சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 15 August 2026

சுதந்திரத்தின் வயது என்பது...


 இந்தியா என்பதாவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில். எங்களது குடும்ப நண்பரும் வழிகாட்டியும் இலக்கியவாதியுமான திரு சுதந்திரராஜன் அவர்கள் தனது என்பதாவது பிறந்த நாளை கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 

15. 8. 1947 அன்று இந்தியாவிற்கு விடுதலை கிடைத்த போது பிறந்த அவர் ஒரு சிறந்த இலக்கியவாதி, மனிதாபிமானி, விமர்சகர், தொழிற்சங்கவாதி ஆவார்.

எனது அரசு ஊழியர்களுக்கான தொழிற்சங்க வாழ்க்கையின் துவக்கத்தில் அறிமுகமான அற்புதமான தோழர் அவர்.

 1980 களின் துவக்கத்தில் புதுக்கோட்டைக்கு கந்தர்வன் வந்து சேர்ந்த நேரத்தில் அவர் ஏராளமான இலக்கிய ஆர்வலர்களுடனும், தொழிற்சங்க வாதிகளுடனும் நல்ல தொடர்பை உண்டாக்குவதில் முனைந்திருந்தார். அந்த காலத்தில் அவர் ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி, கவிஞர்கள் முத்துநிலவன், பாலா, மங்களா, மற்றும் ஏராளமான இலக்கிய ஆர்வலர்களுடனும் தொடர்புகொண்டு இலக்கிய பணிகளை செய்து வந்தார். அப்போது அறிமுகமானவர்தான் திரு சுதந்திர ராஜன். இன்னொரு பக்கம் அவர் ஒரு தொழிற்சங்க வாதியாகவும் அறிமுகமாகி இருந்தார். காவல்துறை அமைச்சு பணியாளர் சங்கத்தின் மாநில தலைவராகவும், அரசு பணியாளர் சங்கத்தின் முன்னோடியாகவும் அவர் பணியாற்றி வந்தார். 

இலக்கிய வட்டத்தில் கலை இலக்கிய பெருமன்றத்தில் அவர் இணைந்து பணியாற்றி வந்தார். கொள்கைகள் செயல்பாடுகளில் சில மாறுபாடுகள் இருந்தாலும் பொதுவான இடதுசாரி கண்ணோத்துடன், இலக்கிய தொழிற்சங்க செயல்பாடுகளில் அவரோடு நல்ல நெருக்கம் எங்களுக்கு இருந்தது. அதையும் தாண்டி தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு இருந்தது. வயது இடைவெளிகள் நிறைய இருந்தாலும் அவர் நட்பு பாராட்டி பல விஷயங்களில் ஆதரவு கொடுத்து பழகி வந்தார். 

புதுக்கோட்டையில் சின்னப்பா நகரில் வசித்தபோது அவருக்கு அடுத்த வீட்டில் குடியிருந்தேன். ஓரிரு வருடங்களில் அடுத்த தெருவில் அரசு கடன் பெற்று சொந்த வீடு கட்டி வசித்து வந்தேன். அப்போது இருந்தே எங்களது குடும்பத்திற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நல்ல உறவு இருந்தது. ஒரு மூத்த சகோதரரை போல ஆலோசனைகள் வழங்கி  தேவைப்படும் நேரங்களில் உதவிகள் செய்து நல்ல ஆதரவு கொடுத்து வந்தார்.

 அவர் புது தில்லியில் முகாமிட்டிருக்கும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை எட்டாவது அணியில் மாற்றப் பணியாக சென்றபோது என்னையும் அங்கு மாற்று பணியாக அழைத்துச் சென்று புது தில்லியில் பணியாற்றக்கூடிய ஒரு நல்ல அனுபவத்தை பெற்று தந்தார். 

அவர் ஆரம்ப காலத்திலேயே தமிழக சிறப்பு காவல் படை வடகிழக்கு எல்லை புற மாகாணங்களில் காவல் பணி செய்தபோது மாற்றுப் பணியாக சென்று பணியாற்றியவர். அந்த காலத்தில் இவரோடு மாற்றுப் பணியில் சென்று பணியாற்றிய மருந்தாளுநர் திரு சுப்பையா அண்ணாச்சி எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர். 

தொழிற்சங்க வாழ்க்கையில் ஏராளமான அனுபவங்களை பெற்றவர். அவர் ஒரு சிறந்த படிப்பாளி. வீட்டில் ஆயிரக்கணக்கான நூல்களை சேகரித்து வைத்துள்ளார். அவற்றில் பெரும்பகுதியை நூலகங்களுக்கு அன்பளிப்பாக அளித்திருக்கிறார். அவர் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்கள் வெறும் அலங்காரத்திற்காக மட்டுமல்ல உண்மையிலேயே கிட்டத்தட்ட எல்லாவற்றையும் அவர் படித்து இருப்பார். நல்ல நூல்களைப் படிக்கச் சொல்லி நமக்கு வழிகாட்டிடுவார். 

இலக்கிய கூட்டங்களுக்கு தவறாது சென்று கலந்து கொள்வார் புதுக்கோட்டையில் இயங்கி வரும் தமிழ்ச்சங்கம்  கம்பன் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம், வீதி இலக்கிய களம், புதுகை பிலிம் சொசைட்டி என இங்கு இருக்கக்கூடிய அனைத்து கலை இலக்கிய அமைப்புகளோடு நல்ல தொடர்புகளை கொண்டிருப்பார். கலந்து கொண்டு நல்ல  விமர்சனங்களை செய்வார். 

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர், அன்பானவர். எளிதில் கோபப்பட மாட்டார். 

அவரது இணையர் விஜயலட்சுமி அவர்கள் விடியல் தமிழ் தொடக்கப்பள்ளி என்று தமிழ் வழிக் கல்வியை நடத்திய போது ஆதரவளித்து தொடர்ந்து நடத்தியவர். முதுமை காரணமாக பள்ளியை நடத்த முடியாமல் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட போது மிகவும் மனம் வருந்தினார். அந்த அளவுக்கு தமிழ் பற்று உடையவர். 

இந்தியா இந்தியாவின் எண்பதாவது சுதந்திர தின விழாவை கொண்டாடும்போது அவரை வணங்கி வாழ்த்துவதிலே பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

அவர் நூறாண்டு காலம் வாழ்ந்து சிறப்புடன் வழிகாட்டிட அவரை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன்..


1 comment:

  1. தோழர் ஜயாவிற்கு வாழ்த்துகள்

    ReplyDelete

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...