சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 13 November 2025

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள் 14

 இன்று எங்கள் வீட்டில் அருகே உள்ள நண்பர் கண்ணன் என்பவர் புற்றுநோயால் காலமானார் என்று செய்தி வந்தது. நல்ல சிரித்த முகம், எல்லோரிடமும் நன்றாக பேசுவார் மிகவும் மனது கஷ்டமாக இருந்தது. இறுதி மரியாதை செலுத்த வீட்டிற்கு சென்றேன். நோயால் மிகவும் மாறி போய் ஆள் அடையாளமே தெரியவில்லை,

அப்படியே ஒரு 15 ஆண்டுகள் பின்னோக்கி எனது நினைவுகள் சென்றது. நான் சைதாப்பேட்டை இ எஸ் ஐ மருந்தகத்திலே தலைமை மருந்தாளுநராக பணிபுரிந்த நேரம்.

ஒரு நாள் காலை நண்பர் அங்கன்னனிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பயணித்துக் கொண்டிருந்த நான் ஒரு ஓரமாக வாகனத்தை நிறுத்தி விட்டு அவரிடம் பேசினேன். நண்பரே உடனடியாக அப்போலோ மருத்துவமனைக்கு செல்லுங்கள். நமது நண்பர் தமிழ்ச்செல்வன் காலமாகிவிட்டார். உதவி செய்ய அருகில் யாரும் இல்லை உடனே அங்கு சென்று என்னை அழையுங்கள் என்றார்.

எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. என்ன நடந்தது, எப்படி இறந்தார் என்று கேட்டேன். 

உங்களுக்கு தெரியாதா அவருக்கு புற்றுநோய் தாக்கி சிகிச்சையில் இருந்தார் என்று கூறினார். 

எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது யாரும் சொல்லவில்லையே என்றேன். 

இல்லை அவர் யாரிடமும் சொல்லக்கூடாது என்று கூறிவிட்டார் எனக்கு தெரிந்தவரை பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் யாரிடமும் சொல்வதில்லை. 

அதைவிட அந்த நோய் தொற்றியது தெரிந்தவுடன் ஆயுள் மிக வேகமாக குறைந்து விடுகிறது.

நேரில் அப்போலோ மருத்துவமனைக்கு சென்று வரவேற்பறையில் விசாரித்தேன். 

அறை எண்ணை சொன்னார்கள். அங்கு போய் பார்த்தபோது வேறு யாருடைய உடலோ கிடத்தப்பட்டிருந்தது. 

எனக்கு புரியவில்லை மீண்டும் வரவேற்பறைக்கே சென்று, பெயர், வயதெல்லாம் சொல்லி கேட்டேன். 

அதே அறை எண்ணைத்தான் சொன்னார்கள். 

வந்து பார்த்தேன் இப்பவும் அடையாளம் தெரியவில்லை. வெளியே குழப்பத்தோடு வந்தேன். 

ஒரு வேகமாக ஒருவர் ஓடி வந்தார். 

சார், யாரை தேடுகிறீர்கள் என்று கேட்டார். 

எனது நண்பர் தமிழ்ச்செல்வன் என்பவர் இங்கு இறந்து விட்டதாக தகவல் வந்தது. அது தான் வந்து பார்த்தேன், ஆனால் வேறு யாரையோ காட்டுகிறார்கள் என்றேன்.

அவர் கண்ணீரோடு சொன்னார். 

அவர்தான் தமிழ்ச்செல்வன். அவரது தம்பி தான் நான் என்றார். 

எனக்கு மிக மிக அதிர்ச்சியாகிவிட்டது. ஏனென்றால் தமிழ்ச்செல்வனை எனக்கு நீண்ட காலமாக தெரியும். ஆள் நன்றாக அழகாக செக்கச் செவேல் என்று இருப்பார். சிரித்த முகம். பார்த்தவுடன் கவரக்கூடிய அழகான முகம். ஆனால் இங்கு நான் பார்த்ததோ கருப்பாக வதங்கிப் போன ஒரு உடலை. அப்போது தான் தெரிந்தது புற்றுநோய் எந்த அளவுக்கு கொடூரமாக உருவத்தை மாற்றி அழித்து விடுகிறது என்று.. இத்தனைக்கும் அவருக்கு எந்த கெட்ட பழக்கமும் கிடையாது. ஏன் வடை காபி என்று கடையில் கூட சாப்பிட மாட்டார். மிகவும் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்கிறவர். வாழ்க்கை எவ்வளவு கொடூரமானது.

