சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 25 August 2026

அரிசியின் அரசியல்.

 "அரிசி சோற்றை அள்ளி இறைத்தது போல" என்று வானத்து நட்சத்திரங்களை பற்றி அந்த காலத்து ஒரு சொலவடை உண்டு..

அதாவது அரிசி சோறு சாப்பிடுவது என்பது அதிசயமான ஒன்று போல அந்தக்காலத்தில் கிராமத்தில் சொல்லப்பட்ட காலம் உண்டு. நல்ல நாள், திருவிழாக்கள், பண்டிகை, திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிகள் போன்ற காலங்களில் தான் அரிசி சோறு அதிகமாக புழங்கிய காலம் உண்டு. தஞ்சை சார்ந்த சோழமண்டலம் மட்டும் இதற்கு விதிவிலக்கு அங்கு அரிசி சோறு தான் பிரதானமாக இருந்தது. 

"எங்க வீட்ல இன்னைக்கு அரிசி சோறு தெரியுமா" என்று பிள்ளைகள் பெருமையாக பீத்தியதாக அந்த காலத்தில் சொல்வார்களாம். பெரும்பாலும் கம்பு கேழ்வரகு சோளம் போன்றவற்றை தான் விவசாயக் குடிகள், சாதாரண மக்கள் எல்லாம் சாப்பிட்டு இருக்கிறார்கள்.

மாடுகட்டி போர் அடித்தால் மாளாது செந்நெல் என்று ஆனைகட்டி போரடித்த அழகான தென்மதுரை என்றெல்லாம் பழமொழிகள் உண்டு என்றாலும் உணவுக்கு அல்லாடிய காலம் அந்த காலத்தில் பெரும்பகுதியாக இருந்தது. 

காரணம் நம் பகுதிகளில் எல்லா காலத்திலும் நீர் கரைபுரண்டு ஓடக்கூடிய ஜீவ நதிகள் இல்லை. மிகப் பெரிய ஆறு என்று சொல்லப்படக்கூடிய காவிரி கூட மழைக்காலங்களில் தான் நீர் வரும். மற்ற ஆறுகளில் எல்லா காலங்களிலும் கரை புரண்டு தண்ணீர் ஓடுவதில்லை. எப்போது வெள்ளம் வரும்போது தான் கரைபுரண்டு நீர் ஓடி இருக்கிறது. 

சங்க காலத்தில் பஞ்சத்தைப் பற்றி பாடிய பாடல்கள் உண்டு காப்பிய நாயகி மணிமேகலை கூட அட்சய பாத்திரம் கொண்டு எல்லோருக்கும் உணவளித்ததாக கதைகள் உண்டு. 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் பயிர் வாடும் போது நெற்பயிர்கள் வாடும் போது, ​​அடுத்து அரசிக்கு பஞ்சம் நேரிடும். எனவே அதை சாப்பிடுவதற்காக காத்திருக்கக்கூடிய மக்களுடைய பசியை நினைத்து தான் வாடி இருக்கிறார். அதனால் தான் அனையாத அடுப்பு கொண்டு உணவளிக்கக்கூடிய பணியை அவர் செய்திருக்கிறார். 

இதற்கு யாரையும் குறை சொல்லி பயனில்லை. அந்த காலத்து விவசாய முறைகளும், ஆறு மாத பயிராக இருந்ததால், பருவம் பொய்த்தாலோ அல்லது பிற காரணங்களினாலோ விளைச்சலில்லை என்றால் மக்கள் பஞ்சத்தில் சாவார்கள். அதுவும் மகசூல் குறைவாக தான் இருந்திருக்கிறது.

 19ஆவது நூற்றாண்டு வரை உணவு பஞ்சத்தினாலும், வறட்சியினாலும், பெருவெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்கள், காலரா, பெரியம்மை, பிளேக், மலேரியா போன்ற கொள்ளை நோய்களாலும் வருடா வருடம் லட்சக்கணக்கில் மக்கள் இறப்பது என்பது நிகழ்ந்து கொண்டே இருந்தது வரலாற்றை திரும்பிப் பார்த்தால் ஏராளமான ஆதாரங்கள் காணப்படுகின்றன.

