பெருமழையென உரையாமல்
பேய்மழையென பெயரிட்ட
பேதையெவன்...
பிள்ளைகள் மகிழ்வார்
பெருமழை கொண்டாடவென..
குடிசையே ஒழுகிடினும்
குண்டு குழியான பாதையினில்
பெருவெள்ளம் பாய்ந்திடினும்
பயமின்றி ஆடிடுவார்..
வான்சிந்தும் துளிகளெல்லாம்
மண்ணில் இவராடும் முத்துக்கள்!
சேற்றுப் புனலாடி
சோகங்கள் மறந்தாரே...
இடிச்சத்தம் இடிமுரசோ?
மின்னலொளி இவர்தம் புன்னகையோ?
பேய்மழைதான் இவருக்கு
பேரின்பப் பெருமழையோ?!!
(நேற்று வேடிக்கை பார்த்து எழுதினவன் - இன்று
நெசமாய் நனைந்து போனேன்,
முழுசாய் நனைந்து விட்டாலும்
முழு மகிழ்ச்சி தானெனக்கு...
மழையின் துளிகள் ஒவ்வொன்றும்
மனதின் வரிகளாய் மாறுதே,
குடை பிடிக்காத இந்த நொடியில் தான்
கவிதை எனக்கும் வாழுது!)

No comments:
Post a Comment