முன்பெல்லாம் தேர்தல் என்றாலே திருவிழாக்களை போல இருக்கும். இப்பொழுதோ தேர்தல் என்றால் அதிபயங்கரமான சூதாட்டமாக மாறிக் கொண்டிருக்கிறது.
கடந்த 75 ஆண்டுகளாக இந்தியா நாடாளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி நிறுவனங்களுக்கான ஏராளமான தேர்தல்களை சந்தித்து இருக்கிறது. தேர்தல்கள் துவங்கிய காலத்தில் இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் வளர்ச்சி அடையாத சிறு குழந்தையை போல் தான் இருந்தது. ஆனால் மிக முதிர்ச்சியாக தேர்தல்களை சந்தித்தது வரலாற்று உண்மை.
தேர்தல்கள் துவங்கிய காலத்தில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், பட்டதாரிகள் நிலச்சுவான்தார்கள், வரிகட்டியவர்கள் போன்றவர்கள் மட்டுமே வாக்களிக்கும் முறையிலிருந்து, 21 வயது முதிர்ந்த அனைவரும் வாக்களிக்கக் கூடிய முறை வந்தபோது, இந்தியாவில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் சதவீதம் மிகக் குறைவு. பொருளாதார வளர்ச்சி என்பது மிக குறைவாக இருந்த நிலை. பெரும்பாலும் விவசாயிகள் விவசாயக் கூலிகள், ஆலைத் தொழிலாளர்கள், சாதாரண வேலை பார்ப்பவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என்று 95 சதவீதம் மிக சாதாரண நிலையில் இருந்தவர்கள் தான் வாக்களித்து தேர்தல்களை சந்தித்தனர்.
அகில இந்திய கட்சிகளில் இருந்து உள்ளூர் கட்சிகள் வரை தேர்தல்கள் ஒரு அமைப்பு ரீதியான கட்டமைக்கப்பட்ட முறையில் தான் தேர்தல்களை சந்தித்து வந்தார்கள். தேசிய கட்சியாயினும் சரி, மாநில கட்சியாயினும் சரி, உயர்நிலைக் குழுக்கள், அடுத்த நிலைக் குழுக்கள், கீழ்மட்ட அமைப்புகள் என்று பல்வேறு நிலைகளில் திட்டமிட்டு தேர்தல்களை சந்தித்தார்கள்.
ஒரு தேர்தல் என்று வந்தால் தங்கள் கட்சிக்கென்று ஒரு தேர்தல் அறிக்கை, அதற்கான நிதி ஒதுக்கீடு, வேட்பாளர்கள் வாக்காளர்களை சந்திப்பது, தேர்தல்களை சிறப்பாக நடத்தி ஆட்சியை கைப்பற்றுவது அல்லது பொறுப்புக்கு வருவது என்றுதான் தேர்தல்கள் நடந்து வருகின்றன.
தேர்தல் அறிக்கை தயாரித்ததும் நடைமுறை யதார்த்த விஷயங்கள், அதை தாண்டி மக்களை கவர்கிற அம்சமாக வாக்குறுதிகள் என்று உருவாக்கி தேர்தல்களை சந்தித்தார்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு ஓரளவுக்கு முயற்சி செய்வது, நிறைவேற்ற முடியவில்லை என்றால் மக்களை சந்தித்து பதில் சொல்ல வேண்டும் என்ற பயம் கொஞ்சமாவது இருந்தது. அதேபோல வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது, அவர் மக்கள் செல்வாக்கு, கட்சிக்கும் மக்களுக்கு அவர் ஆற்றிய சேவைகள், சாதனைகள், வயது, கல்வி, அனுபவம், யோக்கியதை போன்ற பல்வேறு விஷயங்கள் அலசி ஆராயப்படும். அதன் பிறகு உயர்மட்ட குழுவோ அல்லது கட்சித் தலைமையோ வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து அறிவிப்பார்கள். பொதுவுடமைக் கட்சிகளை பொறுத்தமட்டில் கட்சி தான் வேட்பாளர்களுக்கு செலவு செய்து தேர்தலை சந்தித்தது. பிற கட்சிகள் கட்சி நிதியிலிருந்து, வேட்பாளருடைய சொந்த நிதியிலிருந்து செலவு செய்து தேர்தல்களை சந்தித்தார்கள். வேட்பாளர்கள் தனது சொந்த பணத்தில் இருந்து நிறைய செலவு செய்தால் தேர்தலில் சந்தித்தால் அதை மீண்டும் சம்பாதிப்பது எப்படி என்று யோசிப்பார். அங்கிருந்துதான் ஊழல் ஆரம்பமாகும் கட்சியும் தேர்தல்களை சந்திப்பதற்கு நிதி திரட்டல்கள் செய்யும்போது ஊழல் துவங்கும்.
