சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 8 April 2026

தேர்தல் திருவிழா 12

 ஊடக காரணிகள் - Media factors

தேர்தல் என்று வந்து விட்டாலே அதை திருவிழாவாக மாற்றுவது ஊடகங்கள் தான். அச்சு ஊடகங்கள் ஒளிபரப்புஊடகங்கள், டிஜிட்டல் ஊடகங்கள், வெளிப்புற/போக்குவரத்து ஊடகங்கள் என எல்லாவற்றிலும் தேர்தல்களைப் பற்றிய செய்திகள் மிகவும் பரபரப்பாக கொண்டு செலுத்துகின்ற பணியை ஊடகங்கள் தான் செய்கின்றன. 

களவாணியை காந்தியாகவும்  காந்தியையே களவாணியாகவும் மாற்றக்கூடிய மகா வல்லமை படைத்த சக்தியாக ஊடகங்கள் திகழ்கின்றன.  ஊடகங்களில் ஒரு செய்தி சொல்லிவிட்டால் அதுதான் உண்மை என்று நம்பக்கூடிய எண்ணம் படித்தவர்களில் இருந்து பாமர மக்கள் வரை அனைவருக்கும் வந்துவிட்டது. 

ஊடகங்களில் கட்சி சார்ந்த ஊடகங்கள், கட்சி சாரா ஊடகங்கள் , நடுநிலை ஊடகங்கள் என்ற பெயரில் கட்சி சார்ந்த ஊடகங்கள்,  ஒருதலைபட்சமான ஊடகங்கள்  நடுநிலை ஊடகங்கள் என்று பல இன்று உலவி வருகின்றன. கட்சி சார்ந்த ஊடகங்களை பற்றி பிரச்சினை இல்லை. அது அவர்களுடைய கட்சி சார்ந்த விஷயங்களை பிரதானப்படுத்துவதும், எதிர்க்கட்சிகளை மட்டம் தட்டுவதும் அல்லது குறை கூறுவதும் அவர்களின் பணி. அது இயற்கையானது. 

ஆனால் கட்சிசாரா ஊடகங்கள் என்ற பெயரில் அல்லது நடுநிலை ஊடகங்கள் என்ற பெயரில் தாம் விரும்புகின்ற கட்சி க்கு ஆதரவாக ஒருதலை பட்சமான செய்திகளை வழங்குகின்ற போக்கு நம்மால் காண முடிகிறது. யாரை முதன்மைப்படுத்துவது, யாரை பிரதானப்படுத்துவது, யாரை மக்களுடைய கண் பார்வையில் இருந்தே படாமல் ஒழித்துக் கட்டுவது. போன்ற அதி நேர்மையான?! வேலைகளை ஊடகங்கள் செய்து வருகின்றன. காசுக்காகவோ அல்லது பிற காரணங்களுக்காகவோ அவ்வாறான பணியை அவர்கள் செய்து வருகிறார்கள். 

அது தவிர ஊடகங்களில் ஊழலை பற்றிய ஏராளமாய் செய்திகள் வந்து குவிவதை பார்க்கிறோம். தேர்தல் முடிவுகளையே அல்லது தேர்தலின் போக்கையே தீர்மானிக்கக் கடிய அளவிற்கு அந்த காலத்திலிருந்து இந்த காலம் வரை அவ்வப்போது ஏதேனும் பூதாகரமான ஒரு விஷயத்தை கிளப்புவதும் பிற்காலத்தில் அவற்றை மறைத்து விடுவதும் அல்லது மறக்கடிக்க செய்வதுமான பணியை செய்வதும் ஊடகங்கள் தான் செய்கின்றன.

 புலனாய்வு இதழியல் என்பது, பொதுமக்களுக்குத் தகவல்களை அளிக்கவும் பொறுப்புக்கூறலை உறுதி செய்யவும், மறைக்கப்பட்ட உண்மைகள், ஊழல் மற்றும் முறைகேடுகளை ஆழமாக ஆராய்ந்து வெளிக்கொணரும் ஒரு சிறப்பு வாய்ந்த செய்தி சேகரிப்பு வடிவமாகும்.இவ்வடிவை பயன்படுத்தி தேர்தல் அரசியலில் சில கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிரான பிரசாரத்தை கொண்டு செலுத்தி வெற்றியும் கண்டுள்ளனர். 

ஒரு காலத்தில் முந்தரா ஊழல் என்று சொல்லப்பட்டதிலிருந்து 2ஜி ஸ்பெக்ட்ரம் என்று ஆரம்பித்து இன்று ரஃபேல் விமான ஊழல் வரை தேவைப்படுகின்ற அளவுக்கு அவற்றை பிரதானப்படுத்துவதும் அல்லது மூடி மறைப்பதுமான பணிகளை ஊடகங்கள் செய்வதை பார்க்கிறோம். அவை பல தேர்தல் முடிவுகளை பெருமளவுக்கு பாதிப்பதை பார்க்கிறோம் அதேபோல கருத்துக்கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பினை செய்யக்கூடிய பணியையும் ஊடகங்கள் தான் செய்து வருகின்றன 

"நான் ஜெயிக்கிற கட்சிக்கு தான் எப்போதுமே ஓட்டு படுவேன்" என்று சொல்லுகின்ற மனப்பாங்கு உடைய  சில அதி மேதாவி வாக்காளர்கள் இருக்கிறார்கள். அம்மாதிரியான அறிவாளிகள் கருத்துக் கணிப்புகளின் தன்மைக்கு ஏற்ப வாக்களிக்கிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட சதவீதம் தேர்தலை பாதிக்கிறது. 

மேற்கூறிய எல்லாம் அச்சு ஊடகங்கள், ஒளிபரப்பு ஊடகங்களுடைய பணி. 

டிஜிட்டல் ஊடகம் என்று சொல்லப்படக்கூடிய சமூக ஊடகம் திட்டமிட்டு மக்கள் மத்தியில் தமக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யக்கூடிய பணியை செய்து வருகிறது. வேண்டுமென்றே புரளியை கிளப்புவதும், பொய்யான செய்திகளை பரப்புவதும், திசை திருப்புவதும், தவறான விவரங்களை தருவதுமான வேலைகளை சமூக ஊடகங்கள் செய்கின்றன. 

அதே நேரம் இன்னொரு பக்கம் இந்த பலம் வாய்ந்த அச்சு ஒளிபரப்பு ஊடகங்கள் மூலம் சொல்ல முடியாத நல்ல கருத்துக்களை, அறிவியல் கருத்துக்களை, அறிவார்ந்த விடயங்களை பரப்புவதற்கு சமூக ஊடகங்களை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலைமையும் இருக்கிறது. 

எது எப்படியோ தேர்தல் முடிவுகளை பாதிப்பதிலே ஊடகங்கள் மிக முக்கிய காரணியாக தற்காலம் செயல்படுவதை நம்மால் காண முடிகிறது...


இன்னும் யோசிப்போமே... 

1 comment:

  1. பாவம் மக்கள்….. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் / மெய்ப்பொருள் காண்ப தறிவு. நம் மக்களுக்கு மறதி ஆயிற்றே. அ கோ சூரி.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...