சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 22 September 2026

தவநடிக பூபதி.

மனிதன் படைத்த படைத்த கலை வடிவங்களிலேயே மகத்தானது திரைப்படக்கலை தான். 

அது ஆழமாக மக்களிடையே பதிந்த அளவுக்கு வேறு எந்த கலையும் பதிந்திடவில்லை. 

கலைமகனின் தலைமகனாக போற்றப்படக்கூடிய உலகப் புகழ்பெற்ற திரைப்பட கலைஞன் சார்லி சாப்ளின் திரைப்படங்களில் ஒன்று பிஹைன் தி ஸ்கிரீன்.( Behind the screen.) 

கண்ணுக்குத் தெரியும் திரைக்காட்சியை உருவாக்குவதற்கு, திரைக்குப் பின்னால் எவ்வளவு பேர் கடினமாக உழைக்கிறார்கள் என்று காட்சிப்படுத்தியிருப்பார். 

உண்மையும் அது தானே.. ஆனால் புகழ்பெறுவதென்னவோ திரையில் தோன்றும் நடிகர்களே. 

ஏனென்றால் அவர்களுடைய காட்சிதான் மக்களின் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. 

குறிப்பாக கதாநாயகன் ஆடுவதும், பாடுவதும், சண்டை போடுவதும், உணர்ச்சிகளை கொட்டுவதுமான எல்லா வித்தைகளையும் செய்த மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறான். 

ஆனால் அதில் கூட ஏராளமான பேருடைய உழைப்பு இருக்கிறது. பாடுவது போல அவர் நடித்தாலும் பாடுவதற்கு வேறொருவர் இருக்கிறார். ஆடுவதற்கு காட்சி அமைப்பை உருவாக்கிட நடன கலைஞர்கள் இருக்கிறார்கள். சண்டை காட்சிகளில் மயிருக்கூச்செறியும் காட்சிகளில் உயிரைக் கொடுத்து சண்டை போடும் கண்ணுக்குத் தெரியாத ஸ்டண்ட் நடிகர்கள் இருக்கிறார்கள். ஏன் பேசுவது போல வாயசைத்தாலும் பின்னணி பேச வேறொருவர் இருக்கிறார். 

ஆனால் ஆரம்ப காலத்தில் தானே பாடி, ஆடி சண்டை போட்டு, உணர்ச்சிவயமாய் நடித்தே தீர வேண்டிய கட்டாயம் இருந்தது. காரணம் தொழில் நுட்ப வளர்ச்சி அவ்வளவு இல்லாத காலம். 

ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் டூப்புகள் கிடைத்து விட்டார்கள்.

 அப்படி பின்னணியில் வேறொருவர் பாடாமலே. டூப் போடாமலே பிரமாதமாக பாடி, சண்டை போட்டு, உணர்ச்சி கொப்பளிக்க நடித்த மாபெரும் கலைஞன் பி யு சின்னப்பா. 

சொந்த குரலில் அவரே தான் பாடியிருந்தார். மிகப் பிரமாதமான சண்டைக் காட்சிகளில் சகல ஆயுதங்களையும் கையாளும் திறமை படைத்திருந்தார். தமிழிலேயே முதல்முறையாக இருவேடம், மூன்று வேடம், என் ஒரே காட்சியிலேயே 10 வேடங்கள் கூட நடித்த மாபெரும் கலைஞன் அவர். 

அவர் திரையில் சிரிக்கையிலேயே மக்களை சிரிக்க வைத்து, அவர் அழும்போது மக்களையும் சேர்ந்து அழ வைத்த மாபெரும் கலைஞன். 

சிறுவனாக மேடை ஏறி நாடகத் துறையில் தடம் பதித்த சின்னச்சாமி என்ற சின்னப்பா துறைக்கு வந்து மிக குறுகிய காலத்தில் குறைந்த படங்களானாலும் அதிக வெற்றி படங்களை கொடுத்த மாபெரும் கலைஞன் மறைந்த தினம் இன்று.

தமிழ் நாட்டின் ''தவ நடிக பூபதி '' நடிப்பு கலை மன்னன் என்ற பட்டமும் பெற்றவர் பி .யு .சின்னப்பா 



அந்த காலத்தில் அற்புதமான நடிப்பினால் வசனம் பேசும் பாங்கினாலும் ,மற்போர், குஸ்தி , கம்பு சுழட்டுதல் , கத்திச்சண்டை ,போன்றசண்டைகாட்சிகளினாலும்,ரசிகர்களிடையே ஒரு தனி மதிப்பைப் பெற்ற ஓரே நடிகர்.

நடிப்பு, பாட்டு, சண்டை என பல திறமைகளைக் கொண்டு கதாநாயகனாகத் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்திருந்தவர் பி.யூ.சின்னப்பா. புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் இவர் . உலகநாத பிள்ளை, மீனாட்சி அம்மாள் தம்பதிகளின் மூத்த மகனாக சின்னப்பா 1916 மே மாதம் 5-ஆம் திகதி பிறந்தார்.

