சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 5 May 2025

சாக்ரடீஸும் ஔவையாரும்.

 

வரலாற்றின் மிகச்சிறந்த தத்துவஞானிகளில் ஒருவரான சாக்ரடீஸ், அவரது அசைக்க முடியாத அமைதி மற்றும் ஞானத்தைத் தேடுவதற்காக அடிக்கடி நினைவுகூரப்படுகிறார். இருப்பினும், பின்னால் அவரது அமைதியான குடும்ப வாழ்க்கை என்னவோ தினசரி சோதனைகள் நிறைந்ததாக இருந்தது. அவரது கோபக்கார மனைவி சாந்திப்பே. அவளுடைய கூர்மையான வார்த்தைகளும் வெளிப்படும் கோபமும் அவரது பொறுமைக்கு தொடர்ந்து சோதனையாக மாறியது. அவளை வெறுப்பதற்குப் பதிலாக, சாக்ரடீஸ் இந்த சவால்களை சுய கட்டுப்பாடு மற்றும் பணிவு பற்றிய முக்கிய பாடங்களாகக் கண்டார், அவர் மற்றவர்களுக்குப் போதித்தார் நற்பண்புகளைக் கூர்மைப்படுத்தினார்.

 ஒருமுறை நண்பர்களுடன் சாக்ரடீஸ் ஒரு பிரச்சனை குறித்து மிக தீர்க்கமான விவாதத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அவரது மனைவி சாந்திப்பே வீட்டில் ஏதோ, வேலை நடக்கவில்லை என்று சாக்ரட்டீஸ் மீது கோபமாக இருந்தாள். அவரை அழைத்தும், அவர் வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் மனைவி அழைத்ததை கவனிக்காமல் விட்டார். வீட்டில் தட்டுமுட்டு சாமான்கள் பறந்தன. சாக்ரடீஸ் நண்பர்கள் சத்தத்தை கேட்டவுடன் விவாதத்தை நிறுத்திவிட்டு எழுந்தார்கள். சாக்ரடீஸ் பொறுமையாக இடி இடிக்கிறது வேறொன்றும் இல்லை என்றார். 

சாந்திப்பே கடுப்பாகி வெளியே வந்து சாக்ரடீஸ் தலையில் ஒரு வாளி தண்ணீரை ஊற்றினார். கோபத்திற்குப் பதிலாக, சாக்ரடீஸ் சாதாரணமாக சிரித்துக் கொண்டே, "இடிக்குப் பிறகு, மழை எதிர்பார்க்க வேண்டியதுதான்" என்று கூறினார். 

ஆத்திரமூட்டலை எதிர்கொள்வதில் அவரது நகைச்சுவையும் மீள்தன்மையும் அவரது தத்துவத்திற்கு மற்றொரு சான்றாக மாறியது: உண்மையான ஞானம் என்பது உண்மையை அறிவது மட்டுமல்ல - அது நெருப்பின் கீழும் வாழ்வது.

.................................................... 

நாடு நாடாக சுற்றி மன்னர்களையும் மக்களையும் சந்தித்து தமிழ் பாடல்கள் பாடி திரிவது ஔவையாரின் வழக்கம். அவ்வாறு ஒரு முறை ஒரு காட்டுப் பகுதி வரும்போது ஔவையார் மிகவும் களைப்பாக இருந்தார். அப்போது அங்கு வந்த சாக்ரடீஸ் ஔவையாரை பார்த்து பேசிக் கொண்டிருந்தார். ஔவையாரின் தமிழ் புலமை கண்ட அவர் ஔவையாரின் பசியை பார்த்து தனது வீட்டிற்கு உணவு அருந்த அழைத்தார். 

பசியாலும் தாகத்தாலும் களைப்பாய் இருந்த ஔவையாருக்கு யாராவது அழைக்க மாட்டார்களா என்ற நிலை தான் இருந்தது. சாக்ரடீஸ் அழைத்தவுடன் மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். உணவருந்த அழைத்த சாக்ரடீஸுக்கு உள்ளுக்குள் பயம். மனைவி சாந்திப்பே என்ன சொல்லுவாளோ என்று யோசித்துக் கொண்டு வீட்டிற்கு வந்தவர் ஔவையாரை திண்ணையில் அமரச் சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றார். 

வீட்டிற்குள் சென்ற சாக்ரடீஸ் மெல்ல மனைவி சாந்திப்பேயை கொஞ்சியவாறு,  அருகே அமர்ந்து அவளது முகத்தைச் சீர் செய்து விட்டார். ஈரோடு பேனையும் தலையினின்றும் எடுத்தார். விருந்து வந்திருக்கிறது என்றும் சொன்னான். சொல்லவும், அவள் மிகவும் வருந்தினாள். சினத்தால் கூத்தாடினாள். அவர் மீது வசை பாடினாள். வெறிகொண்டவளாக ஆடி, அவரைப் பழ முறத்தால் ஓடஓடப் புடைத்தாள்

வெளியில் இருந்து கவனித்த ஔவையார் நிலைமையை புரிந்து கொண்டார் உடனே சத்தமாக பாடல் ஒன்றை பாடினார். 

“இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி

விருந்து வந்ததென்று விளம்ப - வருந்திமிக ஆ

டினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தாள்

சாடினாள் ஓடோடத் தான்." 

பாட்டைக் கேட்டு வெளியில் இருப்பவர் புலவர், அவர் அறம் பாடினால் நமக்கு கெடுதல் என்று புரிந்து கொண்ட சாந்திப்பே கணவனை சரி சரி உள்ளே அழைத்து வாருங்கள் சாப்பாடு போடுகிறேன் என்று கூறிவிட்டாள். 

சங்கோஜத்துடன் சாக்ரடீஸ் ஔவையாரை வீட்டிற்குள் அழைத்து வந்தார். 

என்னதான் சாப்பாடு போடுகிறேன் என்று சொல்லிவிட்டாலும் சாந்திப்பேயின் இயல்பு குணம் மாறாது, கடுகடுத்த முகத்துடன் வேண்டா வெறுப்பாக உணவை பரிமாறவும் ஆரம்பித்தாள். 

பசியாயினும் கௌரவ குறைச்சலாக உணவு உண்ண ஔவையாருக்கு விருப்பமில்லை. எனவே மீண்டும் ஒரு பாடலை பாடிவிட்டு வெளியே சென்று விட்டார். 

"காணக்கண் கூசுதே கையெடுக்க நாணுதே

மாணொக்க வாய்திறக்க மாட்டாதே - வீணுக்கென்

என்பதெல்லாம் பற்றி எரிகின்ற தையையோ

அன்பில்லாள் இட்ட அமுது." 

பாடலின் கருத்து இதுதான்.. 

"ஐயையோ! அன்பில்லாத நின் மனையாள் இட்ட அமுது அது! அதனைக் காணவும் கண்கள் கூசுகின்றன! கையால் எடுக்கவும் வெட்கமாகின்றது. பெருமை நிறைந்த என் வாயும் திறக்க மாட்டேன் என்கிறது. பயனின்றி என் எலும்பெல்லாம் பற்றி தெரிகின்றது. 

இவ்வாறு கூறிவிட்டு ஔவையார் விடு விடு என நடந்து சென்றுவிட்டார். மனம் நொந்து போன சாக்ரடீஸ் பின்னுக்கு வந்து அந்த அம்மையாரை சமாதானப்படுத்த முயற்சி செய்தார். ஔவையாருக்கு சாக்ரடிஸ் மீது கோபம் இல்லை நிலைமையை பார்த்து மனம் நொந்து போனார். சாக்ரடீஸ் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த அம்மையாரின் பின்னால் வந்து கொண்டிருக்கிறார். உடனே அந்த அம்மையார் சாக்ரடீசை பார்த்து மீண்டும் ஒரு பாடலை பாடினார்

"பத்தாவுக் கேட்ட பதிவிரதை உண்டானால்

எத்தாலுங் கூடி இருக்கலாம் - சற்றேனும்

ஏறுமா றாக இருப்பாளே யாமாகிற்

கூறாமற் சந்நியாசம் கொள்." 

இதைக் கேட்ட பின் சாக்ரடீஸ் இப்படி ஒரு வாழ்க்கை நமக்கு தேவையா என நினைத்து சன்னியாசம் மேற்கொள்ள முடிவு செய்தார். 

அன்னாளில் அவர் அரசுக்கு எதிராகவும், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே பகுத்தறிவு பிரச்சாரத்தை மேற்கொண்டார். இதை அறிந்த பொறுக்க மாட்டாத பிற்போக்குவாதிகளும் அரசும் கூட்டுச்சதி செய்து அவருக்கு மரண தண்டனை விதித்தனர்... 

(இந்த ஔவையார் சங்ககாலத்து ஔவையார் அல்ல... பிற்காலத்தவரே, பெண்களை விமர்சித்தவர்) 

________________________________

என்னடா இது, சம்பந்தா சம்பந்தமில்லாமல் சாக்ரட்டீஸையும் ஔவையாரையும் கோர்த்து கதை விடுகிறானே என்று பார்க்கிறீர்களா...


கால வித்தியாசம் வேறு தான்.. தேசமும் வேறு தான்... பின்னாளில் பிறந்த ஔவையார் ஒருவேளை சாக்ரடீஸ் காலத்தில் இருந்திருந்தால் என்ன சொல்லிருப்பார் என்ற சிறிய கற்பனை தான் இது. 


ஏன் ,ஆளுநர் முன்னாளில் இறந்த சிவாஜி பிற்கால அந்நியரை எதிர்த்து போராடியதாக கதை விட்ட போது, ​​நம் அண்ணாமலை கூட சிவாஜி மயிலாப்பூர் காளிகாம்பாள் கோயிலில் சாமி கும்பிட்டார் என்று புருடா விடும்போது ஏற்றுக்கொண்ட மக்கள், புல்புல் தாரா பறவையிலேறி அந்தமானிலிருந்து வீரசாவர்க்கார் பறந்து வந்தார் என பாடபுத்தகத்திலேயே கதைவிட நம்மாட்கள் தயாராகும் போது 

என்னுடைய கற்பனையை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ன... 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...