சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 17 May 2026

"கஜானா காலி" யா என்ன?!

 பொதுவாகவே ஆட்சி மாற்றங்கள் நிகழும் போதெல்லாம், ஆட்சிக்கு வந்தவர்கள் சொல்லும் வசனம் இது தான் " கஜானா காலி " செய்து விட்டு போய்விட்டார்கள். அல்லது நிறைய கடன் வைத்து விட்டு போய்விட்டார்கள்.

இது உண்மையா பொய்யா என்று நாம் விவாதிக்க போவதில்லை. அந்த மலிவான அரசியல் நமக்கு தேவையில்லை. 

சற்று அறிவுபூர்வமாக தான் யோசிப்போமே. அந்த காலத்தில் அரண்மனை அரசு பொக்கிஷங்களில் ஏராளமாய் தங்கம் வெள்ளி நவரத்தினங்கள் என சேமித்து வைக்கப்பட்டு இருந்ததாக ஏராளமான திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம், இலக்கியங்கள், நாவல்களில் படித்திருக்கிறோம். 

முன்பெல்லாம் அரசாங்க கருவூலம் என்பது சேமித்து வைக்கக்கூடிய இடமாகத்தான் இருந்தது. அது சரி அரசாங்கத்திற்கு நிதி எங்கு இருந்து வரும். 

அரசு படையினர் வெளிநாடுகளுக்கு சென்று பொருட்களை கொண்டு வந்து கருவூலத்தில் சேர்ப்பார்கள். அது என்ன? சென்று.... கொண்டு.... மேலொன்றும் இல்லை. படைகள் ஆயுதபாணியாக பிற நாடுகள் மீது படை எடுத்து சென்று அங்குள்ள செல்வங்களை எல்லாம் திரட்டி, திரட்டி என்ன?! சூறையாடி, களவாடி கொண்டு வந்து தங்கள் நாட்டு கருவூலத்தில் சேர்ப்பார்கள். இவர்களுக்கு அடிபணிந்த மற்ற மன்னர்கள் கப்பமாக பொன்னும் பொருளும் கொண்டு வந்து சேர்ப்பார்கள் .அது தவிர மக்களிடம் வசூலிக்கப்படும் வரி, அவ்வளவுதான்.....

 செலவு என்பது என்ன ?வேலை பார்ப்பவர்களுக்கு சம்பளம், ராஜாக்கள் ,மந்திரிமார்கள் குடும்பத்தாருக்கு ஆடம்பர செலவுகள். இவர்கள் சென்று வர ராஜபாட்டைகள் கட்டுவது. அது ஒன்றும் அல்ல ..ராஜபாதை தான். அந்த ராஜபாதையில் அரசு தலைவர்கள் படைகளைத் தவிர யாராலும் செல்ல முடியாது. பொதுமக்கள் செல்வதற்கு தனி பாதை இருக்கும். அது தவிர அரண்மனைகள், மாளிகைகள், கோயில்கள் கட்டுவது... போனால் போகிறது என்று குளம், ஏரிகள் வெட்டுவது அவ்வளவுதான். ராஜாக்கள் புகழ் பாடக்கூடியவர்களுக்கு பரிசுகள், இவர்களுக்கு துர்புத்தி கூறக்கூடிய குருமார்கள், அர்ச்சகர்கள், அல்லக்கைகளுக்கு நிவேதனங்கள், பரிசுகள் என்று வாரி வழங்குவது.. அவ்வளவுதான்.

வெளிநாட்டினர் படையெடுத்து வரும்போது அரசனின் அரண்மனையை தரைமட்டமாக்கி கஜானாவில் உள்ள செல்வங்களை கவர்ந்து செல்வார்கள். இதை தவிர்ப்பதற்காக தான் ஏராளமான பொன், ஆபரணங்கள், நவரத்தினங்களை கோவில்களில் மன்னர்கள் பதுக்கி படையெடுப்புகள் நிகழும் போது கோவில்களை கை வைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான். ஆனாலும் பல இடங்களில் போர்க்காலங்களில் அரண்மனையை சூறையாடியது போதாதென்று கோவில்களில் செல்வத்தை கவர்ந்தது மாற்று மத எதிரி மன்னர்கள் மட்டும் அல்ல, சொந்த மதத்தை சேர்ந்த மன்னர்களும் தான் . செல்வத்தைக் கவரும் போது கோயில், அரண்மனை என்று பிரித்து பார்ப்பார்களா?! 