இது தவிர இந்தியா முழுவதும் ஏராளமான அரசுகளாக பிரிந்து இருந்ததால் உணவு உற்பத்தி விநியோகம் என்பது பெரிய அளவுக்கு சிறப்பாக இருந்ததில்லை. ஏனெனில் மழை நீரை சேகரித்து, பெரும் அணைக்கட்டுகள் கட்டி, விவசாயம் செய்யும் அளவுக்கு ஏற்பாடுகள் இல்லை.

 வெள்ளையர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் ஓரளவு அணைகள் கட்டுதல், நீர்ப்பாசன கட்டமைப்புகளை உருவாக்கி கொஞ்சம் வளர்ந்தாலும், வெள்ளையர்கள் தங்கள் வசதிக்காக சணல் அவுரி போன்ற சாய பயிர்களை உருவாக்கி விவசாயத்திற்கு எதிரான வேலைகளையும் செய்தனர். 

அதனால் உருவான செயற்கை பஞ்சங்களும் உண்டு. இந்தியா முழுக்க ஏன் மாநில அளவில் கூட உணவு கட்டமைப்பை முறையாக உருவாக்கி விநியோகம் செய்திட முடியாத அளவுக்கு ஏராளமான தட்டுப்பாடுகளும், அதனால் உருவான தட்டுப்பாடுகளும் இருந்தன. 

ஒரு காலத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட அளவு தான் மக்கள் கலந்து கொள்ள வேண்டும் எந்த அளவுக்கு அபத்தமான சட்டங்கள் எல்லாம் இருந்தன.

சுதந்திரம் கிடைத்த பிறகு நீர் பாசன திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விவசாயம் அபிவிருத்தி அடைய ஆரம்பித்தது என்றாலும், நவீன விவசாயத்திற்கு பிறகு தான் மூன்று போகம், 90 நாள் பயிர், அதிக விளைச்சல் எல்லாம் வந்தது. அதுவும் பசுமைப் புரட்சிக்குப் பின்னர் ஓரளவுக்கு அரிசி பஞ்சம் தீர்ந்தது.

சரி அரசியலுக்கு வருவோம்... இந்தியாவை சூறையாட வந்த வெள்ளையர்கள் இங்கிருக்க கூடிய விளைச்சல் நிலங்களில் அரிசி பயிரிடுவதை தவிர்த்து தங்களுடைய லாபத்திற்காக சனல், அவுரி போன்ற சாயப் பொருட்களை உற்பத்தி செய்து நிலங்களாக மாற்றியதால் ஒரு வகை பஞ்சம் வந்தது. விவசாயம், நீர்ப்பாசன முறைகளில் தேவைக்கேற்ப நவீன முறைக்கு மாறுவதில் ஏற்பட்ட தாமதங்கள், பொருளாதார நெருக்கடிகள். போன்ற காரணங்களால் தேவைக்கேற்ற உற்பத்தி தாமதமாக இருந்தது.உணவு மண்டலங்கள், மையப்படுத்தப்பட்ட உணவுக் கொள்கைகள் காரணமாகவும், உணவுப் பொருள்களைக் கொள்ளையடிப்பதற்கும் பதுக்கி விற்ற வியாபாரிகளின் பகற் கொள்ளை காரணமாகவும், அரிசி போன்ற உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆரம்ப காலங்களில் அரசு ரேஷன் கடைகளை உருவாக்காமல் தனியார் மூலமாக ரேஷன் பொருட்கள் விற்கப்பட்டன. 

1967 தேர்தலில் ஆட்சி மாற்றத்தில் உணவுப் பிரச்சனை பெரும் பங்கானது. ரூபாய்க்கு 3 படி அரிசி லட்சியம், 1 படி நிச்சயம் என்ற முழக்கத்துடன் திரு அண்ணாதுரை அவர்கள் தேர்தலை சந்தித்து வெற்றியும் பெற்றார். 

