சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 4 March 2026

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள்

 சமீபத்தில் உடல் நலம் இல்லாமல படுத்திருந்தபோது  உறவினர் ஒருவர் என்னை பார்க்க வந்திருந்தார். 

"என்ன மாப்ள ஆஸ்பத்திரி ஆளெல்லாம் இப்படி படுத்தா எப்படி* என்றார். 

" ஆஸ்பத்திரியில் வேலை பார்க்கிறவங்களும் மனுஷங்க தானே, அவங்களுக்கு வியாதி வராதா என்ன"என்றேன் நான்.. " 

உங்களுக்கு என்னப்பா? வியாதி வந்துச்சுன்னா ஒரு மாத்திரை சாப்பிட்டுக்க போறீங்க... வியாதி வராமல் தடுப்பதற்கு மாத்திரை சாப்பிட போகிறீர்கள்" என்றார் அவர். 

" வியாதிக்கும்  துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நாம் பார்க்கக்கூடிய வேலை, வாழ்க்கைச் சூழல், பழக்க வழக்கங்கள் போன்ற பல்வேறு விஷயங்கள்தான் உடல் நலத்தை தீர்மானிக்கிறது என்றேன். 

"என்ன உங்க வேலை? என்ன டாக்டர் எழுதிக் கொடுக்கிற சீட்டை பார்த்து மாத்திரையை தூக்கி கொடுக்கப் போறீங்க அவ்வளவுதானே" என்றார்

. ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது இந்த உலகத்தில் உள்ள  எல்லோருமே மருந்தாளுநர் என்றால் சீட்டைப் பார்த்து மாத்திரை கொடுப்பதோடு அவர் வேலை முடிந்து விட்டது. மிகவும் எளிதானது என்று நினைக்கிறார்கள். 

நான் அவரிடம் சொன்னேன்" நான் புதுக்கோட்டை மாவட்ட தலைமை மருத்துவமனையில் வேலை பார்க்க ஒரே ஒரு சூழ்நிலையை மட்டும் சொல்கிறேன். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்" 

 அது ஒரு மாவட்ட தலைமை மருத்துவமனை 1857 ல் துவங்கப்பட்ட தமிழ்நாட்டின் இரண்டாவது பழைய மருத்துவமனை. அந்த சுற்று வட்டாரத்தில் உள்ளவரெல்லாம் வைத்தியம் பார்க்க அங்கு தான் வருவார்கள். 

மாத்திரை கொடுக்கும் அம்மருந்தகம் என்பது விஞ்ஞானபூர்வமாக சொல்வதென்றால் வேலை செய்வதற்கு ஏற்ற இடம் இல்லை. என்ன இப்படி சொல்கிறீர்கள் என்று நினைப்பீர்கள். 

அந்த அறையில் ஜன்னல் வழியாகத்தான் மாத்திரை கொடுப்போம். நின்று கொண்டு கொடுப்பதனால் குனிந்து தான் கொடுக்க முடியும்.  ஏனென்றால் வாங்குபவர் சற்று பள்ளத்தில் இருப்பார். மாத்திரை ஜன்னல்கள் மற்றும் மேசைகளில் வைக்கப்பட்டிருக்கும். முக்கியமான கவுண்டர்கள் ஏழரை இல் இருந்து 12 மணி வரை குறைந்தது 800 லிருந்து 1200 பேராவது மாத்திரை வாங்குவார்கள்.உட்கார்ந்து கொடுக்கமுடியாது. 

ஒரு மருந்து சீட்டிற்கு குறைந்தது ஐந்து அல்லது ஆறு மாத்திரை வகைகள் எழுதப்பட்டிருக்கும். சில சீட்டுகளில் ஏழு எட்டு வகை   எண்ணிக்கைகளுக்கு மருந்து கொடுக்க வேண்டி இருக்கும். ஒரு சீட்டை எடுத்து, வைக்கப்பட்டிருக்கும் குறைந்தது 40முதல் 60 வகை மாத்திரைகளை இருபுறமும் திரும்பி திரும்பி எடுத்து தேவையான எண்ணிக்கைக்கு வெட்டி, சொல்லிக்கொண்டே கொடுக்க வேண்டும். குறைந்தது கழுத்து, கைகள், முதுகு தண்டு எல்லாவற்றையும் 10 12 அசைவுகளாவது கொடுக்க வேண்டி இருக்கும். ஒரு மூன்று மணி நேரத்தில் குறைந்தது 500 பேருக்கு குனிந்து நிமிர்ந்து திரும்பி சுழன்று மாத்திரைகளை கொடுக்க வேண்டும் என்றால், எத்தனை அசைவுகள் கொடுக்க வேண்டி இருக்கும். அந்த முதுகுத்தண்டு எலும்புகள், தோள்பட்டை மூட்டு, தசைகள் உட்பட எல்லாவற்றிற்கும் எவ்வளவு வேலை கொடுக்க வேண்டி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 