சிறிது காலம் கழித்து நான் புதுக்கோட்டைக்கு மாற்றலாகி வந்த போது எனக்கு மிகவும் தெரிந்த ஒரு பெண் மருத்துவர் ஒருவர் மார்பக புற்று நோயால் இறந்து போனார். ஒரு நல்ல மகப்பேறு மருத்துவர் என்று பெயர் பெற்றவர். எத்தனையோ பெண்களுக்கு புற்றுநோயின் ஆரம்ப நிலைகளை கண்டறிந்து கூறி வழிகாட்டி காப்பாற்றியவர். ஆனால் அவருக்கே அவருடைய நோயை பார்த்து சிகிச்சை செய்ய முடியாது போனது என்பது காலத்தின் கொடுமை தான்.. 

அதன் பிறகு மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மருந்து கிடங்கு அலுவலராக பொறுப்பேற்ற பிறகு சிறப்பு மருந்துகளை கூடுதலாக பெற்று தருவதிலும், கூடுதல் நிதி ஒதுக்கீடு பெறுவதிலும் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டேன். 

பல சிறப்பு சிகிச்சை பிரிவுகளுக்கு கூடுதல் மருந்துகளை பெற்றுக் கொடுத்ததில் மகிழ்ச்சி ஏற்பட்டது. நான் பணியேற்ற பிறகு மூன்றாண்டுகளில் குறிப்பாக புற்றுநோய் சிகிச்சை பிரிவில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு மருந்துகளை பெற்று வழங்கினேன். அதற்கு அந்தத் துறை தலைவர் மருத்துவர் ராஜசேகரன் அவர்களும் முதல்வர் அவர்களும் தான் காரணம்.

ஒரு முறை மருத்துவர் ராஜசேகரன் எனக்கு அலைபேசி அழைப்பு விடுத்து சார் உங்களை பார்க்க வருகிறேன் என்று கூறினார். நான் காத்திருந்தபோது, அவர் நோயாளிகளை கூடவே அழைத்து வந்து இன்றைக்கு நீங்கள் உயிரோடு இருப்பதற்கு இவர் தான் காரணம் இந்த மருந்துகளை இவர் தான் பெற்றுக் கொடுத்தார் என்று கூறினார். நான் சொன்னேன். இது என்னுடைய கடமை மருந்துகளை பெற்றுக் கொடுத்த நான் தான் காரணம் என்று சொல்வதை விட இதற்கு கூடுதலாக முயற்சி எடுத்த மருத்துவருக்கும், முதல்வருக்கும் தான் நன்றி நீங்கள் கூற வேண்டும் இது என்னுடைய கடமை என்று கூறினேன்.

அரசில் மருந்து கொள்முதலில் இயல்பாக சந்திக்க கூடிய பிரச்சனைகள், நடைமுறைகள், அவைகளைத் தாண்டி மருந்துகள் கொள்முதல் செய்து தருவது என்பது சிரமம் தான் என்றாலும் இயன்றவரை விரைவாக பெற்றுத்தர முயற்சிகள் செய்தேன். 

ஒரு சில மருத்துவமனைகளில் மட்டுமே இருந்த புற்றுநோய் சிகிச்சை பிரிவுகள், இன்றைக்கு தமிழகமெங்கும் ஏராளமான மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் வந்துவிட்டது. இன்றைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் நவீன மருந்துகள், மருத்துவ வசதிகள் பெருகி, புற்றுநோய் சிகிச்சை பெரிய அளவிற்கு வளர்ந்து இருக்கிறது என்பது பெருமைக்குரிய விஷயம். 

நான் பொதுவாகவே எல்லா பணியாளர்களுக்கும் கூறுவது இது தான். கூடுதலாக ஒன்றும் செய்ய வேண்டாம். நாம் ஒரு இடத்திற்கு ஒரு உதவி எதிர்பார்த்து சென்றால், என்ன நமக்கு நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ. அதை மற்றவர்களுக்கு செய்வது தான் அறம், கடமை, தர்மம் எல்லாம்.

எல்லோரையும் போல் வேலை செய்தால் சம்பளம் கிடைக்கும் என்றாலும், அதைக் காட்டிலும் கூடுதலாக மக்களுக்கு நேரடியாக பணி செய்து, உயிர் பிழைத்து, நோய் நீங்கி உடல் நலம் பெற்று, அதனால் கிடைக்கும் நலனை நம்மால் காண முடிகிறது, அதிில் நமக்கும் பங்கு இருக்கிிறது அல்லவா, அதுதான் ஒரு மருந்தாளுனருக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. 

2 comments:

  1. 🙏🙏🙏🙏✅✅✅✅✅✅✅🙏🙏🙏🙏🙏..E.லீலாவதி..சென்னை...

    ReplyDelete
  2. Nanbare, Awesome, You replicate the God's love.100% peace guaranteed.Love you.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...