இந்தியாவின் முதல் புகைப்படக் கலைஞர்: வில்லியம் ஜான்சனின் சுவாரசியமான கதை!
புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பாத மனிதர்கள் யாராவது இருக்கிறார்களா என்ன? ஒரு சிலர் புகைப்படத்திற்கென்றே பிரத்யேகமாக ஏற்பாடு செய்துகொண்டு, விதவிதமாகக் கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால், இந்தியாவில் முதன்முதலில் புகைப்படக் கலை அறிமுகமான கதை மிகவும் வேடிக்கையானது.
உலகில் புகைப்படத் தொழில் நடைமுறைக்கு வந்த சில வருடங்களிலேயே அது இந்தியாவிலும் அறிமுகமானது என்பது ஒரு பெருமைக்குரிய விஷயம் அல்லவா? உலகிற்கு இக்கலை அறிமுகமாகி 13 ஆண்டுகள் மட்டுமே ஆகியிருந்த நிலையில், 1840-களிலேயே நடைமுறைப் புகைப்படம் எடுத்தல் இந்தியாவிற்குள் வந்திருந்தது.
இந்தியாவைப் புகைப்படம் எடுத்த ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவர் தான் வில்லியம் ஜான்சன். பிரிட்டிஷ் அரசு ஊழியரான இவர், 1848-ஆம் ஆண்டு பம்பாய்க்கு (இன்றைய மும்பை) வந்ததாகத் தெரிகிறது. அவர் ஒரு தீவிர புகைப்படக் கலைஞராகவும் இருந்தார். 1852-க்குள் பம்பாயின் கிராண்ட் சாலையில் ஒரு ஸ்டுடியோவை நிறுவிய அவர், ஆரம்பத்தில் 'டாகுரோடைப்' (Daguerreotype) முறையிலான புகைப்படங்களைத் தயாரித்தார்.
தொடர்ந்து 1854-இல், ஜான்சன் 'பம்பாய் புகைப்படச் சங்கத்தின்' (Bombay Photographic Society) நிறுவன உறுப்பினரானார்; அதன் மாதாந்திர இதழின் இணை ஆசிரியராகவும் பணியாற்றினார். அவர் பம்பாய்வாசிகளைப் புகைப்படம் எடுத்து, 'தி இந்தியன் அமெச்சூர்ஸ் ஃபோட்டோகிராஃபிக் ஆல்பம்' (The Indian Amateurs' Photographic Album) என்ற நூலை வெளியிட்டார். இந்நூலை பம்பாய் புகைப்படச் சங்கம் 1856 முதல் 1858 வரை வெளியிட்டது.
இந்தப் புகைப்படங்களில் பல, பின்னர் இவரது 'ஃபோட்டோகிராஃப்ஸ் ஆஃப் வெஸ்டர்ன் இந்தியா' (Photographs of Western India) என்ற மூன்று தொகுப்புகள் கொண்ட 287 அச்சுப் பிரதிகளில் வெளியிடப்பட்டன. கிறிஸ்டிஸ் (Christie's) நிறுவனம் 2001-இல் இந்தத் தொகுப்பை £27,025 (சுமார் $35,880) விலைக்கு ஏலத்தில் விற்றது குறிப்பிடத்தக்கது.
ஜான்சன், வெல்வெட் திரைச்சீலைகளையும் ரோமானியத் தூண்களையும் பின்னணியாகப் பயன்படுத்தி, ஸ்டுடியோக்களுக்குள் நேர்த்தியாகப் புகைப்படங்களை எடுத்தார்.
அவரது 'பம்பாயின் மீனவப் பெண்கள்' என்ற புகைப்படம், கூடைகளுடன் இருக்கும் இரண்டு கோலிப் பெண்களைச் சித்தரிக்கிறது.
மற்றொரு புகைப்படம், ஒரு சிறுவனுடன் இருக்கும் பார்சிப் பெண்ணைக் காட்டுகிறது. அதுமட்டுமின்றி அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், பம்பாயின் பல்வேறு பகுதிகள் மற்றும் பிஜாப்பூரின் இடிபாடுகள் போன்ற நிலப்பரப்புகளையும் அவர் புகைப்படங்களாகப் பதிவு செய்தார்.
மேலும் அவர், 'பம்பாயின் கீழைத்தேய இனங்கள், பழங்குடியினர், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள்' (The Oriental Races, Tribes, and Residents of Bombay) என்ற நூலையும் வெளியிட்டார். இது, புகைப்படங்களுடன் விளக்கப்பட்டுள்ள இந்தியர்களைப் பற்றிய முதல் இனவரைவியல் (Ethnographic) ஆய்வாகக் கருதப்படுகிறது. "இந்தப் பணிக்காகப் பெறப்பட்ட நெகட்டிவ்களின் (Negatives) தொகுப்பு மிகுந்த உழைப்புடன் செய்யப்பட்டது," என்று அவரே எழுதியுள்ளார்.
ஆனால், இந்தப் புத்தகங்களும் படங்களும் இந்தியாவைப் பற்றிய பிரிட்டிஷாரின் கண்ணோட்டங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தன.
பிரிட்டிஷ் கால பொருள் வாங்குபவர்களுக்கு, அவை அவர்கள் சேகரித்து வைக்கும் நினைவுப் பொருட்களாக இருந்தன. ஜான்சனின் படைப்புகள், "இந்தியாவின் ஒரு கவர்ச்சியான பிம்பத்தை முன்வைக்கவும், தொலைதூரப் பேரரசின் படங்களை வழங்குவதன் மூலம் உள்நாட்டில் இருந்த பிரிட்டிஷாரின் கற்பனைகளையும் முன்முடிவுகளையும் தூண்டவும் வடிவமைக்கப்பட்டன," என்று வரலாற்று ஆசிரியர் ஸ்டூவர்ட் குறிப்பிடுகிறார்.
ஜான்சன் கடைசியாகச் சுமார் 1861-ஆம் ஆண்டு பம்பாய் பதிவேடுகளில் காணப்படுகிறார். அவர் 1886-இல் இறந்ததாகக் கூறப்பட்டாலும், அந்த ஆண்டு இன்னும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது. எது எப்படியிருந்தாலும், நம் நாட்டின் பழைய, புராதனப் படங்களைப் பார்ப்பது எப்போதும் ஒரு தனி சுவாரசியம் தான்!




















No comments:
Post a Comment