சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 23 May 2025

பாப் மார்லி

 

"பெரிய நிகழ்ச்சி. பெரிய மேடை. மக்கள் எல்லாரும் திரண்டு வரப்போகிறார்கள். நீங்கள் வந்து பாட முடியுமா, பாப் மார்லி?” என்று யாரோ அழைத்துக் கேட்டபோது, “எங்கிருந்து அழைக்கிறீர்கள்?” என்று கேட்டேன். ஜமைக்காவில் இருந்து என்று பதில் வந்தது. தெளிவாகவே சொன்னேன். “சிறிய நிகழ்ச்சியாக இருந்தாலும் சிறிய மேடையாக இருந்தாலும் ஒரே ஒரு குழந்தை மட்டுமே வந்து கேட்கப் போகிறது என்று நீங்கள் சொன்னாலும் மறுக்காமல் வருவேன். உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் உதறித் தள்ளிவிட்டுப் பறந்து வருவேன். அந்த ஒரே ஒரு குழந்தைக்காகப் பாடுவேன். ஏனென்றால் அது ஜமைக்காவின் குழந்தை. எனவே, என் குழந்தை.”


எனது பாடலையும் இசையையும் சுமந்து கொண்டு பறந்தேன். என் ஜமைக்கா இந்த முறையாவது மாறி இருக்கிறதா? நான் கனவு கண்ட விடுதலை கிடைத்து விட்டதா? குழந்தைகள் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு, மகிழ்ச்சியாகப் பள்ளிக்கூடம் சென்று படிக்க ஆரம்பித்து விட்டார்களா? ‘ஆஊ’ என்று கூச்சல் இட்டுக்கொண்டு மைதானத்தில் ஓடிப்பிடித்து விளையாட ஆரம்பித்து விட்டார்களா? ஆசையோடு தேடினேன்.


இந்த முறையும் அப்படியேதான் இருந்தது என் நாடு. இரவு நேரத்தில் கூடக் கண்கூசச் செய்யும் அளவுக்கு மின்னும் பல இடங்களை உலகம் முழுக்கப் பார்த்திருக்கிறேன். என் ஜமைக்கா இருண்டு கிடந்தது. கடை வீதிகளுக்குச் சென்று பார்த்தேன். பூட்டிக்கிடந்தன. பள்ளிக்கூடங்களை நோக்கி ஓடினேன். பாழடைந்து கிடந்தன. என் மக்களையாவது பார்க்கலாம் என்று வீதிகளில் அலைந்தேன். எல்லா இடங்களிலும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியைப் பிடித்துக்கொண்டு நின்று கொண்டிருந்தார்கள்.


எப்போது மறையும் துப்பாக்கி? எப்போது விலகும் இருள்? எப்போது அச்சமின்றி வெளியில் வருவார்கள் என் குழந்தைகள்? எப்போது என் மக்களுக்கு வேலை கிடைக்கும்? என் நிலத்திலிருந்து எப்போது பசி மறையும்? எப்போது அறிவொளி பரவும்? எப்போது விழிக்கும் என் ஜமைக்கா?


சோகத்தோடு என் அறைக்குத் திரும்பினேன். இன்னும் இரண்டு நாள்கள் தான் இருந்தன நிகழ்ச்சிக்கு. சரி, கொஞ்சம் தயாராகலாம் என்று மனதில் தோன்றிய ஒரு பாடலை முணுமுணுக்கத் தொடங்கினேன். யாரோ கதவைத் திறந்ததுபோல் இருந்தது. ஒருவேளை பூட்டாமல் வந்துவிட்டேனோ? யோசனையோடு திரும்பிய போது யாரோ ஒருவர் என் அறைக்குள் நுழைந்தார். என்ன, யார் என்று கேட்க வாய் திறப்பதற்குள் அந்தத் துப்பாக்கி வெடித்துவிட்டது. என் கையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுந்தேன்.


