சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 2 October 2026

உண்மையான ஆடம்பரங்கள்

உலகிலேயே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள் யாராக இருக்கக்கூடும் ?

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் அல்லது பணக்காரர்கள், உயர் நடுத்தர வகுப்பினர் , நடுத்தர வகுப்பினர் என நீங்கள் பட்டியலிட்டு பார்க்கலாம் .

ஆனால் அவர்கள் யாருமே ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள் கிடையாது.

 அப்படியானால் யாராக இருக்கக் கூடும் .

உண்மையில் ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள் சன்னியாசிகளே!

 இவ்வாறு  கூறியவுடன் நீங்கள் மிகப்பெரிய மடங்களை வைத்திருக்கக்கூடிய பெரிய சன்னியாசிகள் அல்லது மட(த) த்தலைவர்கள் என்று நினைத்தால் அது மிகப்பெரிய தவறு.

 ஏனென்றால் மிகப்பெரிய மடங்களை நடத்துபவர்கள், நிறுவன உரிமையாளர்கள் அல்லவா?

 அவர்களுக்கு அந்த நிறுவனம் மிக சிறப்பாக நடக்க வேண்டும் , வருமானம் வர வேண்டும் ,வளர வேண்டும்..... அது போன்ற நிறைய கடமைகள் , கனவுகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் .

ஆனால் உண்மையான பௌத்த சன்னியாசிகள்?!? உண்மையான ஆடம்பரங்கள் வாழ்வார்கள் என்று கூறப்பட்டது.

 எவற்றையெல்லாம் உண்மையான ஆடம்பரங்கள் என்று  பார்த்தால் நிச்சயமாக ஆச்சரியப்படுவீர்கள்...

 பார்ப்போமா அவற்றை....?!.  

ஒரு நல்ல இரவு தூக்கம்.

எப்பேர்ப்பட்ட ஜீவராசியாக இருந்தாலும், அல்லது மனிதராக இருந்தாலும், அவர் எவ்வளவு பெரிய வசதி படைத்தவராக இருந்தாலும் சரி, அடுத்த நாளைக்கு கஷ்டப்பக் கூடிய மனிதராக இருந்தாலும் சரி... ஒரு நல்ல இரவு தூக்கம் இல்லை என்றால் அந்த வாழ்க்கையே மோசமானது தான். நல்ல இரவு தூக்கத்தை காட்டிலும் மிகச்சிறந்த மருந்தொன்றும் கிடையாது. உடல் ஆரோக்கியத்திற்கு அதை விட சிறந்த சொத்தும் கிடையாது. 

மெதுவான காலை

காலை எழுந்தவுடன் பரபரப்பாக அன்றைக்கு என்ன செய்ய வேண்டும், ஏது செய்ய வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருக்கக்கூடிய வாழ்க்கை சரியானதுதானா?! 

காலை என்பது மிகவும் மென்மையாக, மெதுவாக நகர்ந்து செல்வதாக அமைவதே மிகச் சிறந்த விடயமாகும். 

தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்

யாராக இருந்தாலும் தனது வாழ்க்கையை, தனது உரிமையை, தனது செயல்பாட்டை சுதந்திரமாக தேர்ந்தெடுக்கும் உரிமை, வசதி வாய்ப்பு இல்லை என்றால் அது அடிமைத்தனத்தை விட மிகக் கேவலமாக இருக்கும்......

ஒரு நல்ல உரையாடல்

எல்லா மனிதருக்கும் பிறருடன் கருத்துரையாடல் இல்லை என்றால் அது சுவாரசியம் இல்லாததாக போய்விடும். அந்த உரையாடல் என்பதும் சுதந்திரமாக, மனம் திறந்ததாக, உணர்வுகளை மதிக்கத்தக்க, மனிதத்துவத்தை மேம்படுத்தக் கூடியதாக இருந்து விட்டால் அதை விட மிகச் சிறந்த மகிழ்ச்சி கிடையாது.. 

பிடித்த வீட்டில் சமைத்த உணவு

எல்லா உயிரினங்களும் வாழ்வதற்கு உணவு மிக மிக அவசியம் . அதிலும் மனிதருக்கு பிடித்த இடத்தில் வீட்டில் சமைத்த உணவு அருந்துவதை போன்ற மகிழ்ச்சி வேறொன்றும் இருந்து விட முடியாது. 

