ஆண்டுகள் பலவாய்
அருளுகின்றார் பெரியோர்,
ஆறடி நிலம்கூடச் சொந்தமில்லை!
"காதற்ற ஊசியும் வராது
காண்கடை வழிக்கு" என்றார்
பட்டினத்து அடிகளார்!
ஊசிமுனை ஓட்டைக்குள்
ஒட்டகம் நுழைந்துவிடலாம்,
செல்வந்தர் நுழைந்திடார் சொர்க்கத்தில்;
சொன்னார்கள் பலபேர்...
சோற்றுக்கு வழியிலா
வறியோரின் சிந்தனைக்காய்!
வசதி படைத்தோன்
கேட்டதில்லை அவர்
வார்த்தைகளை ஒருபோதும்!
வக்கனையாய் தத்துவத்தை
வறியவர்க்குத் தள்ளிவிட்டார்
வசதி படைத்தவர்கள் எந்நாளும்!
அரண்மனைச் சொகுசு
ஆடம்பர வாழ்க்கைதனை
அனுபவித்தார் அவனியெங்கிலும்!
தத்துவங்கள் யாவும்
தட்டினில் ஏந்திநின்று
விற்பனைக்கே வைத்திடுவார்!
பசிவயிறு கொண்டோர்க்குப்
பரலோக ஞானம்சொல்லி
பசிமறக்கச் செய்திடுவார்!
மறுமையின் தத்துவத்தை
வறியவர்க்குத் தந்தவரே,
வசதியானவர்க்குச் சாமரம் வீசுகிறார்!
ஏழைகளை என்றுமே
ஏய்த்திடா மதமொன்றும்
எங்கணுமே காண்கிலையே!
மாளிகை மனிதர்களின்
மாய்மால வார்த்தைகளை
மாற்றியெழுத வாராதோ?
வறுமையின் தத்துவத்தை
வளம்படைத்தோர் ஏற்கும்நாள்
வையகத்தில் வாராதோ?

No comments:
Post a Comment