ஒரு குறள் சிந்தனை: குறள் 236 (அதிகாரம்: புகழ்)
"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று."
ஒருவர் இந்த உலகில் பிறந்து விளங்கினால், புகழைத் தரும் நல்ல குணங்களோடு விளங்க வேண்டும். அப்படிப் புகழைத் தேடிக்கொள்ள முடியாதவர்கள், பயனில்லாமல் வாழ்வதை விடப் பிறவாமல் இருப்பதே மேல் என்பது பொதுவான பொருள்.
ஆனால், இங்கே 'தோன்றுதல்' என்பது எதைக் குறிக்கிறது?
அது பிறத்தலைக் குறிக்கிறதா, ஒரு பதவியில் அமர்வதைக் குறிக்கிறதா, அல்லது மக்கள் மத்தியில் வெறுமனே காட்சியளிப்பதைக் குறிக்கிறதா?
'தோன்றுதல்' என்பதைப் பிறப்போடு மட்டும் ஒப்பிட முடியாது; ஏனெனில் மனித வாழ்வில் தோற்றம், மறைவு என இரு கூறுகள் உண்டு. அதேபோல, வெறும் பதவியில் அமர்வதையும் கணக்கில் எடுக்க முடியாது. ஏனெனில் படிப்பு அல்லது தேர்வு சார்ந்த தகுதிகளால் எவரும் பதவிக்கு வந்துவிட முடியும். ஏன், சில நேரங்களில் அடிக்கும் காற்றில் கூட எச்சிலைகள் கோபுரத்தில் போய் ஒட்டிக் கொள்வதுண்டு! எனவே, பதவிகளில் வெறுமனே காட்சியளிப்பதைக் (Mere presence) கூட 'தோன்றுதலாகக்' கருத முடியாது.
பாரதியார் கூறியது போல, "வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவரேனும், பொய் அகலத் தொழில் செய்தே பிறர் போற்றிட வாழ்பவர் எங்கும் மேலோர்" என்பதே உண்மை.
பதவிகளின் உயர்வு தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு, எந்தப் பணியில் இருந்தாலும் அப்பணியின் மூலம் மக்களுக்குத் தொண்டு செய்து சிறப்பாகப் பணியாற்றுதலே 'புகழொடு தோன்றுதல்' என்பதன் உண்மையான அர்த்தம். எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்க வேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது.
No comments:
Post a Comment