சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 21 October 2025

பிசிராந்தையார்

தமிழ் கூறும் நல்லுலகில் பிசிராந்தையார் என்ற புலவருக்கு ஒரு நிலையான புகழுடன் கூடிய இடமுண்டு. 


 பிசிராந்தையார் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் ஆறு பாடல்கள் மட்டுமே உள்ளன. அவை அகநானூறு 308, நற்றிணை 91, புறநானூறு 67, 184, 191, 212 ஆகியவை. ஆந்தையார் என்பது இவர் பெயர். ஆந்தையார் என்னும் பெயர் ஆதன் தந்தை என்னும் பெயர்களின் கூட்டுச்சொல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.பாண்டிய நாட்டைச் சேர்ந்த பிசிர் என்ற ஊரில் பிறந்ததால் பிசிர்+ஆதன்+தந்தையார் எனு'ம் கூட்டுச்சொற்கள் பிசிராந்தையார் என்ற பெயராயிருக்கலாமென தெரிகிறது. 


அவருடைய பாடல்கள் அரசன், குடிமக்கள், குடும்பம், நட்பு, நல்லாட்சி நல்ல சமூகத்தை தொக்கி நிற்கின்றன. 


இயல்பாகவே மனிதன் தனது நண்பரையோ, உறவினரையோ பார்த்தவுடன் கேட்கும் முதல் கேள்வி நலமாக இருக்கிறீர்களா? மிகவும் நெருங்கியவராக இருந்தால் கேட்கிற கேள்வி எப்படி இவ்வளவு இளமையா இருக்கீங்க?!.. பிசிராந்தையாருடைய நண்பர் ஒருவர் அவரிடம் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே அதன் ரகசியம் என்ன என்று கேட்டார்.

 பிசிராந்தையார் புலவர் ஆயிற்றே... ஆகவே பாடலாகவே பதில் கூறினார்.. 

தனக்கு வயதாகியும் நரையின்றி வாழ்வதின் காரணங்களை இப்பாடலின் மூலமாக பிசிராந்தையார் கூறுகின்றார்.


“யாண்டு பலவாக, நரையில ஆகுதல்

யாங்கு ஆகியர் என வினவுதிர் ஐயின்,

மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர்,

யான் கண்ட அனையர், இளையரும், வேந்தனும்

அல்லவை செய்யான், காக்க அதன்தலை . . . 

அன்று அவிந்து அடங்கிய கொள்கை

சான்றோர் பலர், யான் வாழும் ஊரே" . (புறநானூறு பாடல் 141)


அதன் பொருளாவது, ஆண்டுகள் பல ஆகியும் தலையில் நரை இல்லாதபடி எப்படி இவ்வாறு இருக்கிறீர்கள் என்று நீங்கள் என்னைக் கேட்டால், சிறந்த என் மனைவியும், அறிவு நிறைந்த பிள்ளைகளும், நான் எண்ணுவது போல் எண்ணும் என்னிடம் பணிபுரிவோரும், தீமைகளைச் செய்யாத மன்னனும், மேலும், பணிவும் அடக்கமும் கொண்ட உயர்ந்த கொள்கைகளின்படி வாழும் சான்றோர்கள் பலரும் நான் வாழும் ஊரில் இருப்பதாலும் தான்.


ஒருவர் முதுமை தோன்றாதவாறு காணப்படுவதற்கு, இளமையோடு காணப்படுவதற்கான காரணங்களை வரிசைப் படுத்துகிறது இந்தப் பாடல்....


வாய்க்கப் பெற்ற மனைவி மாட்சிமைபொருந்தியவளாக அமைந்தாள்.அதனால் அவள் மூலம் எந்த இடர்ப்பாடும் இல்லை.

பிள்ளைகளும் அறிவிலும் பண்பிலும் சிறந்தவர்களாக இருந்தமையால் அவர்களிடமிருந்து ஒத்துழைப்பும் உதவியும் கிடைப்பதால் மனம் வருந்துமாறு எதுவும் நேரவில்லை.

புலவரின் வயதுக்குக் கீழே இருந்த இளையோர்களும், தனக்குத் தேவையான தைச் செய்து தரும் பணியாளர்கள் உதவியாளர்கள், கிளைஞர்கள் ஆகிய யாவரும் எண்ணப்படி அமைந்தனர்.

வீட்டிலும் சுற்றிலும் இத்தகைய நல்லவர்கள் வாழ்க்கையில் ஒத்துழைத்து மட்டுமன்றி, நாட்டைக் காக்கும் அரசனும் மக்களுக்கு எந்த விதமான துன்பமும் வராமல் காத்துக் கொண்டான்

ஆகவே எத்திசையிலிருந்தும் துன்பம் வராமல் மனம் அமைதி பெற்றிருக்கும் போது முதுமை எளிதில் தொற்றாது.மனம்இளைமையாக இருந்தால் உடல் முதுமை கூட வெளித் தெரிவது காலம் தள்ளிப் போகும்.

