சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 14 August 2025

நட்பு தமிழ் வட்டம் மதுரை 6 ஆம் ஆண்டு விழா

 






மிக நீண்ட காலத்திற்கு முன்பு இலக்கியக் கூட்டங்களில் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறேன். சிலவற்றில் பேசும் நாடகங்களில் நடித்தும் இருக்கிறேன். அதன் பிறகு நேரடி இலக்கிய தொடர்பு இல்லாது போயிற்று.. 
எனது நண்பர் பாவலர் சுப முருகானந்தம் நட்பு தமிழ் வட்டத்தை அறிமுகப்படுத்தி ஒரு தலைப்பில் பேசுகிறாயா என்று கேட்டார். நானும் பாதி ஆர்வத்துடன் மீதிபயத்துடனும் ஒப்புக்கொண்டேன்.

நிறுவனத் தலைவர் ஐயா நா ஆறுமுகம் அவர்களை எனக்கு முன் அறிமுகம் கிடையாது . அவரும் நண்பர் சுபமுருகானந்தம் அறிமுகப்படுத்தியதை ஏற்றுக்கொண்டு "வாடிவாசல் திறந்து இருக்கு வாடா தமிழா" என்ற தலைப்பை எனக்குக் கொடுத்து பேசினார்கள்.

 அங்குமிங்குமாக தேடி இலக்கியத்தில் சில பாடல்களையும், வெளிவந்த கருத்துக்களையும், மஞ்சுவிரட்டு சார்ந்த அரசியல் கருத்துக்களையும் வைத்து இயன்றவரை பேசினேன். சிறப்பாக பேசியதாக எனக்கு நம்பிக்கை இல்லை, இருந்தாலும் ஏற்றுக் கொண்டார்கள். 


அதன் பிறகு வாராவாரம் இனிய வழி கூட்டத்தில் பங்கேற்க ஆரம்பித்தேன். அப்போதுதான் தெரிந்தது. என்னைப்போல் பல புது முகங்களை அறிமுகப்படுத்தி,நல்ல தலைப்புகளில் அவர்களை இலக்கியங்களை தேடி வைத்து பேச வைத்த நிறுவனர் ஐயா அவர்களுடைய பாங்கு தெரிந்தது. 


அதேபோல தமிழகமெங்கும் மிகச் சிறப்பாக தமிழ் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களை அழைத்து, அவர்களையும் வாராவாரம் ஏதேனும் ஒரு தலைப்பில் பேச வைக்கும் தமிழ் பணியை ஐயா செய்து வருகிறார்கள். 


குறளின் குரலாக குழந்தைகளை பேச வைத்து பாட வைத்தும், திருக்குறள், பாரதிதாசன் பாடல்கள