"இங்கு அரசியல் பேசாதீர்" என்று பல இடங்களில் பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். டீக்கடைகளில், உணவு விடுதிகளில், முடிவெட்டும் இடங்களில், சில பல அமைப்புகளுக்கான சமூக வலைதளங்களில், முகநூலில் இப்படி எங்கு பார்த்தாலும் அரசியல் பேசாதீர்கள் என்று சொல்லப்படுவதை கேட்கிறோம். அப்படி பேசுவது கூட ஒரு அரசியல் என்று தெரியாமலேயே அரசியல் பேசாதீர்கள் என்று சொல்கிறார்கள் அரசியல் என்றால் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட், திமுக, அதிமுக என்று கட்சியின் பெயரை குறிப்பிட்டு பேசினால் தான் அரசியல் என்று நினைக்கிறார்கள். மக்களை பாதிக்கின்ற விஷயங்கள், நல்லதோ, கெட்டதோ அதைப் பற்றி பேசுவதெல்லாமே அரசியல் தான். அப்படி அரசியல் பேசப்படாத இடம் ஏதாவது இருக்கிறதா அல்லது அரசியல் புகாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று தேடிப் பார்த்தால், இந்த உலகில் அப்படி ஒரு இடமே இருக்க வாய்ப்பே இல்லை.
குழந்தைகள் பிறப்பில் இருந்து இறப்பு வரை அரசியல் இருக்கத்தான் செய்கிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியவில்லை. எனவே குடும்ப கட்டுப்பாடு செய்து கொள்வது நாட்டிற்கும், வீட்டிற்கும் நல்லது என்று கூறியது ஒரு அரசியல். அது தேசத்திற்கான அரசியல். அதே நேரத்தில் ஒரு மதத்தினர், சில இனத்தினர், சில ஜாதியினர் மட்டும் ஏராளமாய் பிள்ளைகளை பெற்றுக்கொண்டு மக்கள் தொகையில் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள் என்று கூறியதும் ஒரு வகை அரசியல் தான். கட்டாய கருத்தடை செய்தது, அதுவும் அரசியல் தான். பின்னாளில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தான் பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் வரும்போது, நாட்டிற்காக குடும்ப கட்டுப்பாடு திட்டம் அமுல்படுத்தி, அதனால் எங்கள் மாநிலத்திற்கான பிரதிநிதித்துவம் குறைந்து போனது என்று போராடுவதும் ஒரு அரசியல் தான். இது சுயமரியாதைக்கான அரசியல்...
கல்வியில் சிறந்திருந்த நாட்டில், எல்லோருக்குமான கல்வி மறுக்கப்பட்டு குறிப்பிட்ட சாதியினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தியது ஓர் அரசியல் என்றால், அதை உடைத்து எல்லோரையும் படிக்க வைக்க ஆங்கிலேயர் பள்ளிகள் திறந்தது முன்னேற்ற அரசியல்.
நிதியை காரணம் காட்டி பள்ளிகளை ராஜாஜி மூடியது ஒரு அரசியல் என்றால், மீண்டும் மூடிய பள்ளிகளை எல்லாம் திறந்து, மேலும் புதிய பள்ளிகள் திறந்து, மதிய உணவு போட்டு காமராஜர் படிக்க வைத்ததும் அரசியலே.
அதையும் தாண்டி இன்னும் ஏராளமான பள்ளிகள், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரி கல்வி வரை இலவச உணவு, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ், நிதி உதவி எல்லாம் வழங்கி கல்வியில் சிறந்த மாநிலமாக மாற்றியதும் முன்னேற்ற அரசியலே...
உலகமெங்கும் போற்றி புகழ்ந்திடும் தாய் மொழி, கல்வித் தொடர்புக்கு ஆங்கிலக் கல்வி என்று பிள்ளைகள் தலையில் சுமை ஏற்றாமல் இரு மொழிக் கல்வி பேசுவது ஒரு வளர்ச்சிக்கான அரசியல்... வலுக்கட்டாயமாக பயன் இல்லாமல் மூன்றாவது முறையைக் கற்றுக் கொள்ளுங்கள் அப்போதுதான் நிதி தருவேன் என்று தரவேண்டியது பங்கையே தர மறுப்பது மோசமான அரசியலே.
