சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 8 September 2025

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பல்

 ஒருமுறை நான் கூடலூரில் இருந்து மோயாறு அணைக்கு செல்லும் போது எங்களது வாகன ஓட்டியும் வழிகாட்டியுமான நன்பர் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி ஒரு பாறை பகுதியை காட்டினார். இந்த இடத்தில் புலி வந்து தூங்கும் என்று சொன்னார். 


"ஆள் நடமாட்டம் உள்ள பகுதி என்றாலும் அது இரவு வேலைகளில் வேட்டையாடிவிட்டு வந்து படுத்திருக்கும். நானே பார்த்திருக்கிறேன்" என்றார். 


"பயம் இல்லையா, நம்மை வேட்டையாடி விடாதா" என்று கேட்டேன். 


"அது தன்னுடைய உணவுக்கு மட்டும் வேட்டையாடிவிட்டு யாரையும் தொந்தரவு செய்யாமல் படுத்து விடும். அது 24 மணி நேரம் வேட்டையாடுவதையே தொழிலாக வைத்திருக்காது. அப்படி எல்லா நேரமும் எல்லா விலங்குகளையும் புலிகள் வேட்டையாடிக் கொண்டிருந்தால் காடுகளில் இவ்வளவு மான்கள் இருக்க முடியுமா "என்று சிரித்துக் கொண்டே சொன்னார். 


" அது வேட்டையாட இயலாத பருவம் ஏற்படும் போது அல்லது தாக்கப்படுவோம் என்று கருதினால் மட்டுமே மனிதனை தாக்கும். வகைகளில் எந்த விலங்கும் பிற விலங்குகளை தாக்குவதில்லை. தேவை இல்லாமல் பிற விலங்குகளை வேட்டையாடும் புத்தி மனிதர்களுக்கு மட்டுமே உண்டு" என்றார்.


“ஒரு புலி ஒரு விலங்கை வேட்டையாடினால் அது மட்டும் சாப்பிட்டு விட்டு போவதில்லை.அது சாப்பிட்டது போக மிச்ச இறைச்சியை மற்ற விலங்குகளும் பறவைகளும் சாப்பிட்டு உயிர் வாழும் . இன்னும் சொல்ல போனால் பகிர்ந்து அளிக்கும் குணம் நம்மை விட புலி போன்ற வேட்டையாடும் விலங்குகளுக்கு அதிகம்" என்றார்.


உண்மையில் அவர் சொன்ன மாதிரி ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்து உண்ணும் வழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இந்த தேசத்தில் எத்தனையோ மகான்கள் தோன்றியிருக்கிறார்கள். பிற உயிர்கள் படும் வேதனைகளை காண முடியாமல், நிறைய போதனைகள் செய்திருக்கிறார்கள். சித்தார்த்தனாக இருந்த இளவரசன் மக்களுடைய பசி நோய் சாவு போன்ற கொடுமைகளை கண்டு மனம் வருந்தி துறவியாகி கௌதம புத்தன் ஆனான்.


குறிப்பாக பசி கொடுமையை பற்றி , சிந்தித்து மக்களுக்கு போதனை அளித்து, வழிகாட்டிய எத்தனையோ மேதைகள் பிறந்துள்ளனர். 


பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை" என்கிறார் திருவள்ளுவர். 

கிடைத்த உணவை மற்றவர்களுடன் பகிர்ந்து உண்பதும், உயிர்ப் பலவற்றுக்கும் கொடுத்து அவற்றைப் பாதுகாப்பதுமே அற நூல்களில் மிகவும் சிறப்பான அறம் கூறுகிறது.


பசிக்கொடுமை பற்றிய பைந்தமிழ் இலக்கியத்தில், சங்க இலக்கியங்களான புறநானூறு மற்றும் பொருநராற்றுப்படை, வறுமையால் ஏற்படும் பசி, அதன் துயரங்கள் மற்றும் விலங்குகளின் பசி பற்றி ஏராளமாய் பதிவு செய்யப்பட்டது. 


மணிமேகலை காவியத்தில் பசிப்பிணியைப் போக்குவதை மையமாகக் கொண்டு, அமுதசுரபி மூலம் உணவளித்து அறம் போதிப்பதாய் அமைந்துள்ளது, 


மேலும் இந்நூல்கள் மக்களின் பசியற்றதை அறமாகக் கருதிய தமிழ்ச் சமூகத்தின் உயரிய பண்பாட்டையும் வெளிப்படுத்துகின்றன. 