உடனடியாக சாதிக்க முடியாவிட்டாலும் படிப்படியாக பிரச்சனைகளை தீர்க்க முயற்சி செய்தார்கள். சிறுஅணைக்கட்டுகள், நீர்ப்பாசன திட்டங்கள், நவீன விவசாய முறைக்கு ஊக்குவிப்பு போன்ற திட்டங்கள், பசுமை புரட்சி மூலம் முன்னேற்றம் காண ஆரம்பித்தது. 1970களில் புதிய கண்டுபிடிப்பான ஐஆர் 8 என்ற ஒருவகை நெற்பயிர் உருவாக்கப்பட்டது. மிகக் குறைவான உயரத்தோடு தான் வளரும், குறைந்த காலத்தில் மகசூல் நிறைய கிடைத்தது, அரிசி பெரியதாக, சாப்பிட கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், ஓரளவுக்கு குறைந்த விலையில் கிடைத்தது. 

திரு எம்ஜிஆர் ஆட்சியில் அரசு நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டு அரிசி நியாயமான விலையில் விற்கப்பட்டது. அதன்பிறகு ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய்க்கும், அதன்பிறகு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கும் வந்தது. அதன் பின்னர் திரு ஜெயலலிதா அம்மையார் களத்தில் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.

 கோயில்களில் அன்னதானம் திட்டம் எல்லாம் உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட எல்லா கோயில்களிலுமே மதிய உணவு ஓரளவுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. இன்றைக்கு அரிசி சோறு கிடைக்காமல் பட்டினியால் மக்கள் இறந்தார்கள் என்ற செய்தி இல்லாமலே போய்விட்டது

 இந்த முன்னேற்றம் ஒன்றும் இந்தியா முழுக்க கிடையாது 60 ஆண்டுகளில் தமிழகம் தான் சாதித்துள்ளது. சாதாரண கூலி வேலை பார்ப்பவர்களுக்கு கூட அரிசி சோறு என்பது அன்றாட வாழ்வில் மிக எளிதாக கிடைக்கும் உணவாய் மாறிப்போனது.

அந்த காலத்தில் புழுத்துப்போன அரிசியை சாப்பிட்டதில் இருந்து, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரைவள்ளி கிழங்கு, அப்புறம் இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை என்றெல்லாம் மக்கள் அனைவரும் சந்தித்திருக்கிறார்கள். 

இன்றைக்கு நியாயமான விலைக் கடைகளில் கிடைக்க கூடிய அரிசி, பழைய அரிசியை ஒப்பிடும்போது மிகச் சிறப்பான அரிசி தான். 

வட மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது உணவு தன்னிறைவடைந்ததில் தமிழகம் வெகு தூரம் முன்னேறி வந்துள்ளது. 

ஆனால் அரசியல்வாதிகள் தங்களுடைய சுய லாபத்திற்காக சில்லறை அரிசியை ஆடு, மாடு, கோழி திண்ணும் மாதிரி இருக்கிறது என்று கேலி பேசுகிறார்கள். இது மல்லாந்து படுத்துக் கொண்டு துப்புவதற்கு சமம். 

இரு வேறு காலங்களையும் பார்த்த மக்கள் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். உணவு பிச்சை எடுத்து சாப்பிட்ட காலம் காணாமலே போய்விட்டது. பஞ்சத்தால் உணவு கிடைக்காமல் மனிதன் இறந்து போனான் என்ற செய்தி முழுமையாகவே அழிந்துவிட்டது 

இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டுமானால் புதிய திட்டங்களை கூறட்டும் நமக்கு நாமே கொச்சைப் படுத்திக் கொள்ள வேண்டாம்.

அரசியல் என்பது திட்டமிட்டுப் பொய் சொல்லும் கலையைத் தவிர வேறொன்றும் இல்லையா?வால்டேர். 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...