சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 30 May 2025

ஏட்டு ஏகாம்பரம்

 ஏகாம்பரம் அப்போதுதான் அந்த காவல் நிலையத்தில் புதிதாக வந்து பணியில் சேர்ந்து இருந்தான். அது நகரமும், கிராமமும் கலந்த மாதிரியான ஒரு ரெண்டும் கெட்டான் பகுதி. 

இவன் வேலைக்கு சேர்ந்த மறுநாளே சர்க்கிள் இன்ஸ்பெக்டர் எல்லாரையும் கூப்பிட்டு காச்சு மூச்சு என்று கத்திக் கொண்டிருந்தார்.. நிறைய கேஸ் போடணும்பா, மீட்டிங்ல கண்ணா பின்னான்னு திட்டுறாங்க, சட்டம் ஒழுங்கு எல்லாம் பாதுகாக்கணும், என்னய்யா பண்ணி கிழிச்சிட்டு இருக்கீங்க.. என்று கண்ணா பின்னா என்று கத்தினார்.

 ஏகாம்பரத்திற்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. கன்னாபின்னா வென்று திட்டுகிறார்களே என்று முதலில் வருத்தப்படத்தான் செய்தான். ஆனால் இவன் ட்ரெயினிங் போனபோது இவனுடைய மாஸ்டர் முதலில் சொல்லிக் கொடுத்த பாலபாடமே "மேலதிகாரி எவ்வளவு கேவலமா திட்டினாலும் கண்டுகொள்ளக் கூடாது கூடாது. துளிக்கூட ரோசப்படக்கூடாது. ரோஷப்படுவதானால் இப்படியே வீட்டுக்கு ஓடி போயிரு, நீ போலீஸ் வேலைக்கு லாயக்கப்பட மாட்டே" என்ற போதனைகள் செய்திருந்தார்.அவனது குடும்ப சூழ்நிலையும் வேலை செய்தால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை இருந்ததால் போலீஸ் வேலையினுடைய அனைத்தும் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டான். 

புதிதாக வேலைக்கு சேர்ந்தவன் என்ற முறையில் அங்கு இருந்த சீனியர் ஏட்டு ராமையா இவனுக்கு போதுமான பயிற்சி கொடுக்க சொல்லி இன்ஸ்பெக்டர் சொல்லி இருந்தார்.. ஏட்டு ராமையா இவனை கூடவே எங்கு சென்றாலும் அழைத்துச் சென்றார். 

போற வழியில ஒரு டீக்கடைக்காரன் ஏட்டையாவ டீ சாப்பிட கூப்பிட்டான்

 ஏகாம்பரம் முந்திக்கொண்டு இப்பதான் டீ குடிச்சிட்டு வரோம் என்றான். 

ஏட்டையா கடுப்பாகி ஒன்னும் சொல்லல. தலையை ஆட்டிட்டே கூட்டிட்டு போனார்.

கொஞ்ச தூரம் சென்றதும் ஏட்டு ஏகாம்பரத்திடம் என்னப்பா இப்படி கூறுகெட்ட தனமா டீ வேணாங்கிற,, எவனாவது டீ வாங்கி தந்தால் குடிச்சிறனும்.. இல்லைன்னா அடுத்த தடவை கேக்கவே மாட்டாங்க. இப்ப டீக்கடைக்காரன் டீ குடிக்க சொல்றான்னா எப்பவுமே நம்ம தயவு வேணும்னால தான்.. நம்ம அந்த கெத்து கெடாமல் பாத்துக்கனும்....அப்படீன்னு கீதா உபதேசம் செய்தார்.. இவனும் தலையாட்டிக்கொண்டே வந்தான்... 

இப்படி பேசிக்கொண்டு நடந்து வரும் போது தூரத்தில் எவனோ சைக்கிளில் டபுள்ஸ் வருவது போல தெரிந்தது. சரி, நமக்கு நல்ல நேரம் தான்னு, ஏட்டு தயாராக நின்றார். அந்தக்காலத்தில் சைக்கிளில் டபுள்ஸ் வருவது, லைட் இல்லாமல் ஓட்டுவது எல்லாம் சட்டப்படி குற்றம். கேஸ் போடுவார்கள். அல்லது ஏதாவது பெற்றுக் கொண்டு விரட்டி விடுவார்கள். 

வந்தவன் சாமர்த்தியசாலி, ஏட்டும், கூட ஒரு போலீஸ் நிற்பதைக்கவனித்து விட்டு,, நைசாக பின்னால் அமர்ந்து வந்தவனை இறக்கிவிட்டு, தான் மட்டும் மெதுவாக ஓட்டிச் சென்றான். தனியாக வருபவனை என்ன செய்வது என்று ஏட்டு விட்டுவிட்டார். பின்னாடி அமர்ந்து வந்தவன், ஏட்டினைப்பார்த்து வணக்கம் போட்டு விட்டு சென்றான். 