இதை சொன்னால் புரியாது அனுபவித்தால் மட்டுமே தான் தெரியும். அதுவும் சற்று உயரமான மனிதராக இருந்தால் இன்னும் கடினம். பெரும்பாலும் வரிசையில் வர மாட்டார்கள். குறைந்தது நான்கு ஐந்து கைகள் உள்ளே நீட்டுவார்கள். ஏனென்றால் கவுண்டர் கிடையாது. ஜன்னல் வழியாகத்தான் மாத்திரை கொடுப்போம். இதில் நோயாளிகள் போடுகிற சண்டை வேறு.

 அடுத்தபடியாக அந்த சீட்டுகளில் சில வேளைகளில் எழுதப்பட்ட மருந்துகள் இல்லாமல் இருக்கும்,அல்லது தவறுதலாக மாற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு நேர்மையான, தொழில் பக்தி உள்ள மருந்தாளுனராக இருக்கும் பட்சத்தில் எழுதப்பட்டிருக்கும் சீட்டில் தவறுகள் இருந்தால் அதை எடுத்துச் சென்று மருத்துவரிடம் சொல்லி திருத்தி வருவோம் .ஏனென்றால் பழைய சீட்டை பார்த்து ரிப்பீட் என்று மீண்டும் எழுதும் போது சில நேரங்களில் தவறு நிகழ்ந்து விட வாய்ப்பு உள்ளது .உதாரணத்திற்கு ஒரு நோயாளிக்கு டையசபம் Diazepam  எழுத வேண்டியது பதிலாக டிஜாக்சின் Digoxin மாத்திரை எழுதப்பட்டிருக்கும். அதை போய் திருத்தி வருவேன் நோயாளியிடம் சொல்லி அனுப்ப முடியாது. நான் போய் வரும்போது நோயாளிகள் கத்துவார்கள்.

 கற்பனை செய்து பாருங்கள். அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் அவ்வளவு கூட்டத்தையும் சமாளிக்க வேண்டி இருக்கும்.  அரசு மருத்துவமனைகளுடைய நிலை இதுதான். எவ்வளவு பெரிய மருந்துக்கடையாக இருந்தாலும் ஒரு நாள் பூராவும்  மாத்திரைகள் கொடுத்தாலும் இந்த எண்ணிக்கை அளவிற்கு நிச்சயமாக கொடுக்கப் போவதில்லை. 

மாத்திரைகள் கொடுத்து முடித்து அப்பாடா என்று உட்கார்ந்து அன்றன்றைக்கு கொடுக்கப்பட்ட மாத்திரைகளை அன்றைக்கே கணக்கு எழுதி ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. அந்த காலத்தில் எல்லா மாத்திரைகளையும் கணக்கு எழுதும் போது டோக்கன் நம்பர் மாத்திரை எண்ணிக்கை எல்லாம் எழுதி, கிட்டத்தட்ட அந்த பிரிஸ்கிரிப்ஷனில் உள்ள சீட்டில் உள்ளவை இரண்டாம் முறையாக மொத்தமாக  எழுத வேண்டி இருக்கும். அதை எழுதி முடிப்பதற்குள் கழுத்தும், தோள் பாடடையும் ,கையும் மரத்துப் போய்விடும். 

இப்படி ஒரு சூழ்நிலையில் ஒரு மனிதன் வேலை பார்த்தால், அவன் உடல் நிலை என்னவாகும் என்பதை மனசாட்சி உள்ளவர்கள் கற்பனை செய்து தான் பார்க்க வேண்டும.

