காடு திருத்தி கழனியாக்கி
வையகத்தின் பசிபோக்கியவர்களே!
நகரமும் நாடும் உருவாக - தங்கள்
நரம்புகளை மூலதனமாக்கியவர்களே!
ஊசி முதல் உத்திரம் வரை
உலகிற்கு அத்தனையும் உருவாக்கியவர்களே!
உற்பத்தி பல செய்து - இங்கு
உலகின் முகம் மாற்றிய உழைப்பாளிகளே!
ஆடை அணிகலன் அத்தனையும் - செய்து
அழகு பார்த்த அற்புதக் கலைஞர்களே!
குடிசைகளில் குமைந்தாலும் - பிறர்க்குக்
கோபுரங்கள் சமைத்துத் தந்தவரே!
மன்னர்கள் பேரரசராகிட - அன்று
மண்ணுக்குள் மாய்ந்து போனவர்களே!
பேரரசு படைத்திட அன்று - தங்கள்
பேருயிரை ஈந்த பெரு வீரர்களே!
இனம் காக்க மொழி காக்க - நிலத்தில்
இரத்தம் சிந்திய வரலாற்று நாயகர்களே!
புவி சிவக்க புரட்சி செய்திட - அன்று
போர் பரணி பாடிய புரட்சியாளர்களே!
சரித்திரம் படைத்திடத் தங்களைச் - சக்கையாய்
சல்லடை போட்டுத் தந்த தியாகிகளே!
வியர்வைத் துளிகளால் கோட்டைகள் கட்டி,
விடிவெள்ளி ஆகிப்போன விசித்திரங்களே!
சுவடுகள் இன்றி மறைந்து போன - இந்த
ஜகத்தின் ஜீவ நதி ஊற்றுகளே!
என்றுமே உலகில் எழுதப்படாத - அந்த
ஏழைகளின் பக்கங்கள் நீங்கள் அன்றோ!
முகவரிகள் தொலைத்து முகங்கள் இழந்து
முடிவிலா வானில் நின்றீர் அன்றோ!
ஆடவர் பெண்டிர் என பேதங்களின்றி - உழைப்பால்
அகிலத்தை அணுஅணுவாய்ப் படைத்தவரே!
மகுடம் சூடிய மன்னர்கள் வாழும் - இந்த
மண்ணின் வரலாற்றில் உமக்கிடமில்லை!
ஆயினும் உங்களின் தியாகம் இன்றி
அணுவளவும் அசைந்திட வழியுமில்லை!
எத்தனை எத்தனையோ கோடிப் பேர்களின்
எலும்புக் கூட்டின் மேல் தான் உலகம் நகர்கிறது!
நன்றியறிதலின் கண்ணீர்த் துளிகளால்
நாங்கள் நெஞ்சார வணங்குகிறோம்!
பெயர் தெரியா பேரன்பின் சிகரங்களே
பேரண்டம் உள்ளவரை போற்றுகிறோம்!
******************************
(8.11.2026 அன்று நிமிர் இலக்கிய வட்டம் நடத்திய இணையவழி கவியரங்கில் நான் பாடியது.)
*சீனி கார்த்திகேயன் . புதுகை*
No comments:
Post a Comment