சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 13 November 2026

*ஐம்பதாண்டில்...*


பத்துப் பிள்ளைகள் இருக்கையிலே

சோற்றுக்குப் பிரச்சனை - நல்ல

சட்டைக்குப் பிரச்சனை - ஒழுகா

வீட்டுக்குப் பிரச்சனை...


தீபாவளித் திருநாட்களில்

தின்ன இட்லி பலகாரமும்

மற்ற நாளில் கிடைத்ததை

தின்னும் காலமாயிருந்தது..


வாங்கித் தின்ன சில்லறைக்

காசுகளில் கடலைமிட்டாய்களும்

மற்ற பண்டமாக வறுத்த

புளியங்கொட்டைகளுமுண்டு


திருவிழாக்களுக்குக் கிடைத்தது

பள்ளிச்சீருடை மட்டும் தானே

மூத்தவர்கள் பழைய துணிகள்

இளையவருக்குக் கிடைத்தது..


தெருவிளக்கு ஒன்றிருப்பதாலேயே

மின்சாரம் என

ஒன்றிருப்பதே தெரிந்தது அன்று


தெருவிளக்கே பலருக்குப் போதி மரம்

சிறு பிள்ளைகளின்

விளையாட்டு மைதானம்

பலருக்குச் சாப்பாட்டுக்கூடம்..


ஓட்டுத்திண்ணையில் உறங்கிட

ஒலைப்பாயும் பொத்திக்கொள்ள

அம்மாவின் கிழிந்த புடவையும்

குளிருக்குச் சாக்குப்படுதா கிட்டிடும்..


அறுபது அகவை கண்ட

அநேகரின் அனுபவமிதுவே..

ஒன்றிரண்டு பிள்ளைகள் ஆனபின்

ஓராயிரம் பிரச்சனைகள்...


பிள்ளை பிறந்ததிலிருந்தே

பிரச்சினைகளுக்குப் பஞ்சமில்லை

எந்த நர்சிங் ஹோமில் பிரசவம்

எங்கே எல்.கே.ஜி

எந்தப் பள்ளியில் சேர்ப்பது

யாரிடம் டியூஷன் அனுப்பிட

எந்த காலேஜ் சேர்க்க

என்ன வேலை கிடைக்கும்

அரசு வேலை கிடைக்குமா

கொடுத்த காசுக்கு வேலை

ஏமாற்ற மாட்டானே புரோக்கர்

வரன் பார்க்க மேட்ரிமோனி


இன்னும் தொடருதே

ஆயிரம் பிரச்சினைகள்...


அடேங்கப்பா ஐம்பதாண்டில்

அத்தனையும் மாறிப்போச்சே


No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...