அவன் ஒரு சொத்தாக நடத்தப்பட்டான். அவள் ஒரு சுமையாக நடத்தப்பட்டாள். அவர்களின் கதை அனைத்தையும் மாற்றியது.
ஏராளமாய் திரண்டிருக்கும் சொத்துக்கள் இருந்தும், கர்னலின் ஊனமுற்ற மகளை ஏழு ஆண்கள் நிராகரித்ததால், அவர் அவள் தனது பெண்ணாய் இருந்தும், மிகவும் வலிமையான அடிமை மனிதனுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்... ஆனால் திருமணத்திற்குப் பிறகு நடந்தவை....
மரியானா ஃபெரைராவுக்கு இருபத்திரண்டு வயது அழகி. ஆனாலும் இடுப்புக்குக் கீழே அசைக்க முடியாத கால்களை உடையவள்... அது அவளை அதிகம் துன்புறுத்தியது. ஆனால் அதை விட, ஊனத்தை காரணம் காட்டி அவளை அனைவரும் நிராகரித்தது அதிகமாக வலிக்கக்கூடும் என்பதை அவள் உணர்ந்தாள்.
பிறவியிலிருந்து அவள் இடுப்புக்குக் கீழே முடங்கிப் பிறந்திருந்தாள், மேலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் செல்வந்த நில உரிமையாளர்களின் உலகில், அவள் பேசுவதைக் கேட்பதற்கு முன்பே அவளது மதிப்பைத் தீர்மானித்திட, திரண்ட செல்வத்தை விட அந்த ஊனமே போதுமானதாக இருந்தது.
அவளது தந்தை, கர்னல் அகஸ்டோ ஃபெரைரா டா சில்வா, அப்பகுதியின் மிகவும் செல்வந்த மற்றும் மிகவும் அஞ்சப்பட்ட மனிதர்களில் ஒருவராக இருந்தார்.
அவருக்கு கண்ணுக்கு எட்டாத அளவுக்கு அடிவானத்தையும் தாண்டி விரிந்து கிடக்கும் நிலம் சொந்தமாக இருந்தது.
அவரிடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.
அவரது காலடியின் குரல் வருமுன்பே அனைவருமே தங்கள் குரல்களைத் தாழ்த்திக் கொள்வார்கள்.
அவர் நினைத்தால் வாங்க முடியாத பொருளே இல்லை என்று உலகம் நம்பியது, ஆனால், அவரது செல்வத்தால் வாங்க முடியாத ஒரு விஷயம் இருந்தது.
அதுதான் அவரது மகள் மரியானாவுக்கு ஒரு கணவன்.
அதுவரை ஏழு ஆண்கள் அவளை பெண் பார்க்க அந்தத் தோட்டத்திற்கு வந்தனர்.
பெண் பார்க்க வரும்போது கர்னலின் மகளைத் திருமணம் செய்வதால் கிடைக்கக்கூடிய செல்வத்தை ஏழு குடும்பங்களும் கற்பனை செய்தவாறு வந்தன.
அவளுக்கு அருகில் இருந்த மரச் சக்கர நாற்காலியைக் கண்ட பிறகு, அந்த ஏழு ஆண்களும் தங்கள் மனதை மாற்றிக்கொண்டனர்.
கர்னலோ கடுமையான நடத்தையுள்ளவர், அந்த ஏழாவது நிராகரிப்பு, அவளுடைய தந்தையின் உள்ளே எஞ்சியிருந்த மென்மையையும் அழித்துவிட்டது.
அதுவரை பெண் பார்த்து ஆறு குடும்பங்களும் போய் பதில் சொல்வதாக சொல்லிச் சென்றார்கள். பதிலே இல்லை... ஆனால் அந்த ஏழாவது பெண் பார்க்க வந்தவன் மரியானாவை நேராகப் பார்த்து, அவள் தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் கொள்ளக்கூடிய வார்த்தைகளைப் பட்டென்று முகத்துக்கு நேராகக் கூறினான்.
தன்னைத்தானே கவனித்துக் கொள்ள முடியாத ஒரு மனைவியை அவனால் ஒருபோதும் வீட்டிற்கு அழைத்து வர முடியாது.
மரியானா எதுவும் சொல்லவில்லை.அவள் சாதாரணமாக தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள்.அவளால் முடிந்தது அவ்வளவு தான்..
அன்று இரவு, நூலகக் கதவுகளுக்குப் பின்னால் தன் தந்தை பேசுவதை அவள் கேட்டாள்.
அவர் அவளைப் பாதுகாக்க நினைக்கவில்லை...அவர் அவளை ஒரு அவமானம் என்று அழைத்தார்.
