ஒரு தேர்வை நாம் எழுதுகிறோம் என்றால், அதில் நாம் வெற்றி பெற்றோமா இல்லையா என்பதைத் தேர்வு நடத்துபவர்கள் இடும் மதிப்பெண்களை வைத்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், சமூக ஊடகங்களில் நாம் வெளியிடும் கருத்துகள் சரியானவைதானா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
நாம் எழுப்பும் ஒரு சமூகப் பிரச்சினைக்கு வரும் எதிர்வினைகளை வைத்தே நாம் சரியான பாதையில் செல்கிறோமா என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
நம் கருத்துகளை ஏற்பவர்கள் அதனை ஆதரித்து எழுதுவார்கள்; அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் கூடுதல் விவரங்களையோ, திருத்தங்களையோ சுட்டிக்காட்டுவார்கள்.
மாற்றுக்கருத்து உள்ளவர்கள், தங்களுக்கு என்னென்ன விவகாரங்களில் உடன்பாடு இல்லை என்பதைத் தெளிவுபடுத்துவார்கள்.
இதுவே ஆரோக்கியமான, ஜனநாயகப் பூர்வமான விவாத முறை.
ஆனால், பேசும் பிரச்சினையை விடுத்து, தனிநபர் தாக்குதல்களிலும், கெட்ட வார்த்தைகளால் குடும்பத்தாரை இழுத்து வசைபாடுவதிலும் சிலர் இறங்குவார்கள். அப்படி வசைபாடல்கள் வந்தால், நாம் எழுதிய கருத்து நூறு சதவீதம் சரியான பாதையில் செல்கிறது, அது உரியவர்களைச் சென்றடைந்து உலுக்கியிருக்கிறது என்று தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
இதற்கும் சம்பந்தமில்லாமல் விவாதத்தைத் திசைதிருப்பும் கருத்துகள் வருகின்றன என்றால், அது அவர்களின் மனப்பக்குவமின்மையையும் அறியாமையையும் மட்டுமே காட்டுகிறது.
இப்போது நான் பேச வந்த முக்கிய விஷயத்திற்கு வருகிறேன். சமூக ஊடகங்களில் சாதிய ஏற்றத்தாழ்வுகள் அல்லது சாதியக் கொடுமைகள் பற்றி நான் எழுதினால், சில நண்பர்கள் உடனே வந்து, "சாதியை ஒழிக்க முடியாது, அப்படித்தான் இருக்கும்" என்று மிக வேகமாகப் பின்னூட்டம் இடுகிறார்கள். அதை முழுமையாக படிக்கிறார்களா அதன் கருத்தை புரிந்து கொள்கிறார்களா என்று கூட தெரிந்து கொள்ள முடிவதில்லை. சாதி என்ற சொல்லை படித்த உடனேயே அவர்களுக்கு சாமி?! வந்து விடுகிறது.
இங்கு சாதியை ஒழிக்க வேண்டுமா வேண்டாமா, அல்லது ஒழிக்க முடியுமா முடியாதா என்பது தற்போதைய முதன்மைப் பிரச்சினை அல்ல.
சாதியின் காரணமாக ஒருவர் மிக உயர்ந்தவர் என்றும், இன்னொருவர் மிகவும் கீழானவர் என்றும் நினைப்பதும், அதன்படியே அவர்களை நடத்துவதும் மிகத் தவறான விஷயம் அல்லவா?
அதைப்பற்றி நாம் பேசித்தானே ஆக வேண்டும்? சாதிய ஏற்றத்தாழ்வுகளும் முரண்பாடுகளும் சமூகத்தில் இல்லவே இல்லை என்று ஒருவர் கூறுவாரானால், அவர் சாதியக் கொடுமைகளால் ஒருபோதும் பாதிக்கப்படவில்லை என்று பொருள். அதாவது, அந்தச் சாதியில் பிறந்த ஒரே காரணத்திற்காக அவர் எந்த அவமானத்தையும் சந்திக்கவில்லை என்று அர்த்தம்.
உயர்சாதியினரோ, இடைநிலைச் சாதியினரோ தங்களின் சாதிய மேலாதிக்கப் போக்கு தவறு என்பதை உணரவில்லை என்றால், மனிதநேயத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம் என்றுதான் பொருள்.
யாரும் ஒரே நாளில் சாதியை ஒழித்துவிட முடியும் என்றோ, ஒரே நாளில் சமூகம் மாறிவிடும் என்றோ கூறிவிடவில்லை. காலம் காலமாக ஒவ்வொருவர் மனதிலும், ஏன் அவர்களின் மரபணுவிலும் (DNA) "நான் உயர்ந்த சாதி, இவர்களெல்லாம் எனக்குக் கீழே" என்ற எண்ணம் ஆழமாகப் பதிந்திருக்கிறது.
கிட்டத்தட்ட எல்லாச் சாதியினரிடமும் இந்த ஏணிப்படி மனநிலை இருக்கிறது. நம்பூதிரிகள் இதர பிராமணர்கள் தனக்குக் கீழே என்று நினைக்கிறார்கள். ஐயங்கார் தான் மேல், ஐயர் கீழ் என்கிறார். ஐயர் தான் மேல், குருக்கள் கீழ் என்கிறார். இவ்வாறு உயர்சாதியிலிருந்து இடைநிலைச் சாதி, மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிப் பிரிவினர் வரை இந்த அடுக்குமுறை எண்ணம் மிக ஆழமாக வேரூன்றியுள்ளது.
"இல்லை" என்று மறுப்பவர் முழுப் பொய் சொல்கிறார் அல்லது இந்த உலக எதார்த்தத்தில் வாழவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும், இறந்த உடலைப் புதைக்கவோ அல்லது இறுதிச் சடங்குகளைச் செய்யவோ அனுமதிக்கப்படாத சாதியக் கொடுமைகளை நாம் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.
இன்றைய நாளில் கூட, "கீழ் சாதிக்காரன் இந்தத் தெருவில் செருப்பு அணிந்து நடந்து வந்தான்" என்பதற்காக அடித்த செய்திகளைப் பார்க்கிறோம்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி அமைப்புகளில் தங்களுக்கென ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த ஊராட்சி மன்றத் தலைவர் அமருவதற்கு ஒரு நாற்காலி கூடக் கொடுக்காத கேவலம் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சாதி மறுப்புத் திருமணங்களுக்காக நடத்தப்படும் ஆணவக் கொலைகள் போன்ற பெரிய விஷயங்களை சொல்ல வேண்டுமா என்ன?! நாம் அன்றாடம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்
மிகச் சாதாரண அன்றாடப் பிரச்சினைகளில் கூட சாதிய வன்மம் இருப்பதை நம்மால் காண முடிகிறது.
தொன்மை வாய்ந்த தமிழ்ச் சமூகத்தில், சாதி என்பது இடையில் புகுத்தப்பட்ட ஒரு நச்சு என்பதை ஏராளமான இலக்கியச் சான்றுகள் மூலம் அறியலாம்.
"சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்"
- அவ்வையார்
என்று பாடிய அவ்வையாரும்,
"சாதிகள் இல்லையடி பாப்பா"
- பாரதியார்
என்று பாடிய பாரதியும் இன்று உயிரோடு இருந்து, சமூக ஊடகங்களில் தங்களின் முற்போக்குக் கருத்துகளைப் பகிர்ந்திருந்தால், இக்கால நெட்டிசன்கள் அவர்களையும் கடித்துக் குதறியிருப்பார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.
No comments:
Post a Comment