"யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" .
-குறள் 127
அதிகாரமும் பாலும்:
• பால்: அறத்துப்பால்
• இயல்: இல்லறவியல்
• அதிகாரம்: அடக்கமுடைமை
பொருள்:
காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்காவிட்டாலும், நாவையாவது தவறாமல் காக்க வேண்டும்; அவ்வாறு காக்கத் தவறினால், சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
• மு.வரதராசன் விளக்கம்: காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.
• கலைஞர் மு.கருணாநிதி விளக்கம்: ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகிவிடும்.
சிந்தனை விரிவாக்கம்:
உலகில் உள்ள உயிரினங்களிடையே மனித இனம் மட்டுமே மற்ற இனங்களைக் காட்டிலும் கூடுதலாகச் சிந்தித்துச் செயல்படும் பகுத்தறிவையும், கருத்துகளை வெளிப்படுத்தும் மொழியையும் கொண்டுள்ளது. அவ்வாறு தமது அனுபவங்களையும், கருத்துகளையும், சிந்தனைகளையும் பரிமாறிக் கொண்டதால்தான் இந்த உலகம் இந்த அளவிற்கு உயர்ந்ததாக மாறியது.
குடும்பங்களாக, குழுக்களாக, சமூகமாக மாறிய பெருமை மனித இனத்திற்கு மட்டுமே உண்டு. கருத்துகளை வெளிப்படுத்தும் சாதனமாகப் பேச்சு இருக்கிறது. அந்தப் பேச்சினைத் தத்தம் கட்டுக்குள் வைத்துக் கொள்ளாமல் நாவின் போக்கில் விட்டால் நாசத்தையே தரும் என்பதைத்தான் வள்ளுவர் மிகச் சிறப்பாக எடுத்துரைக்கிறார். எதைக் கட்டுப்படுத்த வேண்டும், எப்படி கட்டுப்படுத்த வேண்டும் என்றெல்லாம் அறிவுரை வழங்கும் நோக்கில்தான் இலக்கியங்கள் படைக்கப்பட்டன. அதனால்தான் வள்ளுவரும் நாவைக் கட்டுப்படுத்துவது பற்றி மிகச் சிறப்பாக இவ்வாறு எடுத்து வைக்கிறார்.
"ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்" என்பதை விளக்கிடும் காவியங்கள் நாம் அறியாததா என்ன?
• துரியோதனன் மாயமாளிகையில் தடுமாறி விழுந்தபோது, திரௌபதி கூறிய நகைச்சுவையான கடுஞ்சொல்லே மாபெரும் பாரதப் போருக்கு ஒரு முக்கியத் தொடக்கப்புள்ளியாக அமைந்தது. ஒரு சொல் எவ்வளவு பெரிய அழிவை உருவாக்கும் என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.
• கோவலனை முறையாக விசாரிக்காமல் பாண்டிய மன்னன் அவசரப்பட்டு உதிர்த்த "கொன்று அச் சிலம்பு கொணர்க ஈங்கு" என்ற ஒற்றைச் சொல், மதுரை மாநகரமே எரியவும், மன்னனின் உயிர் போகவும் காரணமாக அமைந்தது.
• சீதையைக் கண்ட பின் ராமனிடம் திரும்பிய அனுமன், "கண்டனென் கற்பினுக்கு அணியை" என்று முதலில் "கண்டேன்" என்ற மங்கலச் சொல்லைப் பயன்படுத்தி ராமனின் துயரத்தை உடனடியாகப் போக்கினார். ஒரு சொல் எவ்வாறு ஆறுதலையும் வெற்றியையும் தரும் என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும்.
தற்காலத்தில் ஆட்சியாளர்களிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் வரை, அரசியல்வாதிகளிலிருந்து அலுவலர்கள் வரை, குடும்பங்களிலிருந்து சமூகம் வரை பலதரப்பிலும் நாகாக்காததாலேயே பல பிரச்சினைகள் உருவாகின்றன. எனவே இக்குறள் இன்று மிகவும் தேவைப்படும் குறளாக உள்ளது. நல்லிணக்கம் வேண்டுவோரின் குரலாகவும் உள்ளது.
அடக்கமுடைமை அதிகாரத்தில் நாவடக்கம் குறித்து வள்ளுவர் மேலும் சில ஆழமான கருத்துகளை முன்வைக்கிறார். அவற்றைப் பிறிதொரு சிந்தனையில் காண்போம்.
No comments:
Post a Comment