கஜினி முகமது 14 முறை படையெடுப்பு நடத்தி சோமநாதர் ஆலயத்தினை சூறையாடி செல்வத்தை அள்ளிச்சென்றிருக்கிறான். 

11 ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹர்ஷதேவா என்ற காஷ்மீர் மன்னன் இந்துக்கோவில்களில் கொள்ளையடித்தான். இவன் கோவில் விக்கிரகங்களையும், செல்வத்தையும் கொள்ளையடிக்க தனி அதிகாரியையே நியமித்திருந்தான் என்று வரலாறு கூறுகிறது. 


ஆனால் கோவில்களில் சூறையாடப்பட்டதென்பது இன்றைக்கு கூட அரசியலுக்கு பயன்படுகிறது.. என்பதுதான் கசப்பான உண்மை.. போகட்டும்  அந்த பழைய கதைகள். 

அரசின் வரவு செலவுகள் எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டன என்பது பற்றி சுவாரசியமான பல விஷயங்கள் உள்ளன. ரோமானியர்கள் காலத்தில் ராணுவம், பொதுப் பணி, என்று இனம் பிரித்து வருடத்திற்கான செலவுத் தொகைகளைத் தோல் பைகளில் தங்க நாணயங்களாக கட்டி வைப்பார்கள். பட்ஜெட் என்பதற்கு தோல்பை என்ற பொருள்.

பிரெஞ்சு மொழியில் Bougette என்றால் "சிறிய தோல் பை" (சிறிய தோல் பர்ஸ்) என்ற பொருள். 

ஆரம்பத்தில் இங்கிலாந்து மற்றும் பிரான்சில், நிதி மற்றும் வரவு-செலவு ஆவணங்களை ஒரு சிறிய தோல் பையில் வைத்து எடுத்துச் செல்லும் வழக்கம் இருந்தது. இந்தப் பையைக் குறிக்கும் வார்த்தையே காலப்போக்கில் நிதித் திட்டங்களை (வருவாய் மற்றும் செலவு) குறிக்கும் சொல்லாக மாறியது.

ஒரு அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் என்பது அந்த அரசாங்கத்தின் எதிர்பார்க்கப்படும் வளங்கள் மற்றும் செலவினங்களின் சுருக்கம் அல்லது திட்டமாகும். அரசாங்க வரவு செலவுத் திட்டங்களில் மூன்று வகைகள் உள்ளன: செயல்பாட்டு அல்லது நடப்பு வரவு செலவுத் திட்டம், மூலதன அல்லது முதலீட்டு வரவு செலவுத் திட்டம் மற்றும் ரொக்கம் அல்லது பணப்புழக்க வரவு செலவுத் திட்டம்.

அரசின் வரவு என்பது பெரும்பாலும் வரிகளின் மூலம் தான். ஆனால் அது மட்டும் இல்லை... 

வரி வருவாய் என்பது நேரடி வரிகளான வருமான வரி, நிறுவன வரி போன்றவை.மறைமுக வரிகளான சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), சுங்க வரிகள் போன்றவை ஆகும். 

வரி அல்லாத வருவாய் என்பது வரிகள் மூலம் அல்லாமல் அரசு வழங்கும் வங்கி சேவைகள் மூலம் அரசுக்கு வருவாய் கிடைக்கும். கட்டணங்கள் மற்றும் அபராதங்கள் எனப்படும் அரசு வழங்கும் சேவைகளுக்கான கட்டணங்கள் மற்றும் போக்குவரத்து மீறல்களுக்கான அபராதங்கள். இலாபம்.

 மூலதன வரவுகள் என்பது இந்த வரவுகள் அரசின் பொறுப்புகளை அதிகரிப்பவை அல்லது அரசின் சொத்துக்களைக் குறைப்பவையாகவோ இருக்கும்.

இந்திய ரிசர்வ் வங்கி, வெளிநாட்டு அரசுகள் அல்லது சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து அரசு வாங்கும் கடன்கள் மூலமும் வரவுகள் உண்டு. 

இது தவிர அரசின் சொத்துக்களை விற்பனை (Disinvestment) செய்வதன் மூலமும் வருவாய் உண்டு.பண்டித ஜவஹர்லால் நேரு காலத்தில் மத்திய அரசு ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி தனது சொத்துக்களை வருமானமாக சேர்த்து வைத்திருந்தது. தற்போதைய அரசு இவற்றை விற்பதற்கென்று ஒரு துறையை உருவாக்கி கிட்டத்தட்ட அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் விற்று செலவு செய்தது குறிப்பிடத்தக்கது.

