கூற்றம்
சீனி கார்த்திகேயன்.
*****************'*
தமிழ் தொன்மையான மொழி, செழுமையான மொழி, வளமையான மொழி, செம்மொழி என்பதற்கு எடுத்துக்காட்டாய் தொன்மை வாய்ந்த சொற்கள் ஏராளமாய் குவிந்து கிடப்பதை காணலாம்.
கூற்றம் என்ற சொல்லிற்கு பகுதி, கொடும்பகை, சொல், நமன், கொடும்பகைவன், அழிவு , நாட்டின் பகுதி அழிவுண்டாக்குவது என பல பொருள் உள்ளதை காணலாம்.
முதலில் நாட்டின் கூற்றம் என்ற சொல் எவ்வாறெல்லாம் தமிழ் இலக்கியங்களிலே புழங்கியுள்ளது என்பதைக் காணலாம்.
நான்கு நாடுகள் அடங்கியது ஒரு கூற்றம் என்று சோழர்கள் காலத்தில் இருந்தது..சோழர்கள் காலத்தில் நான்கு நாடு அமைப்பில்(கூற்றம்) ஒன்று, அதற்கொரு தலைநகரம்... அந்த நாடு வளநாடு என்று அழைக்கப்படும்.
உதாரணம்- காசவளநாடு, கோநகர் நாடு, தென்னவநாடு,கீழ்வேங்கை நாடு
தஞ்சையின் சுற்றுப்புற பகுதிகள் நாடு என்ற அமைப்பின் கீழ் நிர்வாக வசதிக்காக சோழர்கள் காலத்தில் இருந்ததாக தெரிகிறது. இந்த நாடு என்ற அமைப்பில் 18 கிராமங்கள் அடங்கியது ஒரு நாடாக கருதப்படும்.
சேற்றூர்க் கூற்றம்
கிபி 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருநள்ளாறு கோவில் கல்வெட்டு ஒன்றில் இக்கூற்றம் குறிப்பிடப்பட்டுள்ளது. அருமொழி தேவ வளநாட்டிலிருந்து (காலம் கிபி 1068) இக்கூற்றம் 13 ஆம் நூற்றாண்டு வரை வழக்கில் உள்ளது. இன்றைய கும்பகோணம் நன்னிலம் வட்டங்களின் சில பகுதிகள் சேற்றூர் கூற்றத்தின் பகுதிகளாகும். இதன் தலைநகரம் 'சேற்றூர்' என்பதாகும்
குண்டூர் கூற்றம் என்ற பெயரில் சேரநாட்டின் பகுதி இருந்ததாக சான்றுகள் உள்ளன.
பண்டைய சேரநாடு நிர்வாக வசதிக்காகப் பல கூற்றங்களாகப் (பிரிவுகள்/நாடுகள்) பிரிக்கப்பட்டது. குடபுலம், சேர்ப்பு எனப் பலவாறு அழைக்கப்பட்ட இப்பகுதி, சேரமான், வானவன், இரும்பொறை, குட்டுவன், பூழியன் போன்ற மரபுப்பெயர்களைக் கொண்ட அரசர்களால் ஆளப்பட்டது.
சேரநாட்டின் முக்கிய கூற்றங்கள் மற்றும் பகுதிகள்:
குடநாடு: சேரர்களின் மையப்பகுதியாகக் கருதப்படும் கொங்கு மற்றும் கேரளா நிலப்பகுதி.
பூழிநாடு: பூழியர்கோ, பூழியன் என்று அழைக்கப்பட்ட அரசர்கள் ஆண்ட பகுதி.
குட்டநாடு: குட்டுவன் என்ற அரச மரபினர் ஆண்ட நிலப்பகுதி, இது இன்றைய ஆலப்புழை, கோட்டயம் பகுதிகளை உள்ளடக்கியது.
வேநாடு: கன்னியாகுமரி முதல் கொல்லம் வரையிலான தெற்குப் பகுதி.
