சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 13 November 2026

குறள் சிந்தனை 3

ஒரு குறள் சிந்தனை: குறள் 391 (அதிகாரம்: கல்வி)

"கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக."

மானிடராய்ப் பிறந்த அனைவருக்கும் கல்வி என்பது மிகவும் அவசியமானது என்பதை உலகில் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால், அந்தக் கல்வி எல்லோருக்கும் சமமாகக் கிடைக்கிறதா என்பது வேறு விடயம். அப்படி நாம் கற்கின்ற கல்வியை எவ்வாறு கற்க வேண்டும், எதற்காகக் கற்க வேண்டும், கற்றபின் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு வாழ்வியல் தத்துவமாக வழங்கியிருக்கிறார் திருவள்ளுவர். 

எப்பேர்ப்பட்ட நூல்களைக் கற்க வேண்டும்?

இதற்கு வள்ளுவரே பதில் கூறுகிறார்; நல்ல நூல்களை, வாழ்வியலில் நமக்கு வழிகாட்டக்கூடிய அறநூல்களைக் கற்க வேண்டும்.

எவ்வாறு கற்க வேண்டும்?

பிழையில்லாமல் கற்க வேண்டும்; அதாவது 'கசடு அற' (குற்றமில்லாமல், ஐயத்திற்கு இடமின்றி) தெளிவாகக் கற்க வேண்டும்.

இதையே சற்று மாற்றியும் சிந்தித்துப் பார்க்கலாம்: எதற்காகக் கற்க வேண்டும்?

'குற்றம் அற' — அதாவது நம்மிடம் உள்ள குற்றங்களும் குறைகளும் நீங்குவதற்காக, அற்றுப்போவதற்காகக் கற்க வேண்டும். 

வெறுமனே வாழ்வில் வேலைக்காகவும், பொருள் ஈட்டுவதற்காகவும் மட்டுமே கல்வி கற்காமல், நல்ல தத்துவங்களைக் கற்று அதன்படி நடந்தால் மட்டுமே கல்வி கற்றதன் பொருள் உண்மையானதாக இருக்கும்.

எனவே, மனதில் உள்ள கசடுகளும் குற்றங்களும் நீங்குவதற்காகப் பிழையில்லாமல் கற்று, கற்ற நெறிகளை வாழ்க்கையில் கடைப்பிடித்துச் சிறந்ததோர் வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும் என்ற உயரிய நோக்கிலேயே வள்ளுவர் இக்குறளைப் படைத்துள்ளார். 

1 comment:

  1. அருமை. 'கசடற' என்பதற்கானா விளக்கம்..

    ReplyDelete

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...