என்ன பொறாமையாக இருக்கிறதா...


சங்ககாலத்தில் வாழ்ந்த எல்லா மன்னர்களும் மக்களின் நலன் சார்ந்த அரசினை நடத்தினார்கள் என்பது இல்லை. கொடுங்கோலாட்சி புரிந்தவர்களும் இருந்திருக்கிறார்கள். அவ்வாறு கொடுங்கோல் ஆட்சி புரிந்த  பாண்டியன் அறிவுடைநம்பி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இவன் தன் குடிமக்களை வருத்தி வரி வாங்கியிருக்கிறான். பாண்டிநாட்டைச்சேர்நத புலவர் பிசிராந்தையார் இவனை நேரில் கண்டு பக்குவமாக எடுத்துக் கூறித் திருத்தியிருக்கிறார். 


"காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,

மா நிறைவு இல்லதும், பல் நாட்டு ஆகும்;

நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,

வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;

அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,

கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;

மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்

வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,

பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,

யானை புக்க புலம் போல,

தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

– புறநானூறு_184


இதன் பொருளாவது  மிகச் சிறிய பரப்பளவு கொண்ட நிலத்தில் விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், அதனை யானை பல நாட்களாக உண்ணும். 

ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதித்து அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும்.

அதுபோல, ஒரு நாட்டின் தலைவன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும்.

ஆனால், நாட்டை ஆள்பவன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத பரிவாரங்களின் தூண்டுதலோடு, ஆரவாரமாக, ஈவு இரக்கமில்லாமல், அநியாயமாக வரியை திரட்ட விரும்பினால் யானை புகுந்த நிலம் போல தானும் கெட்டு தன் நாட்டையும் கெடுப்பான் என அறிவுரை கூறி திருத்தியிருக்கிறார். 


இதன் மூலம் நாம் அறிந்து கொள்வது சங்க காலத்திலும் கொடுங்கோலர்கள் இருந்திருக்கிறார்கள், எனினும் குறைகளை உழவர்கள் எடுத்துக் கூறும் போது காது கொடுத்து மனோபாவம் ஆட்சியாளர்களை அணுகும் அளவில் அவர்கள் இருந்த அறிவுரைகளை கேட்டு திருந்தியும் இருக்கிறார்கள் நமது முன்னோர்களின் வரலாறு..


நம் கால ஆட்சியாளர்கள் போல கேளாக்காதினராக முன்னோர்கள் இருந்ததில்லை என தெரிகிறது. அது கூட கொடுமை இல்லை, தொட்டதற்கெல்லாம் வரி போடும் நம்ம ஒன்றிய ஆட்சியாளர்கள் நிதிநிலை அறிக்கையின் போது இந்தப் பாடலை எடுத்துக் கூறியது தான் மிகக் கொடுமை.


பாண்டிநாட்டைச்சேர்நத பிசிராந்தையார் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பும் மரியாதையும் கொண்டிருந்தார். சோழனைக் காணவேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை.சோழனைப் பற்றிய பாடல்கள் பாடியிருக்கிறார். 

சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனிடம்    அன்னச்சேவலைத் தூது விடுவது போல பின்வருமாறு பாடியிருக்கிறார் 

"அன்னச் சேவல்! அன்னச் சேவல்!

ஆடு கொள் வென்றி அடு போர்அண்ணல்

நாடு தலை அளிக்கும் ஒள் முகம்போல,

கோடு கூடு மதியம் முகிழ் நிலாவிளங்கும்

மையல் மாலை, யாம் கையறுபுஇனைய,   

குமரிஅம் பெருந் துறை அயிரைமாந்தி,

வடமலைப் பெயர்குவைஆயின், இடையது

சோழ நல் நாட்டுப் படினே, கோழி

உயர் நிலை மாடத்து, குறும்பறைஅசைஇ,

வாயில் விடாது கோயில் புக்கு,எம்      

பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும்பிசிர்

ஆந்தை அடியுறை' எனினே, மாண்டநின்

இன்புறு பேடை அணிய, தன்

அன்புறு நன் கலம் நல்குவன்நினக்கே.


பாடலின் விளக்கம் பின்வருமாறு.. 

அன்னச் சேவலே! அன்னச் சேவலே!  கொல்லும் போரில் வெற்றி பெற, நாட்டை அருள் செய்து காக்கும் மன்னனின் ஒளிதிகழும் முகம் போல், இரண்டு பக்கங்களும் ஒன்று கூடி, முழுமதி ஒளியுடன் விளங்கும் மயக்கம் தரும் மாலைப் பொழுதில், நான் செயலற்று வருந்துகிறேன். 