யார், யாரோ ஓடிவந்தார்கள். மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்கள். காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். மாத்திரை கொடுத்தார்கள். ஊசி செலுத்தினார்கள். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லாரும் வந்து

பார்த்தார்கள். நல்ல வேளையாகப் பிழைத்தீர்கள் என்று ஆறுதல் சொன்னார்கள். இங்கே ஏன் வந்தீர்கள், இது ஆபத்தான இடம் என்று தெரியாதா என்று கடிந்துகொண்டார்கள். இது உங்களுக்கான இடமே இல்லை, சரியானதும் உடனே திரும்பிவிடுங்கள் என்று அறிவுரை சொன்னார்கள். மன்னித்து விடுங்கள், நிகழ்ச்சியை நிறுத்திவிடலாம். நீங்கள் நலமடைந்தால் போதும் என்றார்கள் என்னை அழைத்தவர்கள். அவர்களை அருகில் அழைத்துச் சொன்னேன். “நிகழ்ச்சி நடக்கும். நான் வருவேன். பாடுவேன்.” அதிர்ச்சியோடும் திகைப்போடும் அவர்கள் என்னைப் பார்த்தார்கள். “ஏன்?”


ஏனென்றால் நான் ஜமைக்காவின் மகன் என்றேன் அவர்களிடம். ஜமைக்கா என்பது நாடல்ல. நிலமல்ல. அது ஓர் உணர்வு. நான் உறங்கும்போது என்னைக் கதகதப்போடு அணைத்துக் கொள்ளும் என் ஜமைக்கா. நான் விழிக்கும்போது என்னோடு சேர்ந்து விழிக்கும் என் ஜமைக்கா. நான் பாடுவது ஜமைக்காவின் பாடலை. நான் ஆடுவது ஜமைக்காவின் நடனத்தை. ஜமைக்காவின் அசைவுதான் என் இசை. நானல்ல, எனது மேடை ஒவ்வொன்றிலும் கம்பீரமாக ஏறி நிற்பது ஜமைக்காதான். நீங்கள் கேட்பது என் குரலை அல்ல; நான் பிறந்து, வளர்ந்த ஜமைக்காவின் குரலை.


எங்கே அமைதி நிலவுகிறதோ அங்கே ஓடிப்போய் ஒளிந்துகொள்வது என் வழக்கமல்ல. எங்கே அமைதி இல்லையோ அங்கே பாடுவேன். எங்கே துப்பாக்கி ஆள்கிறதோ அதை எதிர்த்து என் பாடல் ஒலிக்கும். எங்கே இருள் நிறைந்திருக்கிறதோ அங்கே என் பாடல் ஒரு துளி ஒளியைப் பரப்பும். மகிழ்ச்சியோடும் ஆரவாரத்தோடும் உற்சாகத்தோடும் இருப்பவர்களுக்கு அல்ல; பசியோடும் அச்சத்தோடும் தவிப்போடும் இருப்பவர்களுக்காகவே பாடுகிறேன் நான். மென்மையாக உங்களை வருடிக்கொடுக்காது என் இசை. மயக்கத்தில் இருக்கும் உங்களைப் பிடித்து உலுக்கி விழிக்கச் செய்யும் என் இசை.


மறைந்து போன பறவைகள் மீண்டும் வந்து கிளைகளில் அமரும்வரை பாடுவேன். துப்பாக்கிகள் துருப்பிடித்து பொடிப்பொடியாக உதிரும்வரை பாடுவேன். மனிதர்களை அடைத்து வைக்கும் சங்கிலிகள் அனைத்தும் உடையும்வரை, ஒவ்வொருவருக்கும் விடுதலை கிடைக்கும்வரை பாடுவேன். வெறுப்பும் பகையும் முற்றிலும் மறையும்வரை பாடுவேன். நூறு துப்பாக்கிகள் என்னைச் சுட்டுத் தள்ளினாலும் என் பாடல் அழியாது. நீங்கள் கேட்கும்வரை, நீங்கள் விரும்பும் வரை என் பாடல் ஒவ்வொன்றும் உங்கள் ஒவ்வொருவரோடும் வாழும். என் பாடல் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் நான் இருப்பேன். நான் எங்கெல்லாம் இருக்கிறேனோ அங்கெல்லாம் என் ஜமைக்காவும் இருக்கும்.


(நான் ஜமைக்காவைப் பாடுகிறேன்!தேன்மிட்டாய், மாயாபஜார், இந்து தமிழ் திசை)

நன்றி. முகநூல் பதிவு 

1 comment:

  1. Great humanity hats off to the singer

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...