இன்றுடன் என் தந்தையார் திரு ஆ. சீனிவாசன் அவர்கள் பிறந்து நூற்றாண்டுகள் நிறைவடைகிறது.
5.8.1925 அன்று மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, வெள்ளலூர் கிராமத்தில் திரு ஆண்டியப்பன் முத்தம்மாள் தம்பதியருக்கு ஏக புதல்வனாக பிறந்தார்
அந்தக் கால வழக்கப்படி தின்னைப்பள்ளிக்கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த அவர், குலவழக்கப்படி பர்மாவுக்கு தனது தந்தையுடன் வட்டிக்கடைக்கு வேலைக்கு சென்றார். இரண்டாம் உலகப் போர் மூண்டு, பர்மாவை ஜப்பான் கைப்பற்றியதன் விளைவாக, தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
சிறுவனாக எனது தந்தை கப்பல் மூலம் தாயகம் திரும்ப, அவரது தந்தையார் கால்நடையாகவே பர்மாவிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்து, பின்னர் ஊர் வந்து சேர்ந்தனர்.
தாயகம் திரும்பிய பின்னர் அவரது அண்ணன் முறை உறவினர் திரு விஸ்வநாதன் அவர்களின் மிதிவண்டி கடையில் வேலை பார்த்து வந்த அவர் சொந்தமாக A S வாசன் சைக்கிள் கடை நடத்தி வந்தார். அவரது பள்ளித்தோழர் திரு ஆ. பெரி. சோமசுந்தரம், அவரது அண்ணன் ஆ. பெரி. கிருஷ்ணன் , திரு விஸ்வநாதன் ஆகியோருடன் இணைந்து பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றினார். கட்சி 1948ல்,தடை செய்யப்பட்ட நிலையில், உள்ளூரில் ஏற்பட்ட விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக இலங்கை சென்று அங்கு வேலை பார்த்து வந்தார்.
பின்னர் தனது முப்பதாவது வயதில் தாயகம் திரும்பி, அதே ஊரைச் சேர்ந்த திரு. ஆ. சிதம்பரம், மீனாட்சி தம்பதியருக்கு மூத்த மகளாய் பிறந்த உமையாள் என்பவரை மனந்து கொண்டு மதுரைக்கு குடிபெயர்ந்தார். பழக்கமான வட்டித்தொழில் மக்களைச்சுரண்டும் தொழில் என நினைத்தவர், மதுரை பயனீர் சைக்கிள் ஹவுஸில் பணியில் இணைந்தவர் 1983 வரை பணியாற்றி ஓய்வு பெற்றார்.
ஒரு மிகச் சிறந்த தந்தையாக நான்கு குழந்தைகளான எங்களை மிக அன்போடு வளர்த்தார் வறுமையிலும் பாசம் குறையாமல், மனதளவில் செல்வந்தரைப் போல மகிழ்ச்சியாக வாழ பழக்கினார்.
ஒரு நல்ல ஆசானாக ஏராளமான விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். சிறு சிறு கதைகள் மூலமாக வாழ்க்கை பற்றி பாடங்கள் கற்றுக் கொடுத்தார். அவர் படித்த பாடல்களில் இருந்து பல விஷயங்களை எடுத்துக்காட்டி, எங்களை அறிவாளிகளாக்க முயற்சி செய்தார்.
எங்களுக்கு சிறந்த நன்பனாய் இருந்தார. பல விஷயங்களை மனம் விட்டுப் பேசி பகிர்ந்து கொள்ளும் நன்பனாய் இருந்தார்.
எங்களுக்கு அரசியலை போதிக்கும் ஆசானாக, நல்ல தோழனாக இருந்தார். பொதுவுடமை இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் உறுப்பினராகவும், இயக்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் குடும்ப சூழ்நிலை காரணமாக இலங்கை சென்று பொருளீட்டி பின்னர் தாயகம் திரும்பிய பின்னர் இறக்கும் வரை பொதுவுடமை இயக்க ஆதரவாளராக இருந்து மறைந்தார். பொதுவுடைமை இயக்க வரலாறு, அரசியல் போன்ற பலவிசயங்களை போதித்தார். பொதுக்கூட்டங்களுக்கு அழைத்து செல்வார்.
சாதி மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, மனித நேயம், பகுத்தறிவு, சுய மரியாதை ஆகியவற்றிறை கற்றுக் கொடுத்தார்.
எங்களுக்கு எல்லாமுமாய் இருந்த எங்கள் தந்தை யார் தனது 75ஆம் வயதில் 20.10.2000 அன்று இயற்கை எய்தினார்.
இன்றுடன் அவர் பிறந்து நூற்றாண்டுகள் நிறைவடைகிறது . என்றம் எங்கள் நினைவில் வாழ்கிறார்....
மிக அருமை, சிறந்த வளரப்பு.
ReplyDelete