ஏகாம்பரம் ஏட்டையாவைப்பார்த்து அய்யா அவர்கள் டபுள்ஸ் தானே வந்தார்கள். நம்மைப் பார்த்து தானே இறங்கி விட்டார்கள். பிடித்திருக்கலாமே என்று கேட்டான். 

நம்மை பார்த்தவுடன் மரியாதையாக இறங்கி ஒற்றை ஆளாக வந்தார்களே, அந்த பயம் தான் நமக்கு நல்லது. நாம் வண்டிக்காரனைப்பிடித்தால் பின்னால் வந்தவன் வேறுபக்கம் போய்விடுவான் . பயமும் போய்விடும். மரியாதையும் போய்விடும். நமக்கு வேறு எவனாவது கேனையன் சிக்குவான். என உபதேசம் செய்தார். 

நாலு தெரு சுத்தி வந்து ஒண்ணும் உருப்படியா அவர்களுக்கு அமையவில்லை. பசி எடுத்தது. வா சாப்பிட இந்த கடைக்கு போகலாம் என்று ஒரு ஓட்டலுக்கு கூட்டிச் சென்றார். 

ஹோட்டல் காரன் தூரத்தில் ஏட்டு, கூட ஒரு போலீஸ்காரன் வருவதை பார்த்து சாப்பாட்டு ராமன் வந்துட்டாப்புல, கவனிச்சு அனுப்பி விடு என்று பரிமாறுபவரிடம் கூறினார்.

ஏட்டு ராமையாவை ஓட்டல் காரர் சாப்பாட்டு ராமன் என்று தான் சொல்லுவார். அந்த ஏரியா கொஞ்சம் வில்லங்கமான பகுதி தான், ஏட்டையா அந்த பக்கம் வந்து போவதை பார்த்தால் எவனும் தேவையில்லாமல் பிரச்சினை பண்ண மாட்டார்கள். ஏட்டையாவுக்கு எப்பொழுதும் இலவசமான சாப்பாடு, கவனிப்பு தான்.

 ஏகாம்பரத்திற்கு பிடிக்கவில்லை என்றாலும், கையில் காசு இல்லை சரி ஓசி சாப்பாடு தானே என்று ஏட்டையாவுடன் சேர்ந்து ஒரு பிடி பிடித்தது கிளம்பினார்கள்.

ஊர் சுற்றி முடித்தவுடன் ஸ்டேஷனுக்கு வந்து சேர்ந்தார்கள். இன்ஸ்பெக்டர் என்னையா கேஸ் ஏதும் பிடிக்கலையா, தியேட்டர் பக்கமாக போய் தொலைங்கையா என்றார். 

ஏகாம்பரத்திற்கு ரொம்ப சந்தோசம். தியேட்டருக்கு போகச்சொல்லி இருக்கிறார்களே நன்றாக சினிமா பார்க்கலாம் என்று அவன் மகிழ்ச்சியை ஏட்டிடம் தெரிவித்த போது, ​​அட கூமுட்டை கேஸ் பிடிக்கத்தான் அங்க போறோம் என்றார். கேஸ் பிடிக்க எதுக்கு சினிமா தியேட்டருக்கு போகணும் என்று ஏகாம்பரத்திற்கு குழப்பம்.. பேசாமல் கூடவே போனான். 

போகும்போது மேலத்தெருப்பக்கம் நுழையப் போனான். ஏட்டு அவன் கையை பிடித்து அந்த தெருப்பக்கம் எல்லாம் போகாதே, எல்லாம் அந்த.. ஜாதிக்காரங்க இருக்க பகுதி. நம்மள மதிக்க மாட்டாங்க. தேவையில்லாம பேசுவாங்க வா என்று வேறு பக்கம் திரும்பினார்கள். ஏட்டு இன்னொரு தெரு பெயரைச் சொல்லி அந்த பக்கம் எல்லாம் போயிராத அது நம்ம கௌரவத்துக்கு குறைச்சல் எவனாவது பிடித்து உதைக்கணும்னா அங்க போகலாம் இல்லன்னா அதுக்குள்ள எல்லாம் நம்ம போகக்கூடாது என்று எச்சரிக்கை செய்தார். 

ஒரு வழியாக அந்த தியேட்டருக்கு போய் சேர்ந்தவுடன் கதவை தட்டி திறந்து விடப்பா என்று ஏட்டு சொன்னார். வாட்ச்மேன் கதவை திறந்து இவர்கள் இருவரையும் உள்ளே விட்டுவிட்டு அய்யா டீ சாப்பிடுங்க, மேனேஜர் அய்யாவைகூட்டிட்டு வாரேன் அப்படின்னு சொல்லிட்டு மேனேஜரை தேடி போனான். 

மேனேஜரை பார்த்து ஏட்டு வந்த செய்தியை சொன்னவுடன், அவர் கடுப்பாய் திட்டிக் கொண்டே அரிப்பு எடுத்தா வந்துருவாங்களே என்றவாறு ஏட்டை பார்க்க வந்தார்.. 

