சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 20 March 2026

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள்

 பொதுவாக அரசுப் பணியில் சில பதவியினருக்கு துறை ரீதியான தேர்வுகள் எழுதி தகுதி பெறுவது என்பது மிகவும் கட்டாயமான ஒன்று. சில பதவிகளுக்கு பதவி உயர்வு பெறுவதற்கு மட்டும் துறை ரீதியான தேர்வுகள் என்பது கட்டாயமான ஒன்று. மற்றபடி அதே பதவியில் இருப்பதற்கு தேர்வுகள் எதுவும் எழுத வேண்டியதில்லை. 

account test for subordinate officers கீழ்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு என்பது மருந்து கிடங்கு அலுவலர் பதவி உயர்வின் போது தலைமை மருந்தாளுநர்கள் கட்டாயம் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

நான் கந்தர்வகோட்டை மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது கீழ்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தேன். என்னுடைய சக நண்பர்கள் எல்லாம் தேர்வுக்கு தனிப் பயிற்சிக்கு சென்று வந்தார்கள். நான் அதைப் பற்றி கவலைப்படாமல் இருந்தேன். எனது நண்பரும், வழிகாட்டியுமான திரு சி. ராமமூர்த்தி அவர்களை சந்தித்து இது பற்றி பேசிக் கொண்டிருந்தபோது  இதற்கெல்லாம் பயிற்சி போக வேண்டாம், எல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான். பரீட்சைக்கு நான்கு நாள் இருக்கும்போது வாருங்கள். நான் வேண்டிய புத்தகங்களை தருகிறேன் என்று கூறிவிட்டார். 

நானும் சரியாக பரீட்சைக்கு நான்கு நாட்கள் இருக்கும்போது அவரது அலுவலகத்திற்கு சென்றேன். அங்கிருந்து சில புத்தகங்களை எடுத்து கொடுத்துவிட்டு என்ன மாதிரியான கேள்விகள் கேட்பார்கள், சம்பள நிர்ணயம், ஓய்வூதியம், பயணப்பட்டியல் இது போன்ற சில கணக்குகளும் நிர்வாக ரீதியான கேள்விகள் மட்டும் தான் வரும் இதெல்லாம் உங்களுக்கு தெரிந்ததுதான் என்று சொல்லி அனுப்பி வைத்தார். 

நானும் போனேன்., பரீட்சை எழுதினேன்,. வந்தேன்,தேர்ச்சி பெற்றேன்.

 எழுத்து பணியில் இருக்கக்கூடிய நண்பர்களே சிலர் தேர்ச்சி பெறவில்லை .இதை நான் சொல்வதற்கு காரணம் பெருமை பீத்துவதற்காக அல்ல என்பதை முதலில் பணிவோடு தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏனென்றால் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருந்தகங்களில் அந்த காலத்தில் பணிபுரிந்த எல்லோருக்குமே எழுத்து பணி என்பது சர்வ சாதாரணமான விஷயம் காரணம். பெரும்பாலான நிலையங்களில் எழுத்தர் பணியிடமே கிடையாது பெரும்பாலான என்ன, எந்த ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருந்தகங்களிலுமே எழுத்தர் பணியிடம் கிடையாது. குடும்ப நலத்துறை இயங்கக்கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டும் எழுத்தர் மற்றும் பண்டகக்காப்பாளர் என்ற பணியிடமிருந்ததால் அவர்கள் எழுத்து பணி செய்வார்கள். மற்ற இடங்களில் மருந்தாளுனர்கள் தான் சம்பள பட்டியல் போடுவதில் இருந்து, அனைத்து எழுத்து பணியும் செய்து வந்தனர். 