 அரசின் செலவுகள் என்பது மக்களின் சமூக மற்றும் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றவும், நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் அரசாங்கத்தால் செய்யப்படும் நிதி ஒதுக்கீடுகள் ஆகும். 

இவை பொதுவாக வருவாய் செலவினம் மற்றும் மூலதனச் செலவினம் என இரு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

முதல் வருவாய் செலவினங்கள் நாளது செயல்பாடுகள் மற்றும் பொதுச் சேவைகளுக்கான தொடர்ச்சியான செலவுகள் இதில் அடங்கும்.

அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வுக்கால பலன்கள். உணவு, உரம் மற்றும் சமூக நலத் திட்டங்களுக்காக மக்களுக்கு வழங்கப்படும் மானியங்கள்.இதுதவிர தொழில் வளர்ச்சிக்கு வழங்கப்படும் மானியங்கள். அரசு வாங்கிய கடன்களுக்குச் செலுத்தப்படும் வட்டித் தொகை. மக்கள் செலுத்தும் சிறுசேமிப்புக்கு வழங்கப்படும் வட்டி உட்பட... 

இரண்டாவதாக மூலதனச் செலவினங்கள் நீண்டகால பலன்களைத் தரும் சொத்துக்களை உருவாக்கவும், உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் செய்யப்படும் முதலீடுகள் ஆகும்.

சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற புதிய போக்குவரத்து கட்டமைப்புகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கு செலவிடப்படும் புதிய பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டுதல் மற்றும் மேம்படுத்துதல், எரிசக்தி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி, மின்சார உற்பத்தி, குடிநீர் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவற்றிற்கு செலவிடப்படுபவை ஆகும். 

அரசின் செலவினம் ஏன் முக்கியம்?பொருளாதார வளர்ச்சி அடைந்திட உள்கட்டமைப்பு முதலீடுகள் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.சமூகப் பாதுகாப்பை உறுதி செய்திட மானியங்கள் மற்றும் இலவச சேவைகள் மூலம் ஏழை மற்றும் நலிவடைந்த மக்களுக்கு உதவி கிடைக்கிறது.

வருவாய் செலவினங்கள் என்பது தொடர்ந்து வரும், போகும்... எல்லா மாநிலத்திலும் இது அளவுக்கு அதிகமாக இருக்கும்.,,

தமிழ்நாட்டின் தற்போதைய கடன்  2025 படி - 9.30 லட்சம் கோடி..,

இதற்கு முந்தைய அதிமுக கிட்ட இருந்து பொறுப்பு ஏற்கும்போது கடன் உத்தேசமாக 4.85 லட்சம் கோடி

அதுக்கு வட்டி உத்தேசமாக 1.57 லட்சம் கோடி 

அதாவது அதிமுக ஆட்சியில 6.42 லட்சம் கோடி (நாம கட்டின வட்டியும் சேர்த்து)

முந்தைய திமுக இப்போது உள்ள திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு வாங்கினது உத்தேசமாக 2.88 லட்சம் கோடி... 

இவையாவும் உதாரணங்களே. கடன் உலகில் வாங்காத நாடு கிடையாது. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் இல்லாத நாடும் கிடையாது. கஜானாவில் பணத்தை கொண்டு வந்து நிரப்பித்தான் செலவு செய்து வரும் அரசு எந்த உலகில் எங்கு தேடினாலும் கிடைக்காது. 

கேள்வி ஒன்றே ஒன்றுதான். யாரிடம் இருந்து நிதி திரட்டுகிறோம். யாருடைய நலனுக்காக செலவிடுகிறோம் என்பதுதான். பெரும்பாலான மக்களுக்காகவா, சிறு எண்ணிக்கையிலான பணக்காரர்களுக்கா?! 

இது புரிந்தால் போதும். புரியாமல் கஜானா காலி, கடன் அதிகம் என்று புலம்பினால் ஏமாற்றுகிறார்கள் அல்லது தற்குறி என்று பொருள்... 

1 comment:

  1. நீங்கள் யாரையும் சப்போர்ட் செய்யவில்லையே? அ கோ சூர்யா.

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...