புவியை காப்போம் என்று ஒரு தலைப்பு இன்று அதிகமாக பேசப்படுகிறது. நாமே பல முறை இவ்வாறு ஒரு தலைப்பிட்டு பேசுவதும், எழுதுவதுமாக இருக்கின்றோம். ஆனால் அறிவுப்பூர்வமாக யோசித்தால் உண்மையில் நாம் தான் புவியை காக்க போகிறோமா என்று நினைத்துப் பார்த்தால் மிக அபத்தமாக தோன்றும். ஏனென்றால் பூமி தான் இதுவரை நம்மை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. நேற்றும் காப்பாற்றிக் கொண்டிருந்தது. இன்றும் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. நாளையும் காப்பாற்றப் போகிறது. இப்போதுள்ள பிரச்சனை நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள இந்த புவியை கெடுக்காமல் இருக்கிறோமா என்பதுதான்.
சூரிய குடும்பத்தில் இப்புவி ஒன்று மட்டுமே உயிர்கள் வாழக்கூடிய தகுதி படைத்த உயிர்க்கோளமாக இருந்து வருகிறது.
இயற்கை வேதியல் பொருள்கள் மூலமாக மண், நீர், நிலம், காற்று ஆகியவற்றின் உதவியோடு ஏராளமான உயிரினங்கள் இயங்கி ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்து வாழக்கூடிய ஒரு உயிர் கோளமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. உயிரினங்கள் அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் சமநிலை பராமரிக்கப்பட்டு வருகிறது.
புவியானது தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் நீர்வட்ட பாதையில் சுற்றி வருவதால் இயற்கையாகவே பருவகால மாற்றங்களை கொண்டு தரையில் இருந்து நீர் ஆவியாகி மேகமாக ஆகாயத்திற்கு வருவதும் குளிர்படைந்து மீண்டும் மழை பொழிதலும் ஒரு சமச்சீரான நிலையை பராமரித்து வருகிறது புவியில் வாழும் உயிரினங்களிலேயே மனிதன் என்ற உயிரினம் தான் அறிவில் சிறந்து ஆய்வுகள் பல செய்து,
இயற்கை சக்தி தனதாக்கி முன்னேற்றங்கள் கண்டு பூ உலகை தனக்குரியதாக மாற்றிக் கொண்டான் அவ்வாறு நவீனத்திற்காக மாற்றும் போது அவன் இயற்கை அமைப்பினை சீர்திருத்துகிறோம் என்ற பெயரிலே அழிவு நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் பூ உலகு பல வகைகளும் பாதிக்கப்படுகிறது பருவ கால மாற்றங்களில் இருந்து இயற்கை சீற்றங்கள் வரை ஏராளமாய் காண வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது இப்போது மனிதன் செய்ய வேண்டியதெல்லாம் பூமியை காப்பாற்ற வேண்டியது அல்ல அழிவு நடவடிக்கைகளை குறைத்துக் கொள்வது மட்டுமே.
உண்மையில் நாம் இந்தப் புவியைக் காப்பாற்றவில்லை.நாம் நம்மையே காப்பாற்றிக் கொள்கிறோம்.மனிதர்கள் இல்லாமல் பூமியால் வாழ முடியும்...
ஆனால் தூய்மையான காற்று, தூய்மையான நீர், காடுகள், மண், பெருங்கடல்கள் மற்றும் பல்லுயிர் பெருக்கம் இல்லாமல் மனிதர்களால் வாழ முடியாது.
இருந்தும், நாம் மரங்களை வெட்டுகிறோம், ஆறுகளை மாசுபடுத்துகிறோம், காற்றை நஞ்சாக்குகிறோம், பிறகு ஒரு மரம் நடுவது ஒரு “தர்மம்” என்பது போல நடந்துகொள்கிறோம். விழா எடுக்கின்றோம் பூமியை காப்பாற்றுவது போல பீற்றிக்கொள்கிறோம்..
இயற்கையைப் பாதுகாப்பது பூமிக்குச் செய்யும் உதவி அல்ல.
அது ஒரு அடிப்படைத் தற்காப்பு.
ஏனென்றால், காற்று இல்லாதபோது, பணத்தால் உதவ முடியாது.
நீர் இல்லாதபோது, தொழில்நுட்பத்தால் உதவ முடியாது.
இயற்கை வீழ்ச்சியடையும்போது, தப்பிக்க வழியே இருக்காது.
எனவே மனிதர்களாகிய நாம் வாழ வேண்டும் என்றால் இயற்கையைக் காப்போம், ஏனென்றால் இயற்கை ஒவ்வொரு நாளும் நம்மைக் காப்பாற்றுகிறது.
No comments:
Post a Comment