நீ குமரி ஆற்றின் பெரிய துறையில் அயிரை மீன்களை உண்டு,  வடதிசையில் உள்ள இமயத்தை நோக்கிச் செல்லும் திசையில் இடையே சோழ நாடு உள்ளாது. அங்கே, உறையூரில் (கோழி) உள்ள உயர்ந்த மாடத்தில் உனது பெட்டையோடு தங்கி இளைப்பாறிவிட்டு, வாயில் காவலரைக் கடந்து, அரண்மனைக்குள் புகுந்து, கோப்பெருஞ்சோழனின் காதுகளில் கேட்குமாறு, “நான் பெருமைக்குரிய பிசிராந்தையாரின் அடியேன்” என்று சொன்னால்,  பெருமைக்குரிய உன் இனிய பேட்டை அணிவதற்குத் தன்னுடைய நல்ல அணிகலன்களைக் கோப்பெருஞ்சோழன் தருவான். (பெற்று இன்புறலாம்)

 என்று பிசிராந்தையார் அன்னச் சேவலிடம் கூறுவதாக இப்பாடலைப் பாடியுள்ளார்.


இவரது புகழையும் தமிழையும் கேள்விப்பட்ட சோழனும் இவரைக் காணவேண்டும் என்ற பேரவா கொண்டிருந்தான். ஒருவரை ஒருவர் காணாதிருப்பினும், இருவரும் உயிர் ஒன்றாகவும் உடல் வேறாகவும் வாழ்ந்து வந்தனர். இருவரும் தாம் ஒருவருக் கொருவர் சந்திக்கும் திருநாளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தனர்.


கோப்பெருஞ்சோழனின் தலைநகர் உறையூர். இவனது ஆட்சி நடந்துகொண்டிருக்கும் போதே இவனது இரண்டு புதல்வர்களும் சோழ ஆட்சிக் கட்டில் ஏறுவதற்காக தந்தையுடன் போரிடத் துணிந்தனர்.


இதை அறிந்த கோப்பெருஞ்சோழன் ஆட்சியை விட்டு வடக்கிலிருந்து உயிர் விடத் துணிந்தான். அப்போது தன் மந்திரியிடமும் மற்றையோரிடமும் பிசிராந்தையார் என்னைக் காண வருவார் என்று வடக்கிருப்பார், அவருக்கும் ஓர் இடத்தைத் தயார் என்றும் செய்யுங்கள் எனக் கூறினார். அதன்படி பிசிராந்தையாருக்கும் ஒரு இடம் அமைக்கப்பட்டது. நாட்கள் கடந்தன. சோழன் பிசிரந்தையாரைக் காணாமலேயே வடக்கிருக்கத் துணிந்தான். எப்படியும் ஆந்தையார் வந்து விடுவார் எனக் கூறித் தன் தவத்தை மேற்கொண்டான்.   


இவ்வுலக வாழ்வைத் துறக்க விரும்பும் மன்னவர் வடக்கிருந்து உயிர் விடுதல் அக்கால மரபு. வடக்கிருத்தல் என்பது தன்நாட்டில் உள்ள ஆறு குளம் போன்ற நீர் நிலைக்குச் சென்று அதன் இடையே மணல் திட்டு ஒன்றை அமைத்து வடக்கு திசை நோக்கி அமர்ந்து உண்ணாநோன்பிருந்து உயிர் விடுதலாகும். 

தன் மக்கள் மீது இருந்த மனக் கசப்பின் காரணமாக கோப்பெருஞ்சோழனும் வடக்கிருந்தான்.

இதனைக் கேள்விப்பட்டார் பிசிராந்தையார். உடனே சோழ நாட்டை நோக்கி ஓடி வந்தார்.சோழனின் இறுதி நேரம் வந்துற்றபோது பிசிராந்தையார் ஓடிவந்தார். நண்பனைக் கண்டார் தனக்காகத் தயாராக அமைக்கப்பட்ட இடத்தில் வடக்கிலிருந்து சோழனுடன் தானும் தன் இன்னுயிர் விடுத்தார்.


இச்செய்தியை இக்காட்சியைக் கண்ட பொத்தியார் என்னும் புலவர் தன் பாடலில் இதனைக் கூறுகிறார்.


      "இசைமரபு ஆக நட்பு கந்தாக

       இனியதோர் காலை ஈங்கு வருதல்

       வருவன் என்ற கோணத்தில் பெருமையும் 

       அது பழுதின்றி வந்தவன் அறிவும்

       வியத்தொறும் வியத்தொறும் வியப்பிறந்தன்றே."


பிசிராந்தையார் என்ற புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னனும் தம்முள் காணாமலேயே நட்புக் கொண்டு ஒன்றாக உயிர் நீத்த இச்சிறப்பினை இலக்கியங்கள் நமக்கு எடுத்து இயம்புகின்றன.

இங்ஙனம் தமிழ் கூறும் நல்லுலகில் அகமும் புறமுமாக அன்பு, பாசம், காதல், நட்பு, நல்லொழுக்கம், நல்லரசு, அனைத்திலும் சிறப்புற இலக்கியத்திலும், வாழ்விலும் எடுத்துக்காட்டாக விளங்கிய பிசிராந்தையார் சிறந்ததோர் எடுத்துக்காட்டு ஆவார்.. 


1 comment:

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...