அது ஒரு புறம் இருக்க தேர்தல்கள் வெற்றி பெற வாக்காளர்களை சந்திப்பது என்பது ஒரு மிகப்பெரிய விடயமாக இருந்தது. வாக்காளர்களை நேருக்கு நேராக வீடு வீடாக சென்று சந்தித்து வாக்கு கேட்கும் முறை என்பது மிக நீண்ட காலமாக இருந்து வந்தது. அதற்கு ஏராளமான படை அணிகள், கட்சி கட்டமைப்பு, தொண்டர்கள் எல்லா கட்சிகளுக்கும் இருந்தன. பெரிய கட்சிகளுக்கு மிக அதிகமாக இருந்தது. சிறிய கட்சிகள் அவர்களுடைய கட்டமைப்புக்கு தகுந்த மாதிரி தேர்தல்களை சந்தித்தார்கள்.
வெகு சொற்ப எண்ணிக்கையிலான வாகனங்களை கொண்டு பிரச்சாரம் செய்வது, சுவர் விளம்பரங்கள் செய்வது, சுவரொட்டிகள் மூலமாக விளம்பரம் செய்தல், துண்டு பிரசுரங்களை வாக்காளர்களுக்கு வழங்கும் பிரச்சாரம் செய்வது காலம் காலமாக நடைபெற்று வந்தது.
ஊடகங்கள் என்ற முறையில் பத்திரிகைகள் தான் பெரும் பகுதி பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டன. சில கட்சி சார்ந்த பத்திரிகைகளும், பெரும்பகுதி கட்சி சாராத நடுநிலை என்ற போர்வையில் ஆதரவு அளிக்க கூடிய கட்சிகளை ஆதரிக்கும் பிரச்சாரம் காலம் காலமாக நடைபெற்றது. பெரிய அளவுக்கு செய்தித்தாள்கள் வாங்கும் வசதி மக்களுக்கு இல்லாததால் வாசகசாலைகளிலும் தேநீர் கடைகளிலும் போடப்பட்டிருக்கும் தினசரி செய்தித்தாள்கள், வாரந்திர செய்தி பத்திரிகையை மக்கள் படித்து தெரிந்து கொள்வார்கள். இவ்வளவு தான் அன்று நடந்த பிரச்சாரம்.
1977 க்கு பிறகு தான் அரசு வானொலியில் ஊடகங்களில் அனைத்து கட்சிகளும் நேரம் ஒதுக்கி தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதித்தார்கள். இதெல்லாம் இன்றைய தலைமுறைக்கு தெரியாத பழைய கதைகள். முதன்முதலாக தனியார் தொலைக்காட்சிகள் மூலமாக அதன் மூலம் தங்களது பிரச்சாரத்தை மிக பிரம்மாண்டமாக எளிதில் மக்களிடம் பெரிய கட்சிகள் செய்தது. முடியாத சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளிடம் சரணடைந்து கூட்டணி மூலம் தங்களை தக்க வைக்கும் வேலைகளை செய்தன. ஊடக வெளிச்சம் யார் பக்கம் விழுந்ததோ அவர்களே மக்கள் மனதில் எளிதில் இடம் பெறக்கூடிய வாய்ப்புகள் வந்தன. அதன் பின் காலம் காலமாக இருந்து வந்த கட்சிகள் எல்லாம் பலத்தை இழக்கும் போது அல்லது ஊடக வெளிச்சங்களை இழக்கும் போது கார்ப்பரேட் நிறுவனங்கள் உருவாக்கிய கட்சிகள் வெளிச்சத்திற்கு வந்து அதிகாரத்தை கைப்பற்ற கூடிய சூழ்நிலை உருவானது.
சுதந்திரம் கிடைத்த முதல் 50 ஆண்டுகளில் அரசு மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், மருத்துவம் போன்ற விஷயங்களுக்கே அதிகம் உழைக்க நேரிட்டது. ஓரளவுக்கு அவை கிட்டிய பின்னர்,, வளர்ந்த சமூகமாக மாறிய பிறகு மக்கள் நுகர்வு கலாச்சாரத்தில் வெகுவாக மாறிப்போனார்கள்.
அரசின் மீதான அவநம்பிக்கைகள் எதிர்ப்புணர்வுகள் நிறைய தோன்றின. அதற்கு காரணம் ஆண்டவர்களுடைய அதிகார போதை, அதிகார திமிர், மக்களை துச்சமாக மதிப்பது, ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபடுவது தேர்தலுக்கு காசு இறைத்தால் போதும் ஜெயித்து விடலாம் என்ற எண்ணம் வந்தது எல்லாம் சேர்ந்து மிகப் பெரிய கட்சிகளுடைய கட்டமைப்பு பலவீனமடைய ஆரம்பித்தது.
விளைவு எந்த விதமான பின்புலமும் இல்லாத, கட்டமைப்பு இல்லாத திடீர் காந்தியவாதிகளின் போராட்டங்களின் விளைவாக ஊடக வெளிச்சம் பெற்ற ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் திடீரென முளைத்து ஆட்சிக்கு வந்தது தான் ஊடகத்தினுடைய மாபெரும் வெற்றியாக கணிக்கப்பட்டது.