கொங்கு நாடு (கொங்கு மண்டலம்): சேரர்களின் உள்நாட்டுப் பகுதியான இன்றைய கோவை, ஈரோடு, சேலம் மாவட்டங்களை உள்ளடக்கியது.
வேள் எவ்வி மிழலைக் கூற்றத்தின் தலைவன். மிக்க கொடையாளனாகவும், மற மாண்பினனாகவும் திகழ்ந்தவன். "எவ்வி இழந்த வறுமை யாழ்ப்பாணர், பூவில் வறுந்தலை போல (குறு.19) என இவனது கொடைச் சிறப்பைப் போற்றியுள்ளனர். மாங்குடி கிழார், கபிலர், வெள்ளெருக்கிலையார் முதலியோராற் போற்றிப் பாடப்பெற்றவன் இவன் தலையாலங்கானத்து நெடுஞ் செழியனால் வெற்றி கொள்ளப்பட்டவருள் இவனும் ஒருவன்.
வேளிர் குலத்தைச் சேர்ந்த எவ்வியின் ஆட்சிக்குட்பட்ட மிழலை, முத்தூறு ஆகிய ஊர்களின் பெயர்களைக் கொண்ட மிழலைக்கூற்றம், முத்தூர்க் கூற்றம் ஆகிய நாட்டுப் பெயர்கள் பிரிவுகள் கி.பி. 5-ம் நூற்றாண்டிலிருந்து வழக்கிலிருந்து கல்வெட்டுகளால் புலனாகிறது. இத்தகைய நாட்டுப் பிரிவுகள், வேளாண்மை விரிவாக்கத்துடன் தொடர்புடையவை.
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயக் கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி !புறநானூறு 3
மருந்தில் கூற்றம் என்னும் நிலப்பகுதியை நீ வென்றாய். யானைத் தலையில் இருந்துகொண்டு போரிட்டு வென்றாய்.
மருந்து இல் கனிச்சி வருந்த வட்டித்துக் கூற்றுவெகுண்ட ன்ன புறநானூறு 42
நீயோ கூற்றுவன் போல இருபெரு வேந்தர்களின் மண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய்.
கூற்றம் என்ற சொல்லானது நமன், எமன், கொடும்பகைவன், அழிவு என்ற பொருள்பட இலக்கியங்களில் கையாளப்பட்டிருப்பதைக் காணலாம்..
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்குள்-குறள் 269
தவம் செய்வதால் உண்டாகும் ஆற்றலை பெற்றவர்கள், எமனையும் (கூற்றம்) வெல்லுதல் (குதித்தல்) இயலும். தவத்தால் வரும் உறுதிப்பாட்டால் சாவையும் வெல்ல முடியும்
அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம் ஆம்" சிலப்பதிகாரம்
சிலப்பதிகாரம் கூற்றத்தை சாதாரணமாக மரணமாகக் காட்டாமல், சமூக நீதி, அறம் மற்றும் தர்மத்தின் தரமாக சித்தரிக்கிறது.
பழமொழி நானூறு (பாடல் 183) இதே கருத்தை " கூற்றம் குதித்து உய்ந்து அறிவாரோ இல்"
கூற்றம் (எமன்) பாய்ந்து உயிரைக் கவரும்போது, உலக நன்மைகளை (செல்வம், இளமை, அழகு) நம்பி தப்பிப் பிழைத்தவர் ஒருவரும் இல்லை.
“கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்கும் சூழ்ச்சி” (சூளாமணி.துறவு 18)
இப்பாடல், பல்வேறு இன்னல்களை உண்டாக்கி, நோய்களைப் பரப்பி, உயிர்களை வலிந்து வாங்கும் இயல்புடைய இயமனைக் (கூற்றன்) கடந்து உயிர் பிழைக்கும் நுட்பமான சூழ்ச்சியை (ஞானம்/தவ வலிமை) தாங்கள் கற்றதில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமூலர் அருளிய திருமந்திரத்தின் (பாடல் 172) முதலாம் தந்திரத்தில், " கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே" என்ற வரி, செல்வம் நிலையற்றது என்றும், உடம்பு. இருக்கும்போதே சிவனை வணங்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. எமன் (கூற்றன்) உயிர் பறிக்க வரும்போது, முன்கூட்டியே சிவனை அடைந்து ஞானம் பெற்றிருந்தால், அந்த எமனையே உதறித் தள்ளிவிடலாம் (குதிக்கலாம்) பொருள்.
“ இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஓரீஇ,
கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்
பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்
'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும்.
(நாலடியார் 6)
இதன் பொருள், ஆயுள் காலம் முடிந்த பிறகு எமனைக் கடந்து பிழைத்தவர்கள் இந்த உலகில் இல்லை என்பதாகும். நிலையற்ற செல்வத்தைச் சேர்த்து வைக்காமல், இப்போதே பிறருக்கு வழங்கி அறம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
அறிவின் அறநெறி; அஞ்சுமின் கூற்றம்;
பொறுமின் பிறர்கடுஞ்சொல்; போற்றுமின் வஞ்சம்;
வெறுமின் வினைதீயார் கேண்மை; எஞ்ஞான்றும்
பெறுமின் பெரியார்வாய்ச் சொல். இது நாலடியார் (பாடல் 172)
சொல்லும் நல்வாழ்வு நெறிமுறைகள். அறநெறியைப் பின்பற்றுதல், மரணத்தை (கூற்றம்) நினைத்து அஞ்சுதல், பிறர் கடுஞ்சொல்லைப் பொறுத்தல், வஞ்சக எண்ணங்களை ஒழித்தல், தீயவர்களின் நட்பை வெறுத்தல், மற்றும் எப்போதும் பெரியோர்களின் அறிவுரைகளை (வாய்மொழி)க் கேட்டு நடத்தல் போன்றவற்றை வலியுறுத்துகிறது
பொருளுரை:அறத்தின் நெறியை அறியுங்கள்! எமனுக்கு அஞ்சுங்கள்! அறியார் கூறும் கடுஞ் சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள்! வஞ்சனைக் குணம் உங்களிடம் வராதபடி பாதுகாத்துக் கொள்ளுங்கள்! தீயோர் நட்பை வெறுத்து ஒதுக்குங்கள்! எப்போதும் பெரியோர் அறவுரைகளைக் கேளுங்கள்!
கல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல் கூற்றம் அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம், கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.
இது ஔவையார் அருளிய மூதுரை (பாடல் 27) ஆகும்.
எது, எதெல்லாம் கூற்றம் என்று ஔவையார் பட்டியலிடுகிறார்..
படிப்பறிவு இல்லாதவர்களுக்குப் படித்தறிந்தவர் சொல்லும் சொல் கூற்றம்.
அறநெறியைப் பின்பற்றாதவர்களுக்குப் பிறர் பின்பற்றும் அறநெறி கூற்றம்.
வாழை மரத்துக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்.
இல்லத்தாரோடு சேர்ந்துபோகாமல் முரண்பட்டு நிற்கும் பெண் நல்வாழ்வுக்குக் கூற்றம்.
கூற்றம் = சாகடிக்கும் தெய்வம்
பெண்ணுக்கு அறிவுரை கூறிய ஔவையார் ஏனோ ஆணுக்கும் பொதுவாக கூறவில்லை என்று தெரியவில்லை...
கல்லா ஒருவருக்கு தம் வாயில் சொல் கூற்றம்; மேல் இலை வாழைத் தான் ஈன்ற காய் கூற்றம்; அல்லவை செய்வார்க்கு அறம் கூற்றம்; கூற்றமே, இல் இருந்து தீங்கு ஒழுகுவாள்
இது விளம்பிநாகனார் இயற்றிய நான்மணிக்கடிகை (பாடல் 82) நூலில் இடம்பெற்றுள்ள ஒரு நீதிப் பாடல். கல்வி, ஒழுக்கம் மற்றும் குடும்ப உறவுகளுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே எமனாக (கூற்றம்) மாறிவிடுவார்கள் என்ற நான்கு முக்கிய கருத்துக்களை இது கூறுகிறது
இதுவும் ஔவையார் மொழிகளையே மறுபதிப்பு செய்கிறது.
