சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 9 April 2026

தேர்தல் திருவிழா 13

 இதர காரணிகள் - Other factors .

 தேர்தல்களை தீர்மானிக்கும் இதர காரணிகளில் முக்கியமானது பணம்.

 பணம் என்றவுடன் எல்லோரும் நினைப்பது வாக்காளர்களுக்கு லஞ்சமாக கொடுக்கின்ற பணம் என்று நினைப்பார்கள். அது ஒரு முக்கியமான காரணி தான். வாக்காளர்களுக்கு பணமளிப்பதன் மூலம் வெற்றி வாய்ப்பை தேடுகின்ற வேட்பாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். 

அவை பெரும்பாலும் மிகப்பெரிய கட்சிகள், ஆளும் கட்சி, பிரதான எதிர்க்கட்சிகள் பணம் படைத்த கட்சிகள் மட்டும் தான் செய்வார்கள்.

 தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிந்து யாரும் பணம் கொடுப்பதில்லை. சிறிய கட்சிகள் பணம் கொடுப்பதில்லை என்றால், அதற்கு நேர்மை மட்டும் காரணம் இல்லை. கொடுப்பதற்கு வசதி இல்லை என்பது தான். வாய்ப்பு இல்லாததால் யோக்கியமாய் இருக்கிறேன் என்று சொல்வதைப் போலத்தான் அது.

 இப்பொழுதெல்லாம் வாக்காளர்களே கட்சிகளிடம் பணம் கொடுக்கவில்லையா என்று கேட்கின்ற காலமாக மாறிவிட்டது. பணம் வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்று பெருமிதமாக பணம் பெறுவதை மறுக்கின்ற வாக்காளர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். 


இது ஒரு பக்கம் இருந்தாலும் தேர்தல் செலவுகள் என்பது மிக பிரம்மாண்டமாக மாறி வருகிறது. வேட்பு மனு தாக்கலில் ஆரம்பித்து, பிரச்சாரம், பேரணி, மக்களை சந்தித்தல் என்று ஏராளமாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.  ஒரு சிறிய உதாரணத்திற்கு சொல்வதானால் ஒரு சட்டமன்றத் தேர்தல் தொகுதிக்கு குறைந்தது 200 வாக்குசாவடிகள் கிடைக்கும். ஒரே ஒரு நாள் கணக்கு மட்டும் சொல்லுகிறேன். யோசித்துப் பாருங்கள். தேர்தல் நடக்கும் அன்று மட்டும் வாக்குச்சாவடிக்குள் பூத்து ஏஜென்ட் மாற்றுஏஜென்ட் கட்சி சார்பாக நியமிப்பார்கள். அதேபோல எல்லா பூத்துகளிலும் குறைந்தது 20 தொண்டர்களாவது நின்று கொண்டு தங்கள் கட்சிக்கு வாக்களிக்க இறுதி கட்டமாக வாக்காளர்களிடம் கேட்பார்கள். மகாத்மா காந்தியே தேர்தலில் நின்றாலும், இவர் தான் மகாத்மா காந்தி,இவர் நல்லவர், இவருக்கு வாக்களியுங்கள் என்ற கட்சிக்காரர்கள் நின்று வாக்கு கேட்க வேண்டும். அப்படி யாரும் நின்று கேட்கவில்லை என்றால் அந்த வேட்பாளருக்கு சல்லி மரியாதை கூட இருக்காது. அப்படி என்றால் 200 பூத்துகளுக்கு குறைந்தது 10 பேர் என்று வைத்துக் கொண்டால் கூட 2000 பேருக்கு டீ காபி ஒரு வேலை சாப்பாடு ஆவது வேட்பாளர் செலவு செய்ய வேண்டும். குறைந்தது 200 ரூபாய் செலவு செய்தால் கூட நான்கைந்து லட்சம் செலவாகும்... ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் ஒரு கொட்டகை போட்டு  அலுவலகம் அமைத்து வேலை செய்தால் தான் தேர்தலில் நிற்பதே தெரியும். இது மாதிரி ஒரு நாள் கூத்துக்கே நிறைய பணம் இருக்கும். அப்படி என்றால் ஒட்டுமொத்த தேர்தலுக்கும் விளம்பர போஸ்டர் கட்சிகளுக்கு ஆள் சேர்ப்பது போன்ற தொண்டர்களுக்கு பைசா கொடுப்பது போன்ற எந்த ஒரு கட்சிக்கும் எவ்வளவு செலவாகும். எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் செலவு செய்யாவிட்டால் வாக்காளர்களிடம் சென்று எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது.

 வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கிற கணக்கைச் சேர்த்தால் எங்கோ சென்று விடும்.  தேர்தலில் பணம் என்பது மிக முக்கியமான காரணி.

 அதேபோல சினிமா கவர்ச்சி என்பது இன்று அரசியலில் ஒரு பெரிய சக்தியாக மாறிக் கொண்டிருக்கிறது. தலைவர்களை வீதியில் தேடுவதை விட்டுவிட்டு மக்கள் திரையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலம் சினிமாவில் நல்லவனாக, வல்லவனாக, அசகாய சூரனாக காட்சியளிப்பவர் திடீரென்று  ஒரு ஆசை வந்து அரசியலில் குதிக்கிறார். இதுவரை சமூகத்தைப் பற்றி அவருடைய பார்வை என்ன, அவர் என்ன சாதித்தார் என்று பலரும் யோசிக்காமல் அந்த சினிமாவில் கிடைத்த பிரபல்யத்தை வைத்து வாக்களிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது. அவர் இதுவரை எந்த பிரச்சினைக்காவது கருத்து சொல்லியிருக்கிறாரா அல்லது நேர்மையான குடிமகனாக வரியாவது கட்டி இருக்கிறாரா என்று கூட பார்ப்பதில்லை. திரைப்படத்தின் நல்லவர் என்றால் மிக வாழ்க்கையில் நல்லவர். திரைப்படத்தில் வில்லன், கெட்டவர் என்ற நிஜ வாழ்க்கையிலும் அவர் கெட்டவர் என்ற ஒரு மடத்தனமான சிந்தனை உருவாகி இருக்கிறது.

 ஆந்திர மாநிலத்தில் திடீரென்று அரசியலில் புகுந்த என்டி ராமராவ் மக்களுக்கு நிஜ ராமனாக, கிருஷ்ணனாகவே காட்சி அளித்தார். அவரும் முதலமைச்சரானார். இவரைப் போலவே நிறைய பேர் அரசியலில் புகுந்து மோதிக் கொண்டிருக்கிறார்கள். 

இது தவிர பல இடங்களில் வேட்பாளர்களின் நிறை குறைகள், உள்ளூர் அரசியல், கோஷ்டி பூசல்கள், போட்டி வேட்பாளர்கள், காலை வாரி விடுதல், இவையெல்லாம் கூட தேர்தலை தீர்மானிக்கக் கூடிய காரணிகளாக அமைந்து விடுகின்றன. 

2 comments:

  1. வறுமையை அகற்ற வேண்டும்.பேராசையை துறக்க வேண்டும்……சாத்தியமா?!!! அ கோ சூரி.

    ReplyDelete
  2. மாற்று க்கு எதை தேர்வு‌ செய்யலாம்

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...