புதியதாக தேர்தல் வியூக அமைப்பாளர்கள் என்ற நச்சரவம் தோன்றியது. மக்களுடைய மனநலம் ,பலம், பலவீனம், கட்சிகளுடைய செல்வாக்கு, பலம், பலவீனம், வேட்பாளர்கள் பற்றிய கணிப்புகளை ஆய்வு செய்து மக்களைக் கவர்வதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று அரசியலுக்கு அப்பாற்பட்ட வியூக ஏற்பாட்டாளர்கள் அதாவது வியாபாரிகள் அரசியல் தரகர்கள் உருவானார்கள். அவர்களுக்கு எந்த ஒரு அரசியல் சித்தாந்தம், ஞானமோ, மக்களைப் பற்றிய அக்கறையோ, தேசத்தைப் பற்றிய அக்கறையோ, முன்னேற்றத்திற்கான பாதை பற்றிய அறிவு எதுவுமே கிடையாது.
அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் வெற்றி பெறுவதற்கு எந்த விதமான சாணக்கியத்தனம் செய்வது, பிறருக்கு குழி தோண்டுவது, மக்களை குழப்புவது, பொய் பிரச்சாரம் செய்வது, தாங்கள் விரும்பிய வேட்பாளர்கள் கட்சி பற்றிய ஒரு பிம்பத்தை, மாயையை உருவாக்குவது, எதிராளியினுடைய பெயரைக் கெடுத்து அதல பாதாளத்தில் தள்ளுவது போன்ற சகுனி தனமான வேலைகள் தான்.
அரசியல் கட்சிகள் எந்த விதமான சித்தாந்தத்தையும் அது வலதுசாரி தத்துவமோ, இடதுசாரி தத்துவமோ ஒரு சித்தாந்தத்தை கொண்டு அரசியல் கல்வி செய்து, மக்களை தங்கள் பக்கம் கொண்டு செல்வது கூட ஏற்றுக் கொள்ளத் தக்கது. எனவே அது அரசியல் வழிமுறை.
ஆனால் இந்த ஏற்பாடு என்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய அரசியல் கட்சிகள், மிகப்பெரிய கட்சிகள் எல்லாம் இந்த வியூக ஏற்பாட்டாளர்களின் சகுனி தனமான வலையில் சிக்கி தங்கள் கட்சிகளை நாசமாக்கிக் கொண்டு எப்படியாவது பதவிக்கு வர துடிக்கிறார்கள். அதில் சிலர் வெற்றியும் அடைகிறார்கள். சில கட்சிகள் அழிந்தும் போயிருக்கிறார்கள். இவ்வாறு வெளியாரை தனது ஆலோசகராக நியமிப்பதன் மூலம், தங்களின் கட்சியினுடைய பலம் பலவீனம் பற்றிய தகவல் வெளியேறிக் கொண்டிருக்கிறது என்று ஆபத்தை உணராமல் கட்சிகள் அழிந்து வருகின்றன.
இந்த வியூக ஏற்பாட்டாளர்கள் செய்வதெல்லாம் திட்டமிட்டு, எந்திரத்தனமாக, கட்டமைப்பை உருவாக்கி சமூக ஊடகங்கள், ஊடகங்கள் மூலமாக தாங்கள் விரும்பியபடி தேர்தல் நடவடிக்கைகளை மாற்றி அமைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லா கட்சிகளினுடைய கட்டமைப்பும் வெளியே தெரியாமல் உள்ளே அழிந்து போயிருக்கின்றன. சித்தாந்தம், அரசியல் கல்வி, மக்கள் இயக்கம் எல்லாமே காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பது, பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள், மாநாடுகள் எல்லாம் காணாமல் போய்விட்டது. பணம் நிறைய செலவு செய்து ஊடகங்கள் மூலம் பிரச்சாரம் செய்வது, சமூக ஊடகங்கள் மூலம் திட்டமிட்ட அவதூறு பிரச்சாரங்கள் செய்வதுமே தேர்தல் நடவடிக்கைகளாக விட்டன.
இதே நிலைமை நீடித்தால் நாளைக்கு எந்த ஒரு வெளிநாட்டு சக்தியோ, ஏகாதிபத்திய சக்தியையோ, கார்ப்பரேட் அமைப்போ இந்தியாவில் தாங்கள் விரும்புகிற மாதிரி அரசியலமைப்பை உருவாக்க முடியும். அளித்திட முடியும். இது மிக மிக ஆபத்தான விஷயம்.
இந்தியத் தேர்தல் முறை மிகவும் கண்ணியமாக மதிக்கப்பட்டு திருவிழாவைப் போல் நடந்து கொண்டிருந்தது. இன்றைக்கு சூதாட்டமாக மாறி தேசத்தை நாட்டை அழிவை நோக்கி அழைத்துச் சென்றது. புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்வராக.
What is the ready who have to educate the mass
ReplyDeleteWe have to educate the mass by forwarding this type of article to every where where ever we can do continuously. . Kovai Selvaraj
ReplyDeleteமக்களுக்கு அரசியல் அறிவும்,வரலாறும் கட்டாயமாக தெரிந்து வைத்து இருக்க வேண்டும்…. எங்கே மக்கள் சோம்பேறிகள்.
ReplyDeleteஅ கோ சூர்யா.