நனி பேதையே, நயன் இல் கூற்றம் !
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை; புறநானூறு 227
மிகவும் அறிவற்ற, நடுவு நிலைமையற்ற கூற்றமே!. அடுத்து விளைச்சல் பெறத் தேவையான விதையைச் சாப்பிட்ட அறிவற்ற உழவனைப் போல, உனக்கு உணவளிக்கும் வித்தாக இருந்த கிள்ளிவளவனை அழித்து, உனது பசியைத் தீர்த்துக்கொண்டாய் (இனி உனக்கு யார் உணவளிப்பார்?).
கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு
நோய் உழந்து வைகிய உலகினும், மிக நனி
நீ இழந்தனையே, அறன் இல் கூற்றம் ! புறநானூறு 230
அறமில்லாத கூற்றுவனே, பசியால் துன்புறும் உலகை விட, அந்த வீரன் இறந்ததால் நீ இழந்தது மிக அதிகம். இவன் உயிருடன் இருந்தால் போர்க்களத்தில் பல வீரர்களை நீ வென்றிருக்கலாம்.
ஆற்றானை ஆற்று என்று அழியாமை முன்இனிதே
கூற்றம் வரவு உண்மை சிந்தித்து வாழ்வினிதே
ஆக்கம் அழியினும் அல்லவை கூறாத
தேர்ச்சியின் தேர்வானது இல். இனியவை நாற்பது
ஒருவனுக்கு ஒரு வேலை வரவில்லை என்றால் விட்டு விடவேண்டும். வரதா ஒன்றை செய் என்று அவனை வற்புறுத்தக் கூடாது. அப்படி வற்புறுத்தாமல் இருப்பது இனிமையானது.
மரணம் எப்போது வேண்டுமானாலும் வரும் என்ற நினைவோடு வாழ்ந்தால் நல்லதே செய்யத் தோன்றும். எப்போது வேண்டுமானாலும் போய் விடுவோம். இருக்கும் வரை நாலு நல்லது செய்துவிட்டு போவோம். வாழ்வு ஒரு நாள் முடியும். கூற்றுவன் வருவது நிச்சயம் என்று எண்ணி வாழ்வது இனிமை.
இன்பமும், துன்பமும், உயர்வும் தாழ்வும், செல்வம் வருவதும், போவதும் மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும். செல்வம் குறைந்த போது அறம் அல்லாதவற்றை கூறாமல் இருப்பது நலம்
சிலம்பிற்குத் தன்சினை கூற்றம் நீள்கோடு
விலங்கிற்குக் கூற்றம் மயிர்தான் - வலம்படா
மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன் பார்ப்பு
நாவிற்கு நன்றல் வசை சிறுபஞ்சமூலம். 11
சிலந்திக்குத் தன் முட்டையும், விலங்குகளுக்கு (மான், கொம்புடைய விலங்கு) நீண்ட கொம்பும், வலிமை வாய்ந்த விலங்குகளுக்கு உடம்பில் வளரும் மயிரும், நண்டுக்குத் தன் குட்டிகளும், நாக்கிற்கு நன்மை செய்யாத (தீய) பேச்சும் எமனுக்கு (கூற்றம்) ஒப்பான அழிவைத் தரும் என்பதாகும்.
(கூற்றம் = எமன், கோடு = கொம்பு, வலம் = வெற்றி, மா = மான், ஞெண்டு = நண்டு, பார்ப்பு = குஞ்சு)
சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து உறுதிப் பொருள்களும் மக்களை எச்சரிக்கை செய்து வாழ்வை நெறிப்படுத்துவனவாய் அமைகின்றன. அவை:
1. நற்குணம் உடையவரைச் சேருங்கள்
2. பிறர் பொருளைக் கவர நினைக்காதீர்கள்
3. தீக்குணம் உடையவரை ஒழியுங்கள்
4. தீய சொற்களைப் பேசாதீர்கள்
5. இயமன் வருவது உறுதி
என்பனவாகும்(26).