இதற்காக அரசு மிகவும் பெருந்தன்மையுடன் மாதம் பத்து ரூபாய் சிறப்பூதியமாக கொடுத்து வந்தனர். சிறப்பு ஊதியம் என்றால் பஞ்சப்படி அதற்கேற்ற விகிதத்தில் வரும். பின்னர் வந்த ஊதிய குழுக்களில் சிறப்பு ஊதியம் என்பதை நீக்கிவிட்டு சிறப்புபடியாக இருபது ரூபாய் வழங்கினர். சிறப்பு படி என்றால் அதற்கு பஞ்சப்படி வராது. ஒரு எழுத்தர் பணியிடத்தை உருவாக்கினால் அவருக்கு குறைந்தபட்சம் அன்றைக்கு நிலைமைக்கு 400 ரூபாய் வழங்கப்பட்டிருக்கும். வெறும் பத்து ரூபாய், இருபது ரூபாய் கொடுத்து அரசு மருந்தாளுனர்களை சுரண்டியது என்று சொன்னால் கூட தவறில்லை. 

பின்னாளில் எழுத்து பணி செய்ய மாட்டோம் என்று மருந்தாளுனர்கள் போராடியதன் பின்னர் அங்கு இளநிலை உதவியாளர் பணியிடம் உருவாக்கப்பட்டு, பின்னர் உதவியாளர், கண்காணிப்பாளர் என்று அளவிற்கு வந்துவிட்டது. 

இந்த வேலையை வெறும் பத்து ரூபாய் இருபது ரூபாய்க்கு வாங்கி இருந்தார்கள் என்றால் இந்த அரசு எவ்வளவு பெருந்தன்மையானது, அரசுக்கு வழிகாட்டிய அதிகாரிகள் எவ்வளவு பெரிய அறிவாளிகள் என்பது நான் சொல்ல வேண்டியதில்லை. அது போய் தொலையட்டும்.. 

அந்த எழுத்துப் பணியை கூடுதல் பணியாக செய்து, இன்னும் சொல்லப்போனால் மிக சிறப்பாக செய்தவர்கள் மருந்தாளுனர்கள் என்றால் மிகை இல்லை.

எழுத்துப் பணி செய்யும் போது கிடைத்த அனுபவங்களை எல்லாம் சொல்வதென்றால் ஒரு பெரிய மகாபாரதமே வந்து சேரும். 

இதை நான் சொல்வதற்கு காரணம் மருந்தாளுநர், மருந்தியல் பணி தவிர்த்து இன்னும் ஏராளமான பணிகளை தூக்கி சுமந்தார். ஆனால் அதற்குரிய மரியாதை எந்த வகையிலும் அரசு கொடுத்ததில்லை. அந்தப் பதவிக்கான முக்கியத்துவத்தை, ஊதியம் நிர்ணயம் செய்வதாகட்டும், அல்லது பதவி உயர்வாகட்டும்,  அல்லது பணி நிலைமைகளை மேம்படுத்துவதாகட்டும் எந்த வகையிலும் கண்டுகொள்ளவில்லை., என்பதை விட மிக மோசமான நிலையில் வைத்திருந்தது என்பது தான் உண்மை.

1 comment:

  1. மருந்தியல் பணியை நேசித்தவரை நேசிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். உங்களைப்போல் பலர் பணியில் இருக்கும் போது இதுபோன்று யோசித்து அரசிடம் யாசித்திருந்தாலும் கூட சாதித்து இருப்போமா என எண்ணி ஏங்கி ஏங்கி ஓய்ந்து விட்டோமே பணியில் இருந்து
    .இனிமேல் கொண்டு என்ன செய்யலாம் என்பது குறித்து இதுபோன்ற ஆய்வுகளை வெளியிடலாம். நம் வாழ்வில் வெளிச்சம் வரலாம். கோவை செல்வம்.

    ReplyDelete

சுவாமி சகஜானந்தா

சமஸ்கிருத வார்த்தையான சனாதன தர்மம் என்பதற்கு 'நிலையான தர்மம்' (Eternal law) என்றே அர்த்தம். சனாதனம் என்ற வார்த்தை நிலையான என்ற பொருள...