. சின்னப்பாவின் தந்தை நாடக நடிகராக இருந்ததால் சின்னப்பாவும் 5-ஆம் வயதிலேயே நாடகத்தில் நடிக்கத் தொடங்கி விட்டார்.

தத்துவ மீனலோசனி வித்வபால சபா, மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி ஆகிய நாடக கம்பெனிகளில் நடித்தார். இவருடன் நாடக மேடைகளில் எம்.ஜி.ஆர், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி, காளி என்.ரத்தினம் உள்ளிட்ட பலரும் நடித்தனர்.

சந்திரகாந்தா நாடகத்தில் பி.யூ.சின்னப்பா பிரலமாக விளங்கி வந்ததை அறிந்த ஜூபிடர் பிக்சர்ஸார் இவரை தங்கள் தயாரித்த சந்திரகாந்தா படத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். 1936-இல் வெளியான சந்திரகாந்தா படத்தில் சுண்டூர் இளவரசனாகத் தோன்றிய இவரது நடிப்பும், பாட்டும், ரசிகர்களைக் கவர்ந்தன. இப்படத்தில் அவரது பெயர் சின்னசாமி என்றே இடம்பெற்றது, பின்னரே பி.யூ.சின்னப்பா ஆனார்.

அதன்பிறகு, பஞ்சாப் கேசரி, ராஜமோகன், அனாதைப் பெண், யயாதி, மாத்ரு பூமி ஆகிய ஐந்து படங்களில் நடித்தார். இப்படங்கள் சுமாரான வெற்றியையே பெற்றன. அதனால் சரியான வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்கவில்லை.

தொழிலின்றி இருக்கும் நடிகர்களைத் தேடிப்பிடித்து அவர்களுக்கு வாய்ப்பளித்தவர் மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம். அவர் பி.யூ.சின்னப்பாவை தனது ‘உத்தமபுத்திரன்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க வைத்தார்.

தமிழில் முதன்முதலில் இரட்டை வேடத்தில் நடித்த பெருமைக்குரியவர் பி.யூ.சின்னப்பா. படம் பெரும் வெற்றி பெற்றது. வசூலையும் வாரிக்குவிக்கவே, பி.யூ.சின்னப்பாவுக்கு நட்சத்திர அந்தஸ்து கிடைத்தது. அதன்பிறகு தயாளன், தர்மவீரன், பிருதிவிராஜன் போன்ற படங்களில் நடித்தார். பிருதிவிராஜன் படத்தில் சம்யுக்தையாக அவருக்கு ஜோடி சேர்ந்தவர் ஏ.சகுந்தலா. இருவருக்கும் உண்மையான காதல் ஏற்பட்டு பின்னர் வாழ்க்கைத் துணையாயினர்.

இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்றுத்தந்த மற்றொரு படம், மனோன்மணி. இந்த சமயத்தில், தமிழ்த்திரையுலகில் பெரும்புகழ் பெற்று வந்தவர் எம்.கே.தியாகராஜ பாகவதர். பி.யூ.சின்னப்பா ரசிகர்களுக்கும் தியாகராஜ பாகவதர் ரசிகர்களுக்கும் போட்டி மனப்பான்மை அதிகரித்து, அடிதடி வரை இறங்கினர். தமிழ்நாட்டில் சினிமா என்ற கலை பின்னாளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தப்போவதன் அறிகுறியாக அவை நடந்ததோ என்னவோ! ரசிகர்களின் இந்தப் போட்டிதான் திரைத்துறையில் பணத்தை வாரி குறிக்க போகிறது என்பதை உணர்ந்த திரைப்பட தயாரிப்பாளர்கள் பத்திரிகைகள் மூலமாக இந்த போட்டியினை ஊதி பெருசாக்கி வந்தனர் அவர்கள் காசு பன்னுவதற்கு உருவாக்கிய ஸ்டார் வேல்யூ சிஸ்டம் இன்றைக்கு நாட்டையே கைப்பற்றும் அளவிற்கு அரசியலில் புகுந்து குட்டிச்சுவராக்கும் இடத்திற்கு வந்து நிற்கிறது. 

 அந்த வரிசை தான் பாகவதர் - சின்னப்பா, எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி - கமல்,.......... விஜய்- அஜித் என்று  தொடர்கிறது. சம்பளமும் ஆயிரங்ளில்  ஆரம்பித்து, லட்சக்கணக்கில் வளர்ந்து இன்று கோடிகளில் வந்து நிற்கிறது. 

