சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 16 September 2026

அறிவிலி

 அறிவிலியிடம் தர்க்கமறிவித்திடும் - அடுத்துமோர்

அறிவிலியின் வருகைதனை.... 


உலகத்திலேயே ஆகாத வேலை ஒன்று உண்டென்றால் அது அறிவிலியிடம் தர்க்கம் செய்வதுதான. 

தர்க்கம் செய்வதற்கு முன்னால் ஒருவேளை அறிவிலி என்று தெரியாதிருக்கலாம். ஆனால் தர்க்கம் செய்த பிறகு நிச்சயமாக தெரியும், அவன் அறிவிலி என்று. 

அவ்வாறு அறிவிலி என்று தெரிந்த பின்னும் அவனுடன் தர்க்கம் செய்வது நாமும் ஒரு அறிவிலி ஆகிவிட்டோம் என்று ஒப்புக் கொள்வது போலத்தான்.

தர்க்கம் செய்வது என்பது வெற்றி காண்பதற்காக அல்ல. அது விடயங்களை தேடுவதற்காக, ஒரு பொருளின் பல்வேறு தன்மைகளை, பல்வேறு முகங்களை பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்து தெரிந்து கொள்வதற்காக தான். 

தர்க்கம் செய்வதற்கு முன்பே ஒரு முடிவினை வைத்துக் கொண்டு அந்த முடிவிற்காகவே தர்க்கம் செய்வது என்பது போகாத ஊருக்கு வழி தேடுவதை போன்றது தான். 

ஆனால் இந்த உலகில் பலர் செய்யக்கூடிய காரியம் அதுதான். நிறைய பேர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக தர்க்கம் செய்வார்கள். கற்ற நுனிப்புல் கல்வியை வைத்துக்கொண்டு, தானே ஒரு முடிவை கையில் வைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவதற்காக தர்க்கம் செய்வோர்தான் அதிகம் இருக்கிறார்கள்.

 தர்க்கம் செய்யும்போது தன்னுடைய கருத்துக்கள் தோல்வி அடையும்போது தாங்க முடியாது ஆவேசப்பட்டு அவமரியாதையோடு நடந்து கொள்பவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். 

எதிராளியின் கருத்து என்னதான் என்பதை அறிந்து கொள்ளாமலேயே, அல்லது அறிந்து கொள்ள விரும்பாமலேயே தம் கருத்தை திணித்திடுவோர் அதிகம். 

நான் தர்க்கம் என்று சொன்னது உண்மையை தேடுவதற்காக விவாதம் செய்பவர்களை பற்றி மட்டுமே. தொலைக்காட்சிகளில் விவாத மேடைகளில் பங்கேற்று வெற்றுக்கூச்சலுடன் சண்டை போடுவதைப் பற்றி அல்ல. தமக்கு எதிராக தர்க்கம் செய்வோர் அறிவிலி என்று தெரிந்த பிண்ணும் தர்க்கம் செய்வது, இன்னும் ஒரு அறிவிலி இங்கு வந்து விட்டான் என்று நாமே பறை சாற்றிக் கொள்வது போலத்தான்.. 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...