சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 4 August 2026

அபத்தங்களின் ஆபத்து

 அபத்தங்களை நம்ப வைப்பவர்களால், உங்களைக் கொடூரமாகச் செய்ய வைக்க முடியும்.-வால்டேர் 

— . 



உலகில் உள்ள உயிரினங்களிலேயே மிக உயர்ந்த உயிரினம் மனித இனம் தான். ஏனென்றால் அதுதான் ஆறறிவு படைத்தது. பகுத்தறிவு கொண்டது, சமூகமாக இணைந்து வாழக்கூடியது. சிந்தனையை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதன் மூலமாக, அறிவியல் ஆராய்ச்சிகள் மூலமாக, இயற்கையை தன்வசப்படுத்தி மிக உன்னத நிலையில் வாழக்கூடிய இனமாக மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கிறான். 
அந்த மனிதன் பூகோள நிலை, வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப, பல்வேறு இனங்களாக மொழி பேசுபவனாக பல்வேறு கலாச்சாரங்கள் கொண்டவனாக, மதங்கள் போன்ற கட்டமைப்பை கொண்டவனாக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ஆனாலும் பொருளாதார ஏற்றத்தாழ்வு, ஆண்டான் அடிமையாக, பணக்காரன் ஏழையாக, முதலாளி தொழிலாளியாக பிரதானமான பிரிவினையோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். 
இந்த பிரிவினையை தக்க வைத்துக் கொள்வதற்காக ஆள்பவர்கள், பணம் படைத்தோர், ஆட்சியாளர்கள் வேறு தந்திர உபாயங்களை காலம் காலமாக கடைபிடித்து வருகிறார்கள். அதற்கு அவர்கள் மிகப் பிரதானமாக பயன்படுத்துவது மதம் என்ற கேடயத்தையும்,இன, சாதிய பிரிவினைகளையும், மூடநம்பிக்கைகளையும் தான். அதற்காக அவர்கள் சகல விதமான வித்தைகளையும் கையாண்டு வந்திருக்கிறார்கள்.

அதை நியாயப்படுத்த அவர்கள் ஏராளமான புராண புளுகுகளையும் அபத்தங்களையும் மக்கள் மண்டையில் ஏற்றி வந்துள்ளனர். இக்கொடுமைகளை எதிர்த்து கேட்ட கேள்வி புத்தர், மகாவீரர், சாக்ரடீஸ் என ஏராளமான சிந்தனைவாதிகளை துன்புறுத்தி உள்ளனர். மக்களிடம் இருந்து ஒதுக்கி வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.அவர்களது மார்க்கங்களை அழித்திருக்கிறார்கள். பலரை படுகொலை செய்து உள்ளனர். இது காலம் காலமாக நடந்து வருகின்ற கொடுமை தான். இதற்கு ஏராளமான உதாரணங்களை நம்மால் காண முடியும்.
 வரலாற்றில் மிகப்பெரிய உதாரணம் ஜெர்மனியில் நாசிசத்தை உருவாக்கிய ஹிட்லர் தான். ஆரியர்கள் தான் அதாவது ஜெர்மானியர்கள் உலகை ஆளப்பிறந்தவர்கள். தங்கள் இனம் தான் உலகின் மிக உயர்ந்த இனம் என்று ஏராளமான அபத்த சிந்தனைகளை ஜேர்மனியர்கள் மண்டையில் ஏற்றி வைத்தார்கள்.நாசிசத்தை எதிர்த்து கேள்விகள் 
கேட்கக்கூடிய பொதுவுடமைவாதிகள், தொழிற்சங்க வாதிகள், யூதர்கள் என்று கோடிக்கணக்கான பேரை கொன்று குவித்தார்கள். அவர்களின் புத்தகங்களை எரித்தார்கள். கருத்துக்களை நசுக்கினார்கள். அவர்களின் அபத்தமான கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்களை கொடூரமானவர்களாகவே மாற்றி விட்டார்கள்... 

இவ்வளவு ஏன் நம் நாட்டில் சாதி பிரிவினைகளை மண்டையில் ஏற்றி பிறப்பின் அடிப்படையில் பிரம்மனின் நெற்றியில் பிறந்தவர்கள், தோளில் பிறந்தவர்கள், இடுப்பில் பிறந்தவர்கள், பாதத்தில் பிறந்தவர்கள் என நான்கு வர்ணகோட்பாட்டை நம் தலையில் திணித்துவிட்டு, இக்கொடுமைகளை சனாதனத்தின் பெயரால் மாற்ற முடியாதது என்று அபத்தமானவைகளை தலையிலேற்றி நம்பவைத்தார்கள். 

மக்களிடையே மத, ஜாதிய விரோத மனபாவங்களை தினித்து மக்களை நிரந்தர அடிமைகளாக விட்டனர்.

 இதன் விளைவால் உருவான கலவரங்கள் எத்தனை? இறந்தவர்கள் எவ்வளவு பேர்? உண்டான சேதங்கள் எவ்வளவு? நாடு அடைந்த தீங்கு எவ்வளவு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். 

வரலாற்றில் இருந்து பாடம் கற்போமாக! பகுத்தறிவோடு சிந்திப்போமாக!

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...