ஆற்றானை யாற்றேன் றலைப்பானு மன்பின்றி ஏற்றார்க் கியைவ கரப்பானுங் -கூற்றம் வரவுண்மை சிந்தியா தானுமிம் மூவர்நிரயத்துச் சென்றுவீழ் வார் .திரிகடுகம் 45
துன்பத்தைப் பொறுக்க முடியாதவனைப் பொறுத்துக்கொள் என்று துன்புறுத்துபவன், தன்னிடம் ஒன்று வேண்டி வருபவருக்கு, அன்பில்லாமல் தன்னிடம் இருப்பதை மறைத்து பொய் சொல்பவன்,சாவு வரும் என்பதை அறியாமல், காலம் கடத்துபவன்,இச்செயல்களைச் செய்பவர்கள், நரகத்தில் சென்று வீழ்வார்கள், அதாவது இழிவான நிலையை அடைவார்கள்.
"தன்னை அறியாது தான்நல்லன் என்னாதுஇங்(கு)
இன்மை அறியா(து) இளையார்என்று ஓராது
வன்மையில் வந்திடுங் கூற்றம் வருமுன்னம்
தன்மையும் நல்ல தவஞ்செய்யும் நீரே" திருமந்திரத்தில் (முதல் தந்திரம் - 16. அறஞ்செய்வான் திறம் - பாடல் 255) வரும் மிகச் சிறந்த பாடலாகும். எமன் உயிர் பறிக்க வரும். முன், தவம் மற்றும் அறச்செயல்களைச் செய்ய வேண்டும் என்பதை இந்தப் பாடல் வலியுறுத்துகிறது
உயிரை எடுக்க வரும் எமன் எம்மை எப்படிப்பட்டவர் என எண்ணிப் பார்க்கமாட்டான். எம்மை பாவம், நல்லவன், ஏழை, சிறுபிள்ளை என விட்டு விடமாட்டான். எமன் வலிமையுடையவன். எனவே அவன் உயிரைக் கவர்ந்து செல்வதற்கு முன்பாக நல்லதான தானம், தவம் என்பனவற்றைச் செய்யுங்கள் மானுடர்களே...
கண்டேன் நெஞ்சம்; கனிவாய்க் கனிவாய் விடம், நான் நெடுநாள்
உண்டேன்; அதனால், நீ என் உயிரை முதலோடு உண்டாய்;
பண்டே, எரிமுன், உன்னை, பாவி! தேவி ஆகக்
கொண்டேன் அல்லேன்; வேறு ஓர் கூற்றம் தேடிக் கொண்டேன்.
அயோத்தியா காண்டம், நகர் நீங்கும் படலம். 47 ராமாயணம்
கைகேயியைப் பாவி என்று திட்டும் தசரதன், "உன் இனிய வாயிலிருந்து வரும் வார்த்தைகள் விஷம் என்று நான் நெடுநாளாகப் பருகி வந்தேன். அதனால், நான் என் உயிரையே இழந்தேன். நெருப்பு முன்னிலையில் உன்னை நான் தேவியாக (மனைவியாக) ஏற்றுக்கொள்ளவில்லை, நான் ஒரு மரணத்தை (கூற்றம்) தேடி ஏற்றுக்கொண்டேன்" என அங்கலாய்க்கிறான்.
