குலபதி பாலையா பள்ளியில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநாட்டிற்கு அழைத்தார். அதில் முத்துநிலவனும் அபிராமியும் வில்லிசை கச்சேரி நடத்தியது நன்றாக நினைவிருக்கிறது.
அதிலிருந்து எங்கள் நட்பு பயனும், இயக்கப்பயனமும் தொடர்ந்தது. ஓவியராக பணியினை தொடங்கிய நிலவன் தமிழாசிரியராக அரசுப்பணியில் இணைந்தபின் அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்களிலும் இணைந்து பணியாற்றிய காலங்கள் மறக்க இயலாதவை. இருவரும் அரசுஊழியர் சங்கத்தில் மாவட்டப் பொறுப்பில் இருந்து றுப்பிலிருந்தோம் . அரசு ஊழியர் ஆசிரியர் போராட்டங்களில் வேலை நிறுத்தங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றினோம்.
விளம்பர தட்டி என்றாலே முத்து நிலவன் கை வண்ணம் தான். அவர் எழுத்தில்லாமல் ஒருமுறை கூட தட்டியதில்லை. ஒரே ஒரு முறை மட்டுமே நான் தட்டி எழுதினேன். மற்ற வகையில் அவர்தான் தட்டி எழுதுவார். அவ்வளவு அழகான நேர்த்தியாக சிறிதான ஒரு படம் ஒன்று வரைந்து எழுதுவார்... .
முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சகல நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உற்சாகமூட்டுவார். நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைப்பார். கூட்டங்களிலேயே பேச வைப்பது, நாடகங்களில் நடிக்க வைப்பது என்று எல்லா வகையிலும் என்னை வளர்த்தெடுக்க உதவியவர் அவர்தான். எழுத்தாளர் சங்க மாநாடுகளிலும், அரசு ஊழியர் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டங்களிலும் நாடகங்களில் என்னை நடிக்க வைத்தவர் அவர்தான்.
ஒரு முறை ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநாடு நடைபெற்ற போது அதில் நாங்கள் ஆரம்ப பள்ளியில் ஒரு நாள் என்றொரு நாடகம் நடத்தினோம். அவர் ஒரு ஆரம்ப கல்வி ஆசிரியராக நடித்திருக்கிறார் ஆசிரியர் படம் கஷ்டங்களை மிக தத்ரூபமாக நடித்திருப்பார். பள்ளியில் புகுந்து கலாட்டா செய்யும் உள்ளூர் அரசியல்வாதியாக நான் நடித்தேன். வேட்டி கட்டி பழக்கம் இல்லாத நான் அந்த நாடகத்துக்காக வேட்டி கட்டி உள்ளே நுழையும் போது கால் தடுமாறி விழப் போனேன். சமாளித்த நான் அங்கிருந்து நாற்காலியை ஓங்கி தரையில் அடித்தவாறு எங்கடா அந்த வாத்தி என்று அரங்கத்தில் நுழைந்தேன் அவர் பயந்து ஓடினார். அடுத்த சில நிமிடங்கள் எங்கள் அட்டகாசம் தான். நிறைய கைதட்டல்கள் கிடைத்தன. மறுநாள் தீக்கதிர் செய்தியில் எங்கள் நாடகத்தை பாராட்டி எழுதியிருந்தார்கள். இதுபோல நிறைய அனுபவங்கள் உண்டு.
என்னை மட்டுமல்ல நிறைய பேரை எழுத்தாளர்கள், கலைஞர்களாக, பேச்சாளர்களாக உருவாக்கி அழகு பார்த்தார்.
பின்னாளில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் அரசுடன் இணைந்து அறிவொளி இயக்கம் கண்டபோது அதில் பங்கேற்று சிறப்பாக பணியாற்றினார்.
அவர் மைய ஒருங்கிணைப்பாளராகவும், நான் ஒன்றிய ஒருங்கிணைப்பாளராகவும் இணைந்து பணியாற்றிய காலங்கள் என்றென்றும் மறக்க முடியாதவை. அறிவொளி இயக்கத்தின் சார்பில் பல்வேறு கலை யாத்திரைகள் நடத்திய போதும், கலை நிகழ்ச்சிகள் நடத்தியபோதும் இணைந்து பணியாற்றியவை மிகச் சிறப்பானவை.
அவர் ஒரு நல்ல எழுத்தாளர், கலைஞர், ஓவியர், பேச்சாளர், பாடகர், அமைப்பாளர், வழிகாட்டி, என்று அவருடைய பன்முக திறமைகள் பற்றி ஏராளமாகச் சொல்லியிருக்கிறார். கொண்டே போகலாம்.
இன்று அவரது எழுபதாவது பிறந்த நாள். அவர் நூறாண்டு காலம் வாழ்ந்து, இலக்கிய உலகிற்கும் சமூகத்திற்கும் ஏராளமான படைப்புகளை தர வேண்டும். குடும்பத்தாருடன் சகல செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்....
No comments:
Post a Comment