சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 24 May 2025

கூர்க்கா

 காலையில் காலிங் பெல் அடித்த சத்தம் கேட்டது. வெளியே சென்று கதவை திறந்து பார்த்தேன். என் மனைவி முனுமுனுத்தாள். 

யார் என்று தெரியவில்லை எதற்கு இவ்வளவு வேகமாக போகிறீர்கள் என்று...

வாசலில் கூர்க்கா நின்று கொண்டிருந்தான். என்னை பார்த்தவுடன் சலாம்சாப் என்றான். 

கணேஷ் பகதூர் என்பது கூர்க்காவின் பெயராகும். ஆள் சுமரான உயரம், உருட்டு கட்டை போல் இருப்பான், எப்போதும் சிரித்த முகம் தான்.

ரொம்ப நாளாக இந்த பகுதி எல்லாம் சுற்றிக் கொண்டிருப்பான். ஓரளவு சுமராக தமிழில் பேசுவான். சும்மா இருக்கும் நேரத்தில் நின்று பேசுவேன். அவனும் பொழுது போகாத போது என்னிடம் தனது கதையை கூறுவான். 

 நீ நேபாளத்திற்கு சென்று வருவாயா என்று கேட்டேன். அவன் பிறந்து வளர்ந்ததெல்லாம் நேபாளம் தான். பதினாறு வயதிருக்கும்போது மாமா கிருஷ்ண பகதூர் வந்திருந்தபோது என்னடா இங்கே சும்மா சுற்றிக் கொண்டிருக்கிறாயே என் கூட வருகிறாயா என்று கேட்டவுடன் அவருடன் சென்னைக்கு கிளம்பி வந்துவிட்டான் .

கிருஷ்ணபகதூர் தமிழ்நாட்டில் அரசு அலுவலகத்தில் இரவு காவலாளியாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். நேபாளத்தில் பிறந்த கிருஷ்ண பகதூர் தமிழ்நாட்டில் எப்படி வேலை பார்க்க முடியும் என்பது எனக்கு சந்தேகம். நானும் அது பற்றி கேட்டபோது அந்த வேடிக்கையான கதையை கூறினான். அப்போது எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த நேரம் அவரை கூர்க்காக்கள் சந்தித்தபோது சலாம் போட்டு ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கேட்டிருக்கிறார்கள்.

அது என்னமோ எம்ஜிஆருக்கு கூர்க்காக்கள் என்றால் ஒரு பிரியம். அவர்கள் மிக நேர்மையானவர்கள், காவல் காப்பதிலே வல்லவர்கள் என்பது அந்த காலத்தில் பிரசித்தம்.யூனிபார்ம் போட்டு கம்பீரமாக வேலைக்கு வருவார்கள். இடுப்பிலே குறுவாள் சொருகி இருப்பார்கள். அப்பொழுதெல்லாம் பெரிய மனிதர்கள், நடிகர்கள், நடிகைகள் பிரசித்தமானவர்கள் வீட்டில் காவலுக்கு கூர்க்காக்களை வைத்திருப்பார்கள். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் கூர்க்காக்களை அரசு அலுவலகங்களுக்கு இரவு காவலாளிகளாக நியமனம் செய்ய உத்தரவு பிறப்பித்தார். அந்த வகையில் கணேஷுடைய மாமாவும் இன்னும் சில உறவினர்களும் சென்னையில் அரசு அலுவலகங்களில் இரவு காவலாளிகளாக வேலைக்கு சேர்ந்தனர்.

நேபாளத்திலும் பெரிய தொழில் எல்லாம் ஒன்றும் கிடையாது. வெளிநாட்டில் வேலைக்கு சென்று பிழைப்பது என்பது அவர்களுக்கு சர்வ சாதாரணமான விஷயம். அதிலும் இந்தியாவில் வருவதற்கு அவர்களுக்கு பாஸ்போர்ட் எதுவுமே தேவையில்லை. அதனால் மாமா கூப்பிட்டவுடன் கணேஷ் பகதூரும் கூடவே கிளம்பி வந்து விட்டான். ஒருவேளை இங்கு அரசு வேலை கிடைத்தால் நல்லதென்று நினைத்தானோ என்னவோ, இவன் வந்த நேரம் இங்கு காலமெல்லாம் மாறிவிட்டது. முன் போல் எல்லாம் கூர்க்காக்களை பெரிதாக வைத்துக் கொள்வதில்லை. போட்டிக்கு தான் ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள், தான் செக்யூரிட்டிகளாக வேலைக்கு சேர ஆரம்பித்து விட்டார்களே. அதுபோக எல்லா முக்கியஸ்தர் வீடுகளிலும் கேமராக்கள் வைத்து பெரிதாக கூர்க்காக்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில்லை.

அரசாங்கத்தில் தான் வேலைக்கு ஆள் எடுப்பதே இல்லையே, இவர்களை எங்கே எடுக்க போகிறார்கள். அதனால் அந்த வாய்ப்பு இல்லை. அதனால் கிடைக்கும் இடத்தில் செக்யூரிட்டியாக வேலைக்கு போக ஆரம்பித்தான்.

