நாம் வாழும் இப்பூவுலகு உயிர்க்கோளமாக மாற எவ்வளவு காலம் பிடித்தது தெரியுமா?
பூமி தோன்றி அது ஒரு உயிர்க்கோளமாக மாறுவதற்கு சுமார் 50 கோடி முதல் 100 கோடி ஆண்டுகள் வரை பிடித்தது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பூமி உருவான காலம் முதல் அது உயிர்கள் வாழத் தகுந்த சூழலாக மாறுவதற்கு பல்வேறு நிலைகளை கடந்தது.
பூமி ஒரு வெற்றுப் பாறையாகத் தோன்றி, அதில் எளிய உயிர்கள் தோன்றி உயிர்க்கோளமாக மாற 100 கோடி ஆண்டுகள் வரை எடுத்தது. ஆனால், அது இன்று நாம் காணும் செழிப்பான, சிக்கலான தாவர-விலங்கினக் கோளமாக மாற 400 கோடி ஆண்டுகளுக்கும் மேலானது.மனித இனம் குரங்கு போன்ற மூதாதையர்களிடமிருந்து பரிணமித்து உருவாக சுமார் 6 முதல் 7 மில்லியன் ஆண்டுகள் பிடித்தன.
சரி இவ்வளவு கதையும் எதற்கு என்று கேட்கிறீர்களா?
இவ்வளவு காலம் பிடித்து உருவான ஒரு உயிர்க்கோளத்தை எவ்வளவு விரைவாக அழித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை காண்பதற்காக மட்டுமே
பூமி வாழத் தகுதியற்றதாக மாறும் பாதையில் உள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். புவி வெப்பமயமாதல் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் இது கணிக்கப்பட்டதை விட மிக வேகமாக உள்ளது.
'ஒரே பூமி' (One Earth) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிவியல் மதிப்பீடு, புவியின் காலநிலை அமைப்பின் முக்கியக் கூறுகள் முன்பு நினைத்ததை விட நிலைத்தன்மையின்மைக்கு மிக அருகில் இருக்கலாம் என்று எச்சரிக்கிறது.
கிரீன்லாந்து மற்றும் மேற்கு அண்டார்டிக் பனிப் படலங்கள், ஆர்க்டிக் நிரந்தரப் பனி, மற்றும் அமேசான் மழைக்காடுகள் உள்ளிட்ட முக்கியமான "திருப்புமுனைக் கூறுகள்" புவியின் தூண்களாகச் செயல்படுகின்றன.
அவை தங்களின் முக்கியமான வரம்புகளைத் தாண்டித் தள்ளப்படும்போது, இந்த அமைப்புகள் மீளமுடியாத மாற்றங்களுக்கு உள்ளாகலாம். இது ஒரு அமைப்பின் சரிவு மற்றொன்றை வேகப்படுத்தும் ஒரு அபாயகரமான தொடர் விளைவைத் தூண்டுகிறது. உதாரணமாக, உருகும் ஆர்க்டிக் பனியானது, அதிக வெப்பத்தை உறிஞ்சும் கருமையான கடல் பரப்புகளை வெளிப்படுத்துகிறது. இது கடல் நீரோட்டங்களைப் பலவீனப்படுத்தி, அமேசானை வறண்டு போகச் செய்து, இறுதியில் பெருமளவிலான கார்பன் இருப்புகளை மீண்டும் வளிமண்டலத்திற்குள் வெளியிடும்.
இந்தத் தொடர்ச்சியான பின்னூட்டச் சுழற்சி, பூமியை ஒரு "வெப்பமண்டல"ப் பாதையை நோக்கித் தள்ள அச்சுறுத்துகிறது. இது மனிதகுலம் தனது பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்தினாலும் கூட, புவி தொடர்ந்து வெப்பமடையும் ஒரு நிலையாகும்.
இந்தத் தனிப்பட்ட அமைப்புகள் எப்போது நிலைகுலையும் என்பதை ஆராய்ச்சியாளர்களால் இன்னும் துல்லியமாகக் கண்டறிய முடியாவிட்டாலும், உறுதியான ஆதாரத்திற்காகக் காத்திருப்பது ஒரு ஆபத்தான சூதாட்டம் என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர், ஏனெனில் ஒருமுறை அந்த வரம்பு கடக்கப்பட்டுவிட்டால், அதைத் திருப்புவது சாத்தியமற்றதாகிவிடும். இந்தப் பேரழிவு தரும் தொடர் விளைவைத் தவிர்ப்பதற்காக, புதைபடிவ எரிபொருள் நுகர்வை உடனடியாகக் குறைக்கவும், கார்பனைச் சேமிக்கும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு வலுவான பாதுகாப்புகளை வழங்கவும், மேலும் இந்தக் கோளின் நிலைகுலைவுப் புள்ளிகளைக் கண்காணிக்க ஒரு உலகளாவிய கண்காணிப்பு வலையமைப்பை விரைவாக நிறுவவும் விஞ்ஞானிகள் பரிந்துரைக்கின்றனர்.