அனைவருக்கும் சுகாதாரம் தர வேண்டுமென அரசு ஏராளமான மருத்துவ, சுகாதார நிலையங்களை நிறுவி, நோய்த்தடுப்பு திட்டம், மருந்து, மருத்துவ சேவைகளில் தன்னிறைவை அடைவதற்காக போராடுவது ஒரு அரசியல் என்றால், மருத்துவ கல்வியை தனியார் மயம் ஆக்கி, மருத்துவமனைகளை கார்ப்பரேட் மயமாக்கி, மருந்துகளை கொள்ளையடித்து, மக்களின் வருமானத்தில் பெரும்பகுதியை மருத்துவத்திற்காக செலவிட வைப்பதும் அரசியலே.
மக்களிடையே உணவு பஞ்சம் நீங்கி தன்னிறைவு அடைய ஏராளமான அணைக்கட்டுகள், நீர் பாசன திட்டங்களை கொண்டு வருவது முன்னேற்ற அரசியல் என்றால், தண்ணீரை முறையாக பகிர்ந்து கொள்ள மறுத்து கலகம் விளைவித்து, மக்களிடையே பிரிவினையை தூண்டி, அழிவை நோக்கி செல்லுதலும் அரசியலில்...
சமூகம் நன்றாக வாழ வேண்டுமென்றால் அரசின் நிதி வரவு செலவுத் திட்டங்கள் சிறப்பாக நடைபெற அனைவரும் முறையாக வரி செலுத்தினர் நியாயமான அரசியல். ஒழுங்காக வரி கட்ட மாட்டேன் நிதிஏய்ப்பு செய்வேன், முறைகேடுகள் செய்வேன், என்று ஏமாற்றுவது கேவலமான அரசியல்... ஒழுங்காக வருமான வரி கூட செலுத்தாத சினிமா நடிகன் திரைப்படப் புகழ் மட்டுமே வைத்து அரசியலுக்கு வர நினைப்பது கேவலமான அரசியல் தான். திரைப்படங்களில் வாரி வாரி வழங்கும் வள்ளலாக நடிப்பவன் நிஜ வாழ்க்கையில் கஞ்சனாகவும், அதற்கு தடையாக நடிக்கும் வில்லன் நிஜ வாழ்க்கையில் பிறருக்கு உதவி செய்பவனாகவும் இருப்பதை உணராமல் சினிமாவில் நல்லவனாக நடித்தவனையே நிஜ வாழ்க்கையில் நல்லவனாக சித்தரிப்பது கேவலமான மீடியா அரசியல். அதற்கு துணை போவது அதைவிட கேவலமான அரசியல்.
நான் எங்குமே கட்சி அரசியலை குறிப்பிடவில்லை. மக்கள் நலன் சார்ந்து விஷயங்களை பேசுவது, விவாதிப்பது தான் நியாயமான அரசியல். ஒவ்வொரு குடிமகனுடைய கடமை அது. எவன் எக்கேடுகெட்டால் என்ன.. ராமன் ஆண்டால் என்ன.. ராவணன் ஆண்டால் என்ன.. என எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது நடுநிலையான போக்கு இல்லை... அது ஒரு விதமான கண்மூடித்தனமான, பொறுப்பற்ற, சிந்தனையற்ற செயல் என்றுதான் சொல்ல வேண்டும்.
எனவே யோசிக்க வேண்டியது பேச வேண்டியது மக்களின் முன்னேற்றத்திற்கான அரசியலே...
இவ்வளவு தெளிவாக நாட்டு நடப்பு பற்றி எழதுவதும் அரசாள்வதைப்பற்றிய இயலே.
ReplyDelete