ஏட்டை பார்த்தவுடன் வாயெல்லாம் பல்லாக மேனேஜர் வணக்கம் சொல்லியவாரு என்ன ஏட்டையா இந்த பக்கமே ஆள காணோம் என்று, காணாமல் போன காதலியை மீண்டும் பார்த்த மாதிரி பாவாலா காட்டிக் கொண்டு வரவேற்றார். வாட்ச்மேனுக்கு ஒன்றும் புரியவில்லை.

இருந்தாலும் அவனும் இந்த நடிப்பை புரிந்து கொண்டு பல்லைகாட்டியவாறு ஏட்டையா அருகே வந்து பவ்யமாக நின்றான்.

ஏட்டு மேனேஜரிடம் நான் நல்லா இருக்கேன்பா, நீ நல்லா இருக்கியா, ஒன்னும் இல்ல, மாச கடைசி ஒன்னும் கேஸ் கிடைக்கல, அதான் இன்ஸ்பெக்டர் தியேட்டர் பக்கம் போய் பாரு அப்படின்னு உத்தரவு போட்டார் இரண்டு ஆள குடுப்பா, நாலு கேச புடுச்சுட்டு போறேன் என்றார்.. சரிங்கய்யா என்று கிளம்பிப் போனார். போனவர் ஆப்ரேட்டரிடம் ஏட்டு வந்திருக்கிறார் பார்த்துக்கொள் என்று சொல்லிவிட்டு வேலைக்காரங்க ரெண்டு பேரை கூப்பிட போனார்.

ஆப்பரேட்டரும் படம் ஓடிக் கொண்டிருக்கையில் ஸ்லைடு புரொஜக்டர் ஆன் செய்து புகை பிடிக்காதீர்கள் என்ற சிலையை இரண்டு முறை போட்டு ஆப் செய்தார். வேறொன்றுமில்லை, அது ஒரு சிக்னல் தான். தியேட்டரில் படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது புகை பிடிக்கும் ஆசாமிகளுக்கு போலீஸ்காரர் வந்திருக்கிறார் சாக்கிரதை என்று எச்சரிக்கை தான்.

விவரம் புரிந்தவர்கள் ஜாக்கிரதையாக பீடியை அணைத்து போட்டார்கள் .

அரங்கின் இரு வாசல் இருவரை காவல் வைத்து ஏட்டு, ஏகாம்பரத்தை அருகே அழைத்துச் சென்று நைசாக உள்ளே படம் பார்த்துக் கொண்டு பீடி பிடிக்கிறவர்களாகப் பார்க்கிறார்கள். கைப்பிடியாக வெளியே அழைத்து வந்தார். ஆக திரையரங்கில் விபரம் தெரியாமல் புகழ் பிடித்த ஒரு பத்து பதினைந்து பேர் ஏட்டிடம் அகப்பட்டுக் கொண்டார்கள். அவர்களை வெளியே அழைத்து வந்து பட்டியல் தயார் செய்து போலீஸ் ஸ்டேஷனுக்கு கைப்பிடியாக அழைத்துச் சென்றார்.

ஸ்டேஷனில் ரைட்டர் என்ன கேஸ் என்று விசாரித்தார். ஏனெனில் அவர்தான் கம்ப்ளைன்ட் எழுதுகிறவர். பாதியாக பிரித்து, தியேட்டரில் புகை பிடித்தவர்கள் பாதி, பொது இடங்களில் சிறுநீர் கழித்தவர் பாதி என கேஸ் போடச்சொன்னார் ராமையா ஏட்டு.

ஏகாம்பரத்தை எப்படி கேஸ் எழுதுகிறார் என்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஏட்டு வழிகாட்டினார்.

ரைட்டர் ஒரு ஆளை கூப்பிட்டு அவனுடைய முகவரி பெயர், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு எழுதலானார். 

 இந்த ஊரை சேர்ந்த, இந்த முகவரியில் வசிக்கும், இன்னாருடைய மகன் இன்னார், இந்த வயது, இந்த இடத்தில், நின்று கொண்டு, தனது ஆண்குறியை கையில் பிடித்துக் கொண்டு பொதுமக்கள் அருவருக்கத் தக்க வகையில் ஆட்டிக்கொண்டு சிறுநீர் கழித்தார் என்று கம்ப்ளைன்ட் எழுதினார்.

 இவ்வாறாக சட்ட ஒழுங்கை காப்பாற்றும் பணியினை கற்றுக்கொண்டு ஏகாம்பரம் தனது பணியினை துவக்கலானான்.பிற்காலத்தில் பேரும் புகழும் பெற்ற ஏட்டு ஏகாம்பரம் ஆனார்...... 

****************'*************

இது எனது அப்பா சொன்ன அறுபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாக சொல்லப்பட்ட நடைமுறை கதை. நல்லவேளையாக இப்போது இருப்பது போன்ற குற்றங்கள் அப்போது இல்லை என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம் தான்.... 


No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...