பொதுவாகவே நம் எல்லோருக்குமே தந்தை, தாயார் பிறந்தநாள் தெரிந்திருக்கலாம் ஆனால் அவர்களுடைய தந்தை தாயார், முன்னோர்கள் பெயர் வேண்டுமானால் தெரிந்திருக்கலாம். பிறந்த தேதி தெரிந்து இருக்க வாய்ப்பு குறைவு. அதேபோல அவர்களுடைய நினைவை போற்றுகின்ற வகையிலே புகைப்படங்கள் பெரும்பாலும் இருந்திருக்காது. அவ்வாறு அவர்களுடைய பிறந்தநாளையோ, இறந்த நாளையோ நினைத்து கொண்டாடும் வழக்கமும் நம்மிடையே இல்லை. எப்படியோ இங்கு ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை என்று வருடத்திற்கு இருமுறை முன்னோர்களை நினைத்து திதி கொடுக்கும் வழக்கமோ அல்லது நினைத்துப் பார்க்கும் வழக்கமோ இருக்கிறது.
என்னுடைய தாத்தா அதாவது அப்பாவின் அப்பா ஆண்டியப்பன் ஐயா அவர்களுடைய நூறு வருடத்திற்கு முந்தைய புகைப்படம் எனக்கு கிட்டியது. அதை பெரிதுபடுத்தி வண்ணமேற்றி வைத்துள்ளேன். சரியாக இந்த புகைப்படம் எடுத்த தேடதியோ, வருடமோ தெரியாது. ஆனால் நூறு வருடங்களுக்கு முந்தையது என்பது மட்டுமே தெரியும். அவருடைய பிறந்த நாளும் தெரியாது. ஆனால் சிறுவயதில் அவருடைய பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டில் 1905 வருடம் பார்த்த நினைவு நன்றாக இருக்கிறது. அப்பாவின் பிறந்த தேதி 5.8. 1925 அம்மாவின் அப்பாவின் பிறந்த தேதி 28 2 1901 என்பது மட்டும் நிச்சயமாக தெரியும். ஏனென்றால் அவருடைய கடவுச்சீட்டு என் கைவசம் இருந்தது .ஆண்டியப்பன் அய்யாவின் கடவுச்சீட்டு எப்போதோ தொலைத்து விட்டோம். முன்னோர் நினைவுகளை எல்லாம் போற்றி பாதுகாக்கின்ற வழக்கமில்லாத காரணத்தாலோ அல்லது முறையான வீடு, வசதியான வீடு பாதுகாக்கும் ஏற்பாடுகள் இல்லாததாலோ பல பொருட்களை தொலைத்து விட்டோம். நினைவுகள் மட்டுமே நிலைத்து இருக்கின்றன. ஆண்டியப்பன் ஐயா மிகச் சிறுவயதிலேயே பர்மா எனும் மியான்மருக்கு சென்று தங்கிவிட்டார். என் தந்தையார் சொல்லிய வரலாற்றின் படி அவருக்கு முந்தைய மூன்று தலைமுறைகளுமே ஒற்றை ஒற்றை ஆண் வாரிசுகள் மட்டுமே இருந்ததால், அங்காளி பங்காளி என்று யாரையுமே தெரியாது. சிறந்த ஊரான மலம்பட்டியை விட்டு பர்மா சென்றவர், உறவினரும் அவரது நெருங்கிய நண்பருமான புலவர் சேவுகன் அய்யா அவருடைய சகோதரியான முத்தம்மா ஆச்சியை திருமணம் செய்து கொண்டார். அவரது ஒரே மகனான எனது தந்தையார் சீனிவாசன் அவர்களும் சிறுவயதிலேயே ஐந்தாம் வகுப்பு முடித்த பின்னர் 1930 களில் பர்மா சென்றுவிட்டார். இவர்கள் போதாத காலம் இரண்டாம் உலகப் போர் வெடித்தது ஜப்பானிய படையெடுப்பின் காரணமாக அங்கிருந்த தமிழர்கள் பர்மாவை காலி செய்துவிட்டு கிளம்ப வேண்டிய நிலைமை ஏற்பட்டது அப்பா சிறு பையன் என்பதால் எப்படியோ கப்பலில் ஏற்றி அனுப்பி விட்டார்கள் ஐயா பர்மாவில் இருந்து நடந்தே இந்தியாவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார் சம்பாதித்த பணத்தை எல்லாம் அங்கேயே விட்டுவிட்டு ஆள் மட்டும் மிச்சம் வந்து சேர்ந்தனர் பின்னர் இலங்கை சென்று தொழில் செய்து இருக்கிறார் அங்கும் உடல் நல குறைவு காரணமாகவோ மாறிய அரசியல் சூழ்நிலை காரணமாகவோ மீண்டும் இந்தியாவிற்கு வந்துவிட்டார்.ஏதேதோ சுயதொழில் செய்து காலம் கழித்திருக்கிறார். தனது இறுதி காலம் வரை வெள்ளலூர் கிராமத்திலேயே வாழ்ந்து அறுபத்து ஏழாவது வயதில் காலமானார். அவர் தனது கடந்த காலம் குறித்து வருந்தியதும் இல்லை. தற்பெருமை பேசியதும் இல்லை. யாரிடமும் கடன் வாங்கியோ, கையேந்தியோ பிழைத்திடவில்லை.
சுயமரியாதை நேர்மை பொறுமை ஆகியவற்றிற்கு இலக்கணமாக வாழ்ந்து சென்றவர், எங்களுக்கு மிச்சமாக விட்டு சென்றது அவரது புகழை மட்டுமே... இந்தப் புகைப்படம் எந்த ஆண்டு எங்கு எடுக்கப்பட்டது என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை ஆனால் நூறு ஆண்டுகள் நிறைவாய் இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது அவருடைய நினைவுகளை போற்றி மகிழ்கிறேன்.

No comments:
Post a Comment