 ஆரம்பத்தில் ஒரு டாக்டர் வீட்டில் செக்யூரிட்டியாக போய் இருந்தான். தங்குவதற்கெல்லாம் இடம் தரவில்லை. காவலுக்கு இருக்க வேண்டும். எடுபிடி வேலை செய்ய வேண்டும். மழை வந்தால் பெரிதாக ஒதுங்க எல்லாம் இடம் கிடைக்காது. இருந்தாலும் பரவாயில்லை என்று அங்கு வேலைக்கு சென்று இருந்தான். அவரோ மிகப்பெரிய கஞ்சன். ஒழுங்காக சம்பளம் கூட தர மாட்டார். அவரே வாக்கிங் போய்விட்டு டீ கடையில் 500 ரூபாய் நோட்டை எடுத்து நீட்டுவார். அவன் சில்லறை இல்லையே என்று சொன்னால், சரி சரி அடுத்த முறை கொடுத்து விடுகிறேன் என்று வந்து விடுவார். ஒவ்வொரு முறை செல்லும்போது 500 ரூபாய் தான் நீட்டுவார். டீ கடைக்காரனோ பார்த்தான். இவர் வந்த நாட்களை கணக்கு பண்ணி வைத்து சில்லரை ரெடியாக வைத்திருந்தான். அடுத்த முறை இதே மாதிரி 500 ரூபாய் நோட்டை நீட்டியதும் இதுவரை டீ குடித்த காசை கணக்கு பண்ணி எடுத்துக்கொண்டு பாக்கியை கொடுத்து விட்டான். அடுத்த நாள் வேறுகடைக்கு மாறி விட்டார். அப்பேற்பட்ட பெருந்தன்மையாளர். கணேஷ் ராத்திரி காவல் காத்து வீட்டிற்கு கிளம்பையிலே, சீக்கிரம் சாப்பிட்டுவிட்டு வந்து சேரு வேலை இருக்கு என்பார். 24 மணி நேரம் வேலை வாங்கினாலும் ஒழுங்காக சம்பளம் கொடுக்க மாட்டார். இவனும் வேறு இடம் பார்த்து விட்டான். எத்தனை இடத்திற்கு போனாலும் லட்சணம் இதுதான்.

பல இடங்களில் செக்யூரிட்டி வேலை பார்த்துவிட்டு ஒன்றும் சுத்தப்படாமல் நண்பன் ஒருவனோடு புதுக்கோட்டை வந்து சேர்ந்து விட்டான். பகலில் எங்காவது வேலை பார்த்து விட்டு, இரவு ஆனவுடன் கையில் லத்தி ஒன்று எடுத்துக் கொண்டு விசில் ஊதிக்கொண்டு தெருத்தெருவாக சுற்றி வர வேண்டியது, மாதம் பிறந்தவுடன் வீட்டுக்கு வீடு கையேந்தி கொடுத்ததை வாங்கிக் கொண்டு சென்று விடுவான். எப்படியோ அவனுக்கு பிழைப்பு ஓடிக் கொண்டிருந்தது. 

நல்ல பசுமையான மலைப்பிரதேசத்தில் பிறந்து, வயிற்றுப் பிழைப்புக்காக இந்த தண்ணி இல்லா காட்டில் சுத்தி திரிவது அவனுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது. வேறு என்ன செய்ய முடியும்.. 

நான் கேட்டேன் உன்னை யார் இங்கு வேலை சேர்த்தார்கள் என்று.. 

யார் சேர்த்தது நானாக உருவாக்கிக் கொண்ட வேலை என்று கூறினான். 

எனக்கு தெரிந்து அவனை யாரும் இங்கு வேலைக்கு சேர்த்ததாக தெரியவில்லை, எல்லா இடங்களிலும் கூர்க்காக்கள் சுற்றி வருகிறார்கள் என்று நினைக்கிறேன்.  

அந்த காலத்தில் கூர்க்காக்கள் எல்லாம் கத்தி வைத்து இருந்தார்கள். நீங்கள் வைத்துக் கொள்வதில்லையா.. உறையை விட்டு கத்தி எடுத்தால் ரத்தம் பார்க்காமல் உள்ளே வைக்க மாட்டீர்களாமே என்று கேட்டேன்.

அவன் சிரித்துக் கொண்டே சொன்னான். கத்தி வைத்துக்கொண்டு யாரையாவது காயப்படுத்தி விட்டால் யார் தானாகாரனிடம் அகப்பட்டு கொண்டு கஷ்டப்படுவது என்று. 

தானாக்காரன் என்றால் எனக்கு புரியவில்லை. அப்புறம் தான் தெரிந்தது போலீஸ் என்று. இந்த கத்தி கதை எல்லாம் வெறும் உதார் என்று தெரிந்தது.

 ஒரு பத்து ரூபாய் எடுத்து கொடுத்தவுடன் சந்தோசமாக சலாம் போட்டுவிட்டு சென்றான். 

வீட்டுக்குள் இருந்து மனைவி கத்தினாள்.. இந்த ஏரியாவில் யாருமே ஒத்த ரூபா கொடுப்பதில்லை. நீங்கள் மட்டும் தான் கொடுத்து கெடுக்கிறீர்கள்..... 

1 comment:

  1. Really interesting to read... completed it at a stretch..hats off

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...