தருக என் தேர்; எழுக என்படைகள்;நிகழ்க போர்;கூற்றமும் வானும் மண்ணும் அந்தச் சிறுவர்க்குத் துணையாக நிற்கட்டும் ராமாயணம்
என் தேரைக் கொண்டு வாருங்கள்; என் படைகள் எழட்டும்; போர் மூளட்டும்! அந்த இரு சிறுவர்களுக்கு (ராம, லக்ஷ்மணர்) உதவ கூற்றுவனும் (எமன்), வானமும், மண்ணும் (இயற்கை) கூட நிற்கட்டும், நான் கவலைப்படவில்லை
கம்பராமாயணத்தில் யுத்த காண்டத்தில், இராவணன் தன் தம்பி விபீஷணன் மற்றும் படைகளை இகழ்ந்து பேசி, தன் தேரையும் படைகளையும் கேட்டு, ராம-லட்சுமணரை (சிறுவர்கள்) எதிர்த்து இறுதிப் போர் செய்ய முனையும் காட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளது..
பண்டொரு நாள் கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ".
திருப்பாவை பத்தாம் பாடலில், ஆண்டாள் கதவை திறக்காத தோழியைப் பார்த்து, "முன்பு எமன் போன்ற இராமனிடம் தோற்று, தூக்கத்தை வரமாகப் பெற்ற கும்பகர்ணனும் தன் தூக்கம் அனைத்தையும் உனக்கே கொடுத்துவிட்டானோ?" என்று வியந்து, நீ ஏன் இன்னும் விழித்தெழுந்து பாவை நோன்பில் சேராமல் தூங்கிக்கொண்டிருக்கிறாய் என்று கேட்கும் பாடல் வரி இது.
"கூற்றம் "என்ற சொல்லுக்கு ஏராளமாய் பொருளிருந்தாலும், இலக்கியங்களில் பெரும்பாலும் நாட்டின் ஒரு பகுதி அல்லது மரணத்திற்கு காரணமான கூற்றுவன் எனப்படும்,எமனை பற்றியே பெரும்பாலும் கூறப்பட்டிருப்பது அறியலாம்.
இதன் மூலம் வரக்கூடிய பொதுவான கருத்து மனிதனுக்கு மரணத்தைப் பற்றிய எண்ணமும் பயமும் அதிகமாக இருப்பதே காரணம். இங்கு காலம் காலமாக படைப்பிற்கு ஒரு கடவுள், காத்தலுக்கு ஒரு கடவுள், அழித்தலுக்கு ஒரு கடவுள், கல்விக்கு, செல்வத்திற்கு, மரணத்திற்கு என்று நிறைய கடவுளர்களை பற்றி சொல்லப்பட்டிருக்கிறது .மற்ற கடவுளர்களை மனிதர்கள் வணங்கினாலும் ,மரணத்தை பற்றி அச்ச உணர்வு தான் அதிகம் காணப்படுகிறது.
பிறப்பு இறப்பு என்பது எவ்வுயிர்க்கும் பொது என்றாலும், மனிதர்களைப் பிறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் இறக்கச்செய்வதற்கு ஒரு கடவுளும் உண்டென்றும் மக்களின் பாவ புண்ணியங்களுக்கேற்ப ஒவ்வொருவரின் வாழ்நாளும் கணிக்கப்படுகின்றன என்றும் நம்நாட்டு மக்கள் நம்புகின்றனர். அவ்வாறு கணிக்கப்பட்ட மொத்த நாட்களும் முடிந்தபிறகு உயிரை வெளவதற்குக் கூற்றுவன் வருவான் என்ற நம்பிக்கை நம் மக்களிடையே பழங்காலந்தொட்டேஇருந்து வருவதை சங்க இலக்கிய நூல்களில் காணலாம். இந்நூல்கள் கூற்றுவனைப் பல பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. காலத்தைக் கணிப்பதால் அவன் 'கணிச்சி' எனப்பட்டான். இவன் நடுவுநிலைமையோடு செயல்படுவதால் 'நடுவன்' (இலக்கண விளக்கம், பொருளதிகாரம், நூற்பா எண்: 406) என்று