 அடுத்தபடியாக 24 மணி நேரம் சுழற்சி முறையில் வேலை பார்க்க வேண்டும். 

ஒரு நாள் காலை வேலை பார்த்துக் கொண்டிருப்போம். அடுத்த நாள் இரவு பணி ஆற்ற வேண்டி இருக்கும். அதற்கடுத்து இரவு பணி ஓய்வுக்குப் பிறகு பகல் டியூட்டி வந்தால் காலையிலிருந்து இரவு வரை  சிறிய இடைவேளையோடு வேலை பார்க்க வேண்டி இருக்கும். இதற்கிடையில் போஸ்ட்மார்ட்டம் டியூட்டி வேறு. 

பின சோதனைக்கும் மருந்தாளுநர்களுக்கும் என்ன சம்பந்தம் என்று நிறைய பேர் கேட்பார்கள். பிரிட்டிஷ்காரர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த மருத்துவ முறையில் மருத்துவர் பிணசோதனை செய்யும்போது குறிப்புகள் அவரே எழுத முடியாது என்பதால் உடனிருந்து அந்த குறிப்புகளை சொல்ல சொல்ல எழுதுவதற்கு தொழில்நுட்பம் சார்ந்த விவரம் தெரிந்த ஆசாமி வேண்டும். அந்த காலத்தில் கம்பவுண்டர் மட்டும்தான். எனவே தான் அரசாணைப்படி ஒரு பிண சோதனை என்றால் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுனர் இரு உதவியாளர்கள் என்ற குழு தான் அதை செய்யும். ஆக சட்டப்பூர்வமாக அப்படி ஒரு வேலை.

 உண்மையைச் சொல்லப்போனால் இதற்கு பயந்து தான் நான் நீண்ட காலம் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வேலைக்கு வராமல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தேன். பிறகு குடும்ப சூழ்நிலை காரணமாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு வந்ததால் அந்த பணியில் ஈடுபட வேண்டி இருந்தது.

 நான் முன்பே கூறியிருந்த மாதிரி சுழற்சி பணி ஆற்றும் போது ஒரு வாரத்தில் குறைந்தது ஒரு முறையாவது இரவு பணி வரும். உறக்க முறை என்பது ஒரே மாதிரியாக இல்லாமல் (Bioclock system) உயிரியல் கடிகார கோட்பாட்டிற்கு விரோதமாக உறங்க வேண்டி இருக்கும். அதனால் உடல் நலம் பாதிக்கப்படும. ஒட்டுமொத்த மருந்தா ளுர்களுடைய நிலைமை இதுதான். 

பின்பு நான் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றலாகி சென்ற போது அனுபவித்த கொடுமைகள் தனிக்கதை. 

4 comments:

  1. 🤔 மருந்தாளரின் கோணத்தில்... சிறப்பு

    ReplyDelete
  2. பிணவறையில் postmortem பணியில் பிணத்தின் முன் 1 மணிநேரம் நிற்பது நாற்றத்தை சிரிப்பது கவனமாக finding s எழுதுவது samples ஐ பாட்டிலில் இட்டு நம்பர் பெயர் எழுதி police இடம் கொடுத்து அனுப்புவது forensic report வந்த பின் அதை என்ட்ரி போடுவது மருத்துவரிடம் court case கங்கு செல்லும் போது file ஐ கொடுத்து திரும்ப வாங்கி பத்திரமாக பாதுகாப்பது இறுதியில் புதிதாக பணியில் இணைந்த மருத்துவருக்கு சொல்லி வருவது இவற்றை அவரிடம் கூறியிருக்க வேண்டும்.

    ReplyDelete
  3. எப்டியோ service முடிச்சிட்டு retire ஆகியாச்சு

    ReplyDelete
  4. உண்மையை உலகுக்கு தெரிய படுத்தியதற்க்கு நன்றி
    மருந்தாளுநர் கவலையை யாரும் புரிந்து கொள்ள போவதில்லை

    ReplyDelete

சுவாமி சகஜானந்தா

சமஸ்கிருத வார்த்தையான சனாதன தர்மம் என்பதற்கு 'நிலையான தர்மம்' (Eternal law) என்றே அர்த்தம். சனாதனம் என்ற வார்த்தை நிலையான என்ற பொருள...