அவரைப் பொறுத்தமட்டிலும் அவள் ஒரு சுமை.குடும்பப் பெயருக்கு ஒரு களங்கம். ஏற்கனவே அவள் கன்னியாஸ்திரி மடத்தில் விடப்பட்டிருந்தாள். அங்கும் அவளுக்கு பிடித்ததல்ல.ஆறு மாதப் பிறகு, மரியானா தன் வாழ்வின் மிக மோசமான அவமானத்தை ஏற்கனவே அனுபவித்துவிட்டதாக நம்பி, ஒரு கன்னியாஸ்திரி மடத்திலிருந்து வீட்டிற்கு அழைத்து வரப்பட்டாள்.
அவள் நினைத்தது தவறு.
மறுநாள் காலை, கர்னல் அகஸ்டோ அவளைத் தன் நூலகத்திற்கு அழைத்தார்.
அவள் என்ன விரும்புகிறாள் என்று அவர் கேட்கவில்லை.அவர் தன் முடிவை வெளிப்படையாக அறிவித்தார்.
“நீ கேப்ரியலை மணக்கப் போகிறாய்.”
மரியானா உறைந்து போனாள்.
கேப்ரியலுக்கு முப்பத்தைந்து வயது, கிட்டத்தட்ட ஆறடி மூன்று அங்குல உயரம், அகன்ற தோள்கள், தழும்புகள் நிறைந்த கைகள், அவர்களது தோட்டத்திலேயே வலிமையான மனிதன் என்ற பெயர் பெற்றிருந்தான்.
சிலர் அவனை மூர்க்கமானவன் என்றனர்.
அவனால் ஒரு கோவேறு கழுதையைக் கூட வீழ்த்திவிட முடியும் என்று சிலர் கிசுகிசுத்தனர்.அவனது தோற்றத்தைக்கண்டு பெரும்பாலான மக்கள் அவனுக்குப் பயந்தனர்.
ஆனால் கேப்ரியல், மரியானாவின் தந்தையால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தான்.
மறுப்பதற்கு அவனுக்குச் சட்டப்பூர்வமான அதிகாரம் இல்லை.
அவளுக்கும் இல்லை.
அவர்களை யார் கேட்டது. சரியான தீர்வைக் கண்டுபிடித்துவிட்டதாக கர்னல் நம்பினார்.
சுதந்திரமான ஆண்கள் தனது ஊனமுற்ற மக்களை திருமணம் செய்து வைக்க மறுத்தால், ஒரு அடிமையை வைத்து அதைச் செய்யும்படி அவர் கட்டளையிடுவார். அவர் வைத்தது தானே சட்டம். எதிர்த்து பேசும் தைரியம் அவர் குடும்பத்தில் கூட யாருக்கும் இல்லை.
அடுத்த நாள் இரவு திருமணம் இரகசியமாக நடைபெற்றது.
மலர்மாலைகள் இல்லை.கொண்டாட்டம் இல்லை.மேளதாளங்கள் இல்லை. புன்னகைக்கும் உறவினர்கள் இல்லை.
குளிர்ச்சியான அந்தத் தோட்டத்து தேவாலயத்திற்குள் மரியானா, கேப்ரியல், கர்னல், ஒரு பாதிரியார் மற்றும் ரோசா என்ற பணிப்பெண் மட்டுமே நின்றுகொண்டிருந்தனர்.
மரியானாவைத் தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறாயா என்று பாதிரியார் கேப்ரியாலிடம் கேட்டபோது, அந்த பிரம்மாண்டமான மனிதன் தயங்கினான்.
கர்னல் முன்னே ஓரடி எடுத்து வந்தார்.
கேப்ரியல் இறுதியாக மெதுவாகக் கூறினான்:
"நான் ஏற்றுக்கொள்கிறேன்."
மரியானா உடனடியாகப் புரிந்து கொண்டாள்.
அவர்கள் மணமக்களல்ல.அவர்கள் ஒரே மனிதனுக்கு கீழ்ப்படியும் இரண்டு கைதிகள்.
கர்னல் செலவிலேயே இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர். அவ்வளவு தான், திருமணம் முடிந்தது.
அது வழக்கமான திருமணமாகவும் நடக்கவில்லை. திருட்டுத்தனமாக நடைபெறும் திருமணமாகும் நடக்கவில்லை. ஒரு விதமான கட்டாய திருமணம் தான் அது.
அவர்களுக்காகத் தயாரிக்கப்பட்ட அந்தச் சிறிய வீட்டிற்குள் கேப்ரியல் அவளைத் தூக்கிச் சென்ற பிறகு நடந்தவை அனைத்தையும் மாற்றிவிட்டன.