பிற்காலத்தினரால் குறிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூற்றுவன் தொன்மம் எப்போது உருவாகியிருக்கலாம், கூற்றுவனின் ஆயுதங்கள் யாவை, எட்டுத்தொகை நூல்களில் இது தொடர்பாகச் சொல்லப்பட்டுள்ளது. செய்திகள் யாவை என்பன ஆயப்படவுள்ளன. குறிப்பாகக் 'கணிச்சி' என்ற மழுப்படையை அல்லது குந்தாலி என்னும் தோண்டும் கருவியைக் கூற்றுவன் பயன்படுத்துவதாகப் பண்டை நூல்கள் கூறுகின்றன. இது பிற்காலத்தில் பிறிதொரு கருவியாக மாறியது எப்படி என்பது ஆராயப்படவுள்ளது. இப்படி உயிர்களுக்குத் தீர்ப்பளிக்கும் நிலையில் ஓர் அறக்கடவுள் எனச் சித்திரிக்கப்பட்ட கூற்றுவன் எவ்வாறு சிவன், திருமால், முருகன் ஆகியோருக்கு அடங்கியவனாக மாற்றப்பட்டான் என்பதை சிவன் எவ்வாறு காலகாலனாக (எமனுக்கே எமனாக) மாறினான்
மாற்றரும் கூற்றம் என்ற தொன்மவியல் ஆய்வு என்ற கட்டுரையில் முனைவர் கி.சிவா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லுரி, மதுரை, - ஆய்வு 09 மே 2018 விவரிக்கிறார்.
பொதுவாகவே மனித உயிரினத்தின் மரணத்தின் மீது எப்போதுமே ஒரு பயம் உண்டு எல்லா மதங்களும் மரணத்தை கூற்றுவனின் தூதுவனாக அல்லது கூற்றமாக உயிரினத்தை பறித்திடும் செயலாக விளக்கி வருகின்றன. அதனால் தான் மரணம் இல்லாத பெருவாழ்வு அல்லது மரணத்திற்கு பின் மறுபிறப்பு இல்லாத சொர்க்கத்தை சென்றடைய வேண்டும் என்றெல்லாம் போதிக்கிறார்கள். பாவங்கள் செய்தால் நரகம், புண்ணியங்கள் செய்தால் சொர்க்கம் என்று சொல்கிறார்கள். பண்டைய இலக்கியங்களிலும் அறநெறிப் பிறந்து வாழ்ந்தால் கூற்றுவனுக்கு இரையாக நேரிடும் என்பதை வலியுறுத்திக் கூறுவதை ஏராளம் எடுத்துக்காட்டுகள் மூலமாக பார்த்தோம்.
சமண மதத்தை சார்ந்த இலக்கியங்கள் கூற்றத்தை காட்டி அறநெறி வாழ வலியுறுத்துகின்றனர். சைவ வைணவ நெறியை சார்ந்தவர்கள் கூற்றுவன் அல்லது எமனை காட்டி இறைவனிடம் சரணடையுமாறு தான் கூறுகிறார்கள்.
ஆனால் சிலப்பதிகாரம் மட்டும் ஒரு சமூக நீதியாக சமூக நெறியாக பார்க்கிறது. அற நெறியை கடைப்பிடிக்காது அரசியல் செய்வர், ஆட்சியாளர் அறத்திற்கே பலியாக நேரிடும் என புரட்சிகரமாக எச்சரிக்கிறது.
ஏனெனில் வரலாறு காட்டும் பாடமும் அதுதான். மனிதர்குல விரோதிகளாக செயல்பட்ட ஆட்சியாளர்கள் ஹிட்லரும் முசோலினியும் என்ன கதிக்கு ஆளானார்கள் என்பதை வரலாறு நமக்கு பாடமாக புகட்டுகிறது.எனினும் இன்று வரை உணர்ந்து கொள்ள ஆட்சியாளர்களே உலகெங்கும் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
**********'****
நட்பு தமிழ் வட்டம் மதுரை சார்பாக நடத்திய சொல் ஆய்வரங்கத்திற்காக நான் சமர்ப்பித்த கட்டுரை.
'
பொருள் செறிந்த நல்ல கட்டுரை. வாழ்த்துகள்... சீனியாரே.
ReplyDelete