சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 11 November 2025

பயம்

 சின்ன வயதில் தொட்டதற்கெல்லாம் பயந்து சாவேன். அப்போது எனது தந்தையார் எனக்கு பயம் நீக்க அறிவுரைகள் கூறுவார்.

எதற்கும் பயப்படக்கூடாது, தைரியமாக இருக்க வேண்டும், அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவார். 

அதற்காக சில கதைகளையும் கூறுவார். ஒரு புராணக் கதை ஒன்று, எல்லோருக்கும் தெரிந்த ஒரு புராணக்கதை.. ஆனால் அவர் வேறு விதமாக நீதி கூறுவார்.

ஒரு மகா பேரரசன் ஒருவன் இருந்தான். அவர் மாபெரும் வீரன். எதற்கும் பயப்பட மாட்டானென்று பெயரெடுத்தவன். பல போர்கள் கண்டு திக்விஜயங்களெல்லாம் நடத்தி, வெற்றி கண்டு, பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவன்.

திக் விஜயம் என்றால் என்னவென்று நினைக்கிறீர்கள். ஒரு குதிரையின் மீது பெரிய கம்பளம் போட்டு அதில் இவனுடைய அருமை பெருமைகளை எல்லாம் குறித்து, இவனது கொடியை கட்டி அனுப்புவார்கள்.கூடவே பெயருக்கு ஒரு வீரனை மட்டும் அனுப்புவார்கள். எட்டு திசைகளிலும், எங்கு வேண்டுமானாலும் செல்லும். செல்கிற பகுதிகளில் ஆளும் நாட்டு அரசர்கள் இவனுடைய ஆளுமையை ஏற்றுக் கொண்டு இவனுக்கு கப்பம் செலுத்துவார்கள். அதாவது சண்டை போடாமலேயே இவனது ஆளுமையை ஏற்று அடிபணிவார்கள். எதிர்த்து குதிரையை பிடிக்கும் மன்னன் மீது இப்பேரரசன் படையெடுத்து வெற்றி பெற்று குதிரையை மீட்டு வருவான். அப்பேர்ப்பட்ட மகாவீரன். ஆனால்....

ஆனாலென்ன உள்ளுக்குள்ளே பயந்தாங்கொள்ளி. சரியான ஜோதிட பைத்தியம். ஆஸ்தான ஜோதிடர் என்ன சொல்லுகிறார்களோ, அதைத்தான் நம்புவார். 

அவர் எப்போது பார்த்தாலும் ஆஸ்தான ஜோதிடரை பார்த்து ஆயுள் பலம், மற்றும் பல்வேறு விஷயங்களை பற்றி கேட்பார். அந்த ஜோதிடர் இவனுடைய ஜாதகத்தை கணித்து, உங்களுக்கு பாம்பில் தான் கண்டம் இருக்கிறது. அதனால பாம்பு விஷயத்தில் கவனமாக இருங்கள்.  என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.. 

உடனே அந்த பேரரசன் தனது ஆமாம் சாமி மந்திரிகள் சபைதனைக் கூட்டினான். அவர்களிடம் மந்திரலோசனை செய்த போது, ​​பாம்பு வரவே முடியாத மாதிரியாக ஒரு தீவு போன்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பான அரண்மனை ஒன்று கட்டி, பாம்பு எந்த வகையிலும் புகாதவாறு ஏற்பாடுகள் செய்து, அதில் மகாராஜாவை தங்க வைப்பது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

அந்த மாதிரியான ஒரு பாதுகாப்பான அரண்மனையில் மகாராஜா தங்கி இருந்தார். 


ஒரு நாள் உணவு அருந்திவிட்டு பழம் சாப்பிடலாம் என்று ஒரு பழத்தை கத்தி வைத்து வெட்டிக் கொண்டிருந்தார். உள்ளே இருந்து ஒரு புழு ஒன்று தலையை நீட்டியது. அந்தப் புழு வர வர பெரிதாவது போல அவருக்கு தோன்றியது. அந்த தலையை அவர் உற்றுப் பார்த்தபோது பாம்பு மாதிரி தெரிந்தது. 

அந்த அதிர்ச்சியிலேயே மாரடைப்பு ஏற்பட்டு மகாராஜா செத்துப் போனார். 

மகாராஜா செத்தது பாம்பினாலா? அல்லது பாம்பின் மீதான பயத்திலேயே வாழ்ந்ததாலா? புழு கூட பாம்பாக தெரிந்ததினாலா? என்று அப்பா கேட்டார். 

புழு எப்படிப்பா பாம்பாக முடியும் என்று கேட்டேன்.

 அதுதான் விஷயம். எதை நினைத்து பயந்து கொண்டே இருக்கிறாயோ அதுபோல ஏதாவது ஒன்று லேசாக தெரிந்தால் கூட மனதில் இருக்கும் பயம் அதை போலவே காட்டி கொன்று விடும். அதனால் பயத்தை, அதுவும் அறிவுக்குப் பொருந்தாத பயத்தை வளர்த்துக் கொண்டால் ஆபத்து என்று கூறினார். 

வழக்கமாக இந்த கதையை கூறுபவர்கள். விதிவலியது. அதில் இருந்து யாரும் தப்ப முடியாது. பாம்பானது புழுவின் ரூபத்தில் சென்று பாம்பாக மாறி அவரை கொன்றது என்று கதை சொல்லுவார்கள். 


1 comment:

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...