சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 10 April 2026

வேடிக்கை பார்ப்பவன் பெரும் குற்றவாளி

நம் நாட்டில் ஒரு தத்துவம் இருக்கிறது " ராவணன் ஆண்டாலும், ராமன் ஆண்டாலும் எனக்கு ஒன்றும் கவலை இல்லை" 

உலகம் எக்கேடும் கெட்டுப் போகட்டும். எப்படியாவது நானும், என் குடும்பமும், என் இனமும், அப்புறம் என் ஊரும், அப்புறமாக எனது நாடும் நல்லா இருக்கட்டும் என்ற சுயநல கோட்பாட்டின் வடிவமே இது.

 "எங்கேயும் நிகழும் அநீதி, எல்லா இடங்களிலும் உள்ள நீதிக்கு ஓர் அச்சுறுத்தலாகும். ஏனெனில், நாம் பரஸ்பரத் தொடர்புகளைத் தடுக்க முடியாத வலைப்பின்னலில் சிக்கியுள்ளோம்." — மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் (நீதி குறித்து)... 

எந்தவொரு அநீதிச் செயலும் தனித்து நிகழ்வதில்லை என்பதை இந்த மேற்கோள் நமக்கு நினைவூட்டுகிறது. ஒருவரின் உரிமைகள் பாதிக்கப்படும்போது, ​​அது அனைவராலும் தாக்கப்படுகிறது. ஏனெனில், நமது வாழ்க்கை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. நியாயம் சவாலுக்கு உள்ளாக்கப்படுவதை நாம் எங்கு கண்டாலும், விழிப்புடன் இருக்கவும், குரல் கொடுக்கவும், அதனைப் பாதுகாக்கவும் மார்ட்டின் லூதர் கிங் நம்மை வலியுறுத்துகிறார்.

அநீதி நடைபெறும் போது வேடிக்கையாளனாக இருந்து விடாமல் நீதியை காப்பதற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதே லூதர் கிங்குடைய கருத்து. 

ஜெர்மனியில் நாசிசம் தலையெடுத்து ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன் சோசலிஸட்கள், கம்யூனிஸ்டுகள் ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்பவர்கள் யூதர்கள் என்று ஒருவரையும் பாக்கி விடாமல் எல்லோரையும் கைது செய்து படுகொலை செய்து கொண்டிருந்தான். அநியாயமாக சுற்றி இருந்த நாடுகளை எல்லாம் படை எடுத்து துவம்சம் செய்து கொண்டிருந்தான். அவ்வாறு அவன் அக்கிரமக்காரனாக நடந்து கொண்டதற்கு அவனுக்கு கிடைத்த தைரியம் உலகில் பெரும்பாலோர் அநீதி நடக்கும்போது வேடிக்கை பார்ப்பவர்களாகவே இருந்து விட்டார்கள் என்பதினால் தான்...

 அது பற்றி பிரபல்யமான கவிதை இது.. 

"முதலில் அவர்கள் சோசலிஸ்டுகளைத் தேடி வந்தார்கள், நான் பேசவில்லை—ஏனென்றால் நான் ஒரு சோசலிஸ்ட் அல்ல.

பிறகு அவர்கள் தொழிற்சங்கவாதிகளைத் தேடி வந்தார்கள், நான் பேசவில்லை—ஏனென்றால் நான் ஒரு தொழிற்சங்கவாதி அல்ல.

பிறகு அவர்கள் யூதர்களைத் தேடி வந்தார்கள், நான் பேசவில்லை—ஏனென்றால் நான் ஒரு யூதன் அல்ல.

பிறகு அவர்கள் என்னைத் தேடி வந்தார்கள்—எனக்காகப் பேச அங்கே யாருமே இல்லை."

—மார்ட்டின் நீமோலர். 


இப்போது டிரம்ப் இன்னும் பைத்தியக்காரன், அதே மாதிரி தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். வெனிசுலாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சித் தலைவரையுமான மதுரோவையும், அவரது மனைவியையும் கைது செய்து கொண்டு போனான். உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. ஈரானில் உச்சபட்ச ஆட்சித் தலைவரை படுகொலை செய்தான். குழந்தைகள், பெரியவர், பெண்கள், நோயாளிகள் என்று யாரையும் விட்டு வைக்காமல் பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழகங்களில், மருத்துவமனைகளில் குண்டு போட்டுக் கொண்டிருந்தான். உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. இவனது கூட்டாளியும், இன்னொரு யுத்த வெறியனும், பைத்தியக்காரனுமான நெதன்யாகு  பாலஸ்தீனத்தில் லெபனானில் சிரியாவில் என எல்லா இடங்களிலும் பொதுமக்களை கொன்று பொது சொத்துக்களை நாசம் செய்து கொண்டிருக்கிறான். உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. 

நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும். 

வேடிக்கை பார்ப்பவர்கள் குற்றவாளிகளை விட கேவலமானவர்கள்.....

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...