அதனால்தான் தமிழகத்தில் அன்னச்சத்திரங்கள் கட்டுவதை ஒரு பெரிய அறமாக நினைத்து மக்களுக்கு பசிப்பிணி போக்கும் பணியினை செய்து வந்தனர். 


வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடி போன வள்ளலார் பசிப்பிணி நீக்கும் பணியினை இடைவிடாமல் செய்து வந்திருக்கிறார். 


1875 தொடங்கி 1880 வரை தமிழகத்தைப் புரட்டிப் போட்ட பெரும் பஞ்சம். வயல் வரப்புகளில் எறும்புகள் சேர்த்து வைத்திருந்த புற்று அரிசியைகூட தோண்டி எடுத்து திண்று தீர்த்தபின்னும் தீராத பஞ்சம், முருங்கை கீரையை மட்டுமே மூன்று வேளையும் அவித்து தின்று உயிர் பிழைத்துக்கிடந்த கொடிய பஞ்சமது.


கண் முன்னே கணவனும், மனைவியும் ஒட்டிய வயிருடன், யார் முதலில் சாகப்போகிறோம் என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் வெற்றுப் பார்வை பார்த்தபடி படுத்துக் கிடந்த வேதனை மிகுந்த காலம் அது . பஞ்சம் தந்த பாடங்கள் ஒரு பக்கம் இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதில் நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய கதை குஞ்சரம் அம்மாவினுடையது. 

மதுரை நகரத்து செல்வாக்கு மிக்க தாசி ஏராளமான சொத்துக்களுக்கும் சொந்தமானவர் குஞ்சரத்தம்மா. தாது வருட பஞ்சத்தால் மக்கள் பட்டினியால் சாவது கண்டு பொறாமல், தன்னுடைய சொத்துக்களை எல்லாம் விட்டு இடைவிடாது ஏராளமான பேருக்கு உணவளித்து, இறுதியில் வறுமையையும் நோயையும் பெற்று கொண்டு மடிந்து போனார். 

அப்பேர்ப்பட்ட மனித நேயமிக்க பரோபகாரிகளின் வரலாற்றை படித்த நாம் இன்று காண்பதென்ன?!.

.ஆனால் இன்று இந்த உலகில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பல்வேறு விஷயங்கள் மனதை பிசைகின்றன. 


உள்நாட்டு கலவரங்களில் முதலில் பாதிக்கப்படுவது பெண்கள், சிறு குழந்தைகள் தான். 


முற்றுகை என்ற பெயரால் உணவுக்கும் தண்ணீருக்கும் அல்லாடுகின்ற அவல நிலை இன்றும் பல நாடுகளில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கிறது. ஆப்பிரிக்க நாடுகளில், இலங்கையில் முன்பு நடந்த கொடுமையும் அதுதான். இப்போது காசா பகுதிகளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடுமையும் அதுதான். சாதாரண மக்களுக்கு உணவும் தண்ணீரும் கிடைப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது.


நிவாரணப் பணிகளுக்காக ஏராளமான நாடுகள் உணவுப் பொருள், மருந்து பொருட்களை அனுப்பினாலும், அவை கிடைக்காதவாறு இஸ்ரேல் அரசு கொடுமை செய்கிறது. 


உலக நாடுகள் அனைத்தும், ஐக்கிய நாடுகள் சபையும், மனிதநேயமிக்க ஏராளமான மக்களும், கோரிக்கை வைத்தாலும் இஸ்ரேலும் அதனை தாங்கி நிற்கும் அமெரிக்கா கண்டு கொள்வதாக இல்லை.


சாதாரண மக்களை பசியாலும், தாகத்தாலும் தவிக்க விட்டு கொடுமைப்படுத்தும் எந்த அரசும், அமைப்பும் வரலாற்றின் குப்பை தொட்டிக்கு தான் செல்வார்கள். இதுதான் வரலாறு. 

1 comment:

  1. அருமையான மனிதாபிமான கட்டுரை

    ReplyDelete

சுவாமி சகஜானந்தா

சமஸ்கிருத வார்த்தையான சனாதன தர்மம் என்பதற்கு 'நிலையான தர்மம்' (Eternal law) என்றே அர்த்தம். சனாதனம் என்ற வார்த்தை நிலையான என்ற பொருள...