அரிமாவே ஆயிடினும் — தன்
அகம்பேசும் இயல்பு மறப்பின்,
அடற்காக்கை கூட
அதனை ஆள எண்ணிடுமே!
காட்டின் பேரரசன் என்று
காலங்கள் சொன்ன கதை,
களத்தில் சோர்ந்து கிடக்கையில்
கானல் நீராய் மறைந்திடுமே!
சுயபலம் மறந்த தருணத்தில்,
சூழ்ந்திருக்கும் காக்கைக் கூட்டம்
சுதந்திரமாய் சிறகடித்துச்
சூழ்ச்சிகளால் மகுடம் சூடிடுமே!
கம்பீரம் இழக்கும் சிங்கத்தை
காகமும் ஏளனம் செய்யும்;
தன்வலிமை மறந்த தமிழனை
ஆரியம் எளிதாய் மிதிக்கும்!
ஆற்றலைத் தூங்க விடாதே — உன்
அடையாளத்தை விட்டிடாதே!
விழித்தெழும் சிங்கத்திற்கு மட்டுமே
விண்ணும் மண்ணும் அடிபணியும்!

No comments:
Post a Comment