெற்றது. 

அதேபோல மேற்கு வங்கத்தில் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) - CPI(M), சமுக்தா சோசலிஸ்ட் கட்சி, சோசலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்தியா (SUCI), மற்றும் பங்களா காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய முன்னணி கூட்டணி வெற்றி பெற்றது.

இதுபோன்று ஏராளமான உதாரணங்களை கூறலாம். எப்படியாயினும் இந்தியாவில் கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்திக்க எந்த கட்சியாலும் இயலாது என்ற நிலை உருவாகி விட்டது. எனவே கூட்டணி காரணி என்பது  தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாக மாறிவிட்டது.... 

தொடர்ந்து யோசிப்போமே... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...