மரியானா படுக்கையில் பயத்துடன் அமர்ந்து, அவன் தன் தந்தையின் எதிர்பார்ப்புகளுக்குக் கீழ்ப்படிவான் என்று காத்திருந்தாள்.
கேப்ரியல் சில அடி தூரத்தில் நின்றுகொண்டிருந்தான்.
“நான் வெளியே தூங்குகிறேன்.”என்று மெல்லிய குரலில் பேசினான்.
மரியானா அவனை உற்றுப் பார்த்தாள்.
கேப்ரியல் தன் பார்வையைத் தாழ்த்தினான்.
"உன் தந்தை எனக்கு என்ன கட்டளையிட்டார் என்பது எனக்குத் தெரியும்" என்றான். "ஆனால் நீ விரும்பினால் தவிர நான் உன்னைத் தொடமாட்டேன்."
அவள் கேட்டதை அவளால் நம்பவே முடியவில்லை.
அவளுடைய தந்தை இருபத்திரண்டு ஆண்டுகளாக அவளது வாழ்க்கையைக் கட்டுப்படுத்தி வந்தார்.
பெண் பார்க்க வந்த ஏழு செல்வந்தர்கள் அவளைச் சேதமடைந்த சொத்தைப் போல நடத்தியிருந்தனர்.
ஆனாலும், சட்டப்படி தனக்குக்கூடச் சொந்தமில்லாத இந்த மனிதன், வேறு யாருக்கும் கிடைக்காத ஒன்றை அவளுக்கு வழங்கினான்.
ஒரு விருப்பம்.அவளுடைய சுய வருப்பம். அவள் வாழ்நாள் முழுக்க பார்த்திராத ஒன்று.
நாட்கள் வாரங்களாக மாறின.வாரங்கள் மாதங்களன். பருவமாற்றங்கள் வந்தன.
ஒவ்வொரு காலையும் கேப்ரியல் வயல்களுக்குப் புறப்படுவதற்கு முன் அவளுக்கு உணவு தயாரித்தான்.
ஒவ்வொரு மாலையும் அவன் களைப்புடன் திரும்பி வந்தாலும், அவள் வசதியாக இருப்பதை உறுதிசெய்தான்.
அவள் சூரிய அஸ்தமனத்தைப் பார்க்கும்படி அவளுடைய நாற்காலியை ஜன்னலுக்கு அருகில் வைத்தான்.
குளிர்கால இரவுகள் குளிரானபோது, மரியானா கதகதப்பாய் ஒரு கூடுதல் போர்வையின் கீழ் விழித்தாள்.ஆனால் கேப்ரியல் போர்வையின்றி தரையில் உறங்குவதை அவள் கண்டறிந்தாள்.
பிறகு ஒரு நாள் இரவு, மரியானா அடுத்த அறையில் அவன் முனங்குவதைக் கேட்டாள்.
அவள் தட்டுத்தடுமாறி அந்த அறை உள்ளே நுழைந்தபோது, அவனுடைய சட்டையின் பின்புறத்தில் கருமையான கறைகள் பரவியிருந்ததை அவள் கண்டாள்.
கேப்ரியல் வயல்களுக்குத் தாமதமாக வந்தானென்று மேற்பார்வையாளர் அவனைத் தண்டித்திருந்தார்.
அவன் ஏன் தாமதமாக வந்தான்?
அன்று காலை மரியானா குளித்து, உடை மாற்றி, காலை உணவு உண்ண உதவுவதற்காக அவன் பின் தங்கிவிட்டாள்.
“உன் சட்டையைக் கழற்று,” என்று அவள் கட்டளையிட்டாள்.
அவனுடைய முதுகு பழைய தழும்புகளாலும் புதிய காயங்களாலும் நிறைந்திருந்தது.
மரியானா கண்ணீருடன் ஒவ்வொரு காயத்தையும் அவளே சுத்தம் செய்தாள்.
தன் வாழ்வில் முதன்முறையாக, கர்னலின் அமைதியான மகள் வேறொரு பெண்ணாக மாறுவதை உணர்ந்தாள்.
அவளுக்குக் கோபம் பொங்கியது.
அன்றிரவு முதல், அவர்களுக்குள் ஏதோ ஒன்று வளரத் தொடங்கியது.
மரியானா கேப்ரியலுக்கு ரகசியமாக வாசிக்கக் கற்றுக் கொடுத்தாள்.