 விருப்பம் இல்லாமல் , வேண்டா வெறுப்புடன் கடனுக்கு பரிமாறப்படும் உணவு , வேறு வழியில்லாமல் சாப்பிடும் உணவு என்பது கொடுமையான ஒன்றுதானே... 

நீண்ட நடைகள் 

காலார உலகத்தை ரசித்த படியே நீண்ட நடைகள் உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, மனதுக்கும் இனிமையையும் உடலுக்கு பயிற்சி அளிக்கும் விடயம்.

 இப்பொழுதெல்லாம் தொட்டதற்கெல்லாம், மிக அருகில் செல்வதற்கு கூட வாகனத்தை தேடும் காலம் ஆகிவிட்டதே.... 

நல்ல புத்தகங்கள்

யாருமற்ற இடத்தில் இருந்தாலும் சரி , தொலைதூரப் பயணம் ஆனாலும் சரி , ஏன் இருட்டு கொட்டடியில் இருந்தால் கூட நல்ல புத்தகங்கள் இருந்தால் எல்லாவற்றையும் மறந்து விடலாம் .அறிவுக்கு, சிந்தனைக்கு நல்ல உணவு அளித்ததை போல இருக்கும்.

வேடிக்கை மற்றும் விளையாடுவதற்கான நேரம். 

உடலுககும், மனதுக்கும் மிக்க மகிழ்ச்சி தரக்கூடியது வேடிக்கை விளையாட்டுக்கள் மிக அவசியம். வசதியான வாழ்க்கை இல்லாவிட்டாலும் வேடிக்கையும் விளையாட்டுமே மகிழ்ச்சியைத் தரும்.. 

பறவைகள் பாடுவதைக் கேட்டல்

யாருமற்ற வனாந்தரத்தில் இருந்தால் கூட பறவைகள் இனிமையாய் பாடுவதை கேட்டால் போதும் தனிமை ஓடிவிடும். ஆனந்தத்திற்கு எல்லையே இருக்காது. 

வண்ணமயமான சூரிய அஸ்தமனம் 

 உலகிலேயே ஏராளமான பொருளை செலவழித்து, சகலவிதமான வண்ணங்கள், தங்கம், வெள்ளி   நவரத்தின குவியல்களத்தனையும் கொட்டி மிகவும் அற்புதமான, காட்சியை உருவாக்கினால் கூட இயற்கையான சூரிய அஸ்தமனக்காட்சியின் நூற்றில் ஒரு பங்கு காட்சியை உருவாக்கிட முடியாது என்று பாரதி ரசித்துக் கூறிடுவார்.

 நொடிக்கு நொடி மாறி வரும் வண்ணங்கள், காட்சிகள் என கற்பனைக்கெட்டாத காட்சிதனைக் கண்டு விட்டால் போதும் வாழ்க்கையின் முழு நிறைவடையும் உணரலாம்

அமைதியான மனம்

சஞ்சலம், மனக்கவலையும், துக்கம், துயரம் என்று மனம் கவலைப்படுவதை விடுத்து மனதை அமைதியாக வைத்துப்பார்த்தால் அந்த அருமை புரியும். 

உங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் திறன்.

ஒவ்வொரு மனிதருக்கும் ஏராளமான திறமைகள் புதைந்து கிடக்கின்றன. சிறப்பாக வெளிப்படுத்துவோர் போற்றப்படுகிறார்கள். திறமைகள் இருந்தும் வெளிப்படுத்த வாய்ப்புகள் இல்லாததாலும் அதற்கான சுதந்திரம் இல்லாததாலும் பலரும் வெளிப்படுத்துவதில்லை.

 திறன்களை கருத்துக்களை வெளிப்படுத்தும் சுதந்திரம் பிறர் வழங்குவது அல்ல... நாமே வெளிக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு சுதந்திரமாக வெளிப்படுத்தும் திறன் யாருக்கு இருக்கிறதோ அவரே உலகில் மிகச்சிறந்த சுதந்திரமான மனிதன் ஆவார். 

 . 

இப்போது சொல்லுங்கள். யார் உலகின் மிகச்சிறந்த உண்மையான ஆடம்பரமான வாழ்க்கை வாழ்பவர்கள் யார் என்று ?!

மேற்கூறிய பண்புகளும் வாய்ப்புகளும் யாருக்கு கிட்டியதோ அவருடைய வாழ்க்கை தான் உண்மையில் வெற்றிகரமானது.


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...