ஆர்யமாலா படமும், அதன்பிறகு தமிழ்த்திரைப்பட வசனங்களில் மாற்றத்தை உண்டாக்கிய இளங்கோவனின் வசனத்தில் வெளியான ‘கண்ணகி’ படமும் பி.யூ.சின்னப்பாவுக்குப் பெயர் பெற்றுத்தந்தன. கண்ணகி படத்தில் P.கண்ணம்பாவின் வசன உச்சரிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பி.யூ.சின்னப்பா தொடர்ந்து நடித்த குபேர குசேலர், ஹரிச்சந்திரா, ஜெகதலப்ரதாபன், கிருஷ்ணபக்தி, மங்கையர்கரசி ஆகிய படங்களும் மிகுந்த வெற்றியைப் பெற்றன.

மங்கையர்கரசியில் மதுராந்தகன், காந்தரூபன், சுதாமன் என்று மூன்று வேடங்களில் நடித்திருந்தார்.

 பி.யூ.சின்னப்பா. 1949-இல் வெளியான ரத்னகுமார் படத்தில் பி.யூ.சின்னப்பாவுக்கு ஜோடி, பி.பானுமதி. இப்படத்தில் எம்.ஜி.ஆரும் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 1960-களில் தமிழ்த்திரையுலகின் முடிசூடா மன்னராக எம்.ஜி.ஆர் வளர்ந்ததும், எம்.ஜி.ஆர் நடித்த ரத்னகுமார் என்ற விளம்பரத்துடனேயே மறுவெளியீடாக பல அரங்குகளிலும் திரையிடப்பட்டது காலத்தின் கொடுமை தானே.. 

கலைத்துறையில் பலவித ஆற்றல்கள் கொண்ட தமிழ்த் திரை நடிகராக முழுமையாக ஒளிர்ந்த முதல் கதாநாயகர் பி.யூ.சின்னப்பா. அதனால் அவருக்கு ‘நடிக மன்னன்’ என்ற பட்டமும் உண்டு. புகழ்பெற்ற நடிகரான பி.யூ.சின்னப்பா திடீரென உடல் நலன் குன்றி 1951ஆம் ஆண்டு செப்டம்பர் 23-ஆம் நாள் தனது 35 வயதிலேயே அகால மரணமடைந்தார்.

மறைந்தாலும் மனோன்மணி, மங்கையர்கரசி, ரத்னகுமார் என இன்றும் சின்னத்திரையில் எப்போதாவது ஒளிபரப்பப்படும் படங்களில் பி.யூ.சின்னப்பாவைக் காணமுடியும்.யு டியூப் இணையதளத்தில் பல படங்களை காணமுடியும். தமிழ்த்திரை வரலாற்றில் அவர் நிரந்தரமாகவே நிலைத்திருப்பார்.

திரைப்படத்தில் முதன் முதலில் பாரதியார் பாடலை பாடியவர் பி யு சின்னப்பா. சொந்த வாழ்க்கையில் கதர் ஆடை அணிவதையே தனது வழக்கமாகக் கொண்டிருந்தார். இரண்டாம் உலகப் போர் காலத்தில் அரசுக்கு ஆதரவான பிரச்சார படங்களில் ஆங்கிலேயருடைய  நிர்பந்தத்திற்கு பயந்து எல்லோரும் நடித்தனர். ஏன் பாகவதர் கூட அரசின் பிரசார படத்தில் நடித்த போதும் பி யு சின்னப்பா கடைசி வரை அரசின் பிரச்சார படங்களில் நடிக்க வில்லை. யாருக்கும் அஞ்சாத துணிச்சல் மிக்கவர். 

தமிழ் திரைப்பட உலகில் அசைக்க இயலாத முத்திரையை படைத்த தவநடிக பூபதி பி யு சின்னப்பா அவர்களது நினைவினை போற்றிடுவோம். 

(மறைவு-23 செப்டம்பர் 1951) 

6 comments:

  1. சிறப்புமிக்க பி.யூ.சின்னப்பாவின் கல்லறை நாம் வசிக்கும் புதுக்கோட்டை நகரில் நமது வீடுகளுக்கு அருகில் உள்ளது. நாமும் அவரது பெயரை நாம் வசிக்கும் பகுதிக்கு பி.யூ.சின்னப்பா நகர் என்று பெயர் வைத்து பேர் படைத்த அந்தக்கலைஞனைச் சிறப்பித்துள்ளோம் என்பதையும் நினைவுபடுத்துகிறேன்.

    ReplyDelete
  2. 🙏🙏🙏பி. U சின்னப்பா அவர்கள் புகழ் என்றும் நிலைக்கும் புகழ் வளரட்டும்

    ReplyDelete
  3. காமராஜ்

    ReplyDelete
  4. மிகச் சிறந்த பதிவு தோழர். வாழ்த்துகள்🎉🎊

    ReplyDelete
  5. தாங்கள் அவரது பெயரில் அமைந்திருக்கும் நகரின் அருகே வசிப்பதால்,அதன் வீச்சு தென்றல் காற்றாய்பரவுகிறது...நன்று.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. P U சின்னப்பா அவர்களின் நினைவைப் போற்றுவோம்.

    ReplyDelete

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...