அடிவயிறு புரட்டிடும் கருவாட்டு நெடி,
அலைக்கழிக்கும் உவர்ப்பால் கண்கள் எரியும்
எனினும் அந்த உப்புக்காற்றே
அவனுக்கு என்றும் உயிர் மூச்சு!
முன்னோர்கள் ஆதியில் கண்ட
மரபுக் கட்டுமரமும் படகும் தாண்டி,
தொழில்நுட்பப் பாய்ச்சலில்
இன்று விசைப்படகாய் மாறியது!
ஆனால்... கட்டுமரச் சொந்தக்காரனோ,
பெரு முதலீட்டுக் கலத்தின் ஆதிக்கத்தால்,
தன் கடலிலேயே இன்று
கூலிக்கார மீனவனாய் போனான்!
அலைகளோடும் சீறும் இயற்கையோடும்
அன்றாடம் அல்லல்படுவது போதாதென்று,
எல்லையற்ற கடலில் எல்லை தாண்டியதாய்
இலங்கைப்படையிடம் அகப்பட்டு மடிகிறானே!
திரைகடல் ஓடி தேசங்கள் பலகண்ட
திரவியம் தேடி வந்த தமிழ் திருமகன்,
இன்று நெய்தல் நிலத்தில்
திக்கற்று நிற்பது அவலமன்றோ!
நட்பு தமிழ் வட்டம் மதுரை இணைய வழிக்கூட்டத்தில் 25.10.2026 அன்று நான் பாடிய கவிதை.

No comments:
Post a Comment