அவள் ஒருமுறை ஆரஞ்சுப் பழங்கள்தான் தனக்குப் பிடித்த பழம் என்று சொன்னது நினைவுக்கு வந்ததால், கேப்ரியல் சூரிய உதயத்திற்கு முன்பே பல மைல்கள் நடந்து சென்று அவளுக்கு ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு வந்தான்.
அவள் அவனுக்குத் தன் பெயரை எழுதக் கற்றுக் கொடுத்தாள்.
கண்ணியம் என்றால் என்னவென்று அவன் அவளுக்குக் கற்றுக் கொடுத்தான்.
மெதுவாக, வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்ட அந்த இருவர், ஒருவரையொருவர் உணர, நேசிக்கத் தொடங்கினர்.
பிறகு அறுவடை காலம் வந்தது.
கேப்ரியல் ஒரு கோவேறு கழுதையால் கடுமையாகக் காயமடைந்தான்.
அவனால் மூச்சுவிடவே முடியவில்லை.
அவன் தொடர்ந்து வேலை செய்தால், அவன் உயிர் பிழைக்காமல் போகலாம் என்று மருத்துவர் எச்சரித்தார்.
ஆனால் புதிய மேற்பார்வையாளர் அவனை மீண்டும் வயல்களுக்குச் செல்லும்படி கட்டளையிட்டார்.
அன்று மாலை கேப்ரியல் வியர்வை, இரத்தம், புழுதி படிந்தவனாகத் திரும்பினான்.
அவன் வாசலுக்குள் இரண்டு அடி எடுத்து வைத்தவன் சரிந்து விழுந்தான்.
மரியானாவுக்குள் இருந்த ஏதோ ஒன்று பட்டென்று முறிந்தது.
இருபத்திரண்டு ஆண்டுகளாக, அவள் தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்து வந்தாள்.
அவள் எத்தனையோ அவமானங்களை, நிராகரிப்புகளை ஏற்றுக் கொண்டிருந்தாள்.
தன்னை உடனடியாக வீட்டிற்கு அழைத்துச் செல்லும்படி ரோசாவுக்கு அவள் கட்டளையிட்டாள்
சில நிமிடங்களுக்குப் பிறகு, மரியானா அனுமதியின்றி தன் தந்தையின் நூலகத்திற்கு நுழைந்தாள்.
கர்னல் அகஸ்டோ தன் மதுக்கோப்பையை உறிஞ்சிக்கொண்டிருந்தவர் தலையை உயர்த்தினார்.
“இங்கே என்ன செய்கிறாய்?”
"கேப்ரியலுக்கு ஓய்வு தேவை."
கர்னல் பெரிதாக எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.
"அவன் இறந்தால், சாகட்டும். எனக்கு இன்னும் ஐம்பது பேர் இருக்கிறார்கள்."
தன் வாழ்நாள் முழுவதும் தான் அஞ்சிய அந்த மனிதனை மரியானா உற்றுப் பார்த்தாள்.
பிறகு, எல்லாவற்றையும் மாற்றப்போகும் வார்த்தைகளை அவள் சொன்னாள்.
"அவன் உங்கள் மிருகங்களில் ஒருவன் அல்ல."
கர்னல் மெதுவாக எழுந்தார்.
மரியானா தொடர்ந்தாள்.
"அவன் என் கணவன்."
அவளிடம் தந்தையின் முகம் இருந்தது.
ஆனால் மரியானா இன்னும் பேசி முடிக்கவில்லை.
"மேலும், அவர் உங்களை விட இரண்டு மடங்கு சிறந்த மனிதர்."
அறை அமைதி முழுவதும் நிலவியது.
பூ ஒன்று புயலாக மாறி வருவதை கர்னல் உணர்ந்தார்...
பின்னர், கர்னல் தனது மேசையைச் சுற்றி வந்தார்.
அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது, கேப்ரியல் விடுதலையைக் காணுவானா? உயிருடன் இருப்பானா? ..மரியானா தான் அறிந்த ஒரே வீட்டை இழந்துவிடுவாளா? என்பதை தீர்மானிக்கும் தருணம்...
ஆனால், அவளுடைய தந்தை இன்னும் புரிந்துகொள்ளாத ஒரு ரகசியம் இருந்தது.
தன் வாழ்நாள் முழுவதும் பலவீனமானவள் என்று அவன் கருதிய மகள், இறுதியாக அவனது அதிகாரத்தை விட வலிமையான ஒன்றைக் கண்டுபிடித்தாள்:
பயப்படுவதற்கு அவளுக்கு இனி எதுவும் இல்லை....
(அமெரிக்காவில் நிகழ்ந்த ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவி எழுதப்பட்ட கதை)
No comments:
Post a Comment