உலகம் வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணம் பசுமை இல்ல வாயுக்கள் வளிமண்டலத்தில் அதிகளவில் அதிகரிப்பதே ஆகும். மனிதர்களின் பல்வேறு செயல்பாடுகளால் இந்த வாயுக்கள் வெளியாகி, சூரியனின் வெப்பத்தை பூமியிலேயே தக்கவைத்துக் கொள்வதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது.
உலகம் வெப்பமயமாதலுக்கான முக்கிய காரணங்களை பட்டியல் இட்டால் அனுமன்?! வால் போல் நீண்டு கொண்டே போகும்..
நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு போன்ற புதைபடிவ எரிபொருட்களை எரித்தல்களால் மின்சாரத்திற்காகவும் வாகனங்களுக்காகவும் எரிக்கும்போது கார்பன் டை ஆக்சைடு (CO2) அதிகளவில் வெளியாகிறது.
மரங்கள் காற்றில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி நமக்கு ஆக்சிஜனைத் தருகின்றன. காடுகளை அழிக்கும்போது, காற்றில் கார்பன் டை ஆக்சைடின் அளவு மிக வேகமாக அதிகரிக்கிறது.
கார், பைக், லாரி, விமானங்கள் போன்ற வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்படுத்தப்படுவதால் வளிமண்டலம் பெருமளவில் மாசுபடுகிறது நாம் தான் தொட்டதற்கெல்லாம் வாகனப் பயன்பாட்டைத்தானே நம்பி இருக்கிறோம்.
தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் நச்சுப் புகையும், சிமெண்ட் போன்ற பொருட்கள் தயாரிப்பின் போது வெளியாகும் வாயுக்களும் வெப்பத்தை அதிகரிக்கின்றன.
விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மாடுகள் போன்ற கால்நடைகள் செரிமானத்தின் போது மீத்தேன் (CH4) வாயுவை வெளியிடுகின்றன. மேலும், விவசாயத்திற்குப் பயன்படுத்தப்படும் ரசாயன உரங்கள் நைட்ரஸ் ஆக்சைடு வாயுவை உருவாக்குகின்றன.
குப்பைக் கிடங்குகளில் மட்கும் கழிவுகள் மற்றும் நெகிழிகளை எரிப்பது போன்றவற்றால் நச்சு வாயுக்கள் வளிமண்டலத்தில் கலக்கின்றன. இதைப் பற்றி சொல்லவே வேண்டாம் நெகிழி பயன்பாடு இல்லாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்கு எல்லாம் நெகிழி நயமாகிவிட்டது.
இது ஒரு புறம் இருக்க உலகை அழிவு பாதையில் எடுத்துச் செல்வதற்காக போர்த்திட்டங்களையும் ஆயுதப் போட்டிகளையும் உருவாக்கி சுற்றுச்சூழலை நாசம் செய்து வருகின்றனர் ஆயுத வியாபாரிகள் ஏவுகணை வீச்சு அதை வழிமறித்து தாக்குதல் ஏராளமாய் நாசவெடிகளை போடுதல் எல்லாம் வெறும் வானவேடிக்கை அல்ல உலகை வேகமாக அழிவு பாதையில் கொண்டு செல்வதற்கான பாதையே.
அதைப்பற்றி எல்லாம நாம் கவலைப்பட போகிறோம் இயேசு பெரியவரா? அல்லா பெரியவரா ?ராமன் பெரியவரா? என்று சாமியின் பெயரால் அடித்துக் கொள்வோம்... அப்படி இல்லை என்றால் அடுத்து எந்த சினிமா காரனை ஆட்சியில் அமர்த்தலாம் என்று யோசிப்போம் !!
(ஆதாரம்: ரிப்பிள், டபிள்யூ. ஜே., வுல்ஃப், சி., ராக்ஸ்ட்ரோம், ஜே., ரிச்சர்ட்சன், கே., வுண்டர்லிங், என்., கிரெக், ஜே. டபிள்யூ., வெஸ்டர்ஹோல்ட், டி., & ஷெல்ன்ஹூபர், எச். ஜே. (2026). ஒரு பசுமைக்குடில் பூமிப் பாதையின் ஆபத்து. ஒன் எர்த், 9(2), கட்டுரை 101565.)

ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய செய்திகள்
ReplyDelete