சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 15 August 2026

தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும்?

 " தோல்வியடைந்த ஒரு சமூகம் எப்படியிருக்கும் ?" என புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளரான ஆண்டன் செக்கோவ்விடம் கேட்டபோது இப்படிக் கூறுகிறார்:

தோல்வியடைந்த சமூகங்களில், ஆரோக்கியமாக சிந்திக்கும் ஒவ்வொருவனுக்கும் எதிராக ஆயிரம் முட்டாள்கள் களத்தில் இருப்பார்கள்.

சிந்தனையோடும் கரிசனையோடும் உதிர்க்கப்படும் ஒவ்வொரு சொல்லுக்கும் எதிராக தீவிரமானதும் முட்டாள்தனமானதுமான ஆயிரம் சொற்கள் உதிர்க்கப்படும்.

அங்கே பெரும்பான்மை முட்டாள்தனத்தினாலேயே உருவாக்கப்பட்டிருக்கும்.

எந்த சமூகத்தில் அற்பமான விஷயங்கள் பெரும் தலைப்புகளாக மாற்றப்பட்டு, நல்லுணர்ச்சி பெரும் வகையிலான சிந்தனைகளை எல்லாம் மிகைத்ததாக அவை இடம்பிடித்து உள்ளனவோ, எந்த சமூகத்தில் அந்தக் களத்தை அற்பர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்களோ அதுவே தோல்வியடைந்த சமூகமாகும்."

- ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ்

ஆண்டன் செக்காவ் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி.... 

நம் காலத்தில் வாழாமலேயே நாம் எப்படி இருக்க போகிறோம் என்பதை முன்கூட்டியே ஊகித்து மிக அற்புதமான முன் அறிவிப்பாகவே எச்சரித்திருக்கிறார்.

 இத்தனைக்கும் அவர் வாழ்ந்த காலத்தில் எழுத்தறிவு என்பது மிகக் குறைவாகவே இருந்தது. விஞ்ஞான கண்டுபிடிப்புகள் தகவல் தொடர்பு சாதனங்கள் என்பது மிக அரிதாகவே இருந்தது... 

பத்திரிகைகளும் அதிகம் கிடையாது. படிப்பவர்களும் அதிகம் கிடையாது. அயோக்கியர்களை ஆகா ஓகோ என்று புகழ்ந்து இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து பேசி காரியம் சாதிப்பதற்கும் பெரிய வேலை இல்லை. எதிராளிகளை பற்றி கேவலமாக அவதூறு பிரச்சாரம் செய்ய வேண்டிய நிலைமையும் இருந்ததில்லை..

 அன்றைக்கு தொலைக்காட்சிகளும் இல்லை. பிடித்த தலைவர் எழுந்து விட்டார், பல்துலக்கி விட்டார், மலஜலம் கழித்து விட்டார், குளித்து விட்டார், ஆடை அணிந்து விட்டார், வீதிக்கு வந்து விட்டார், தரிசனம் தந்து விட்டார், தத்துவங்களை உதிர்த்து விட்டார் என்ற நேரடி அலைவரிசை துதியில்லை. பிடிக்காதவர்களைப் பற்றிய கேவலமான, அவதூறு பிரச்சாரங்களும் இருந்ததில்லை. 

விவாத மேடை என்ற பெயரில் அபத்தமான விவாதங்களும் அர்த்தம் இல்லா உரைகளும் நியாயத்துக்கு எதிராக அநியாயத்திற்கு சப்பை கட்டும் அவலங்களும் இருந்ததில்லை. கருத்துரைகள் என்ற பெயரில் அபத்த உளறல்களும் துதி பாடல்களும் இருந்ததில்லை.. 

அலைபேசிகள் கண்டுபிடிக்கப்படாததால் சமூக ஊடகங்களும் இல்லை. ஒருவர் கருத்து தெரிவித்தால் அதற்கு நேர்மையாக பதில் அளிப்பதை விட்டுவிட்டு கேவலமாக அவரையும் அவரது குடும்பத்தாரையும் ஆபாச வார்த்தைகளால் வசவு பாடும் அசிங்கங்களும் இருந்ததில்லை... 


அறிவியல் கண்டுபிடிப்புகள் அதிகம் இல்லாததால் இயற்கையின் புதிர்களுக்கு விடை காண இயலாதவர்கள் அனுமானங்களால் கருத்து உருவாக்கம் செய்திருந்தனர். அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு பிறகு அனுமானங்களின் அபத்தங்களுக்கு முடிவு கற்பித்த பின்னரும், பிற்போக்கு தளத்திற்கு  அறிவியல் பூச்சோடு சப்பை கட்டு கட்டும் அபத்தங்களும் இருந்ததில்லை... 

ஆன்டன் செகாவ் காலத்தில் அரசருக்கும் நிலப்பிரபுகளுக்கும் வால் பிடிக்கும் அற்பர்கள் அபத்தமாக துதி பாடி இருப்பார்கள், மாற்றுக் கருத்து கூறுவோருக்கு  எதிராக வாளை தூக்கி இருப்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் ஒட்டுமொத்த சமூகமும் அப்படி இருந்திருக்காது. 


அனைத்திற்கும் மேலாக அனைவருக்கும் கல்வி, அறிவியல் கண்டுபிடிப்புகள், வாழ்க்கை தர மேம்பாடுகளுக்கு பிறகு சமூகம் முன்னேறும் என்று எதிர்பார்த்ததற்கு மாறாக காட்டுமிராண்டி காலத்தை நோக்கி சமூகம் செல்கிறதா? என்ற கேள்விக்கு, ஆன்டன் செக்காவின் பதில்களும் இன்றைய சமூக நடைமுறைகளின் அனுபவங்களும் சிறந்த பதிலாக இருக்க முடியும் என்பதை நீங்களே சொல்லுங்கள். 

"நாம் முன்னேறிய சமூகமா? தோல்வி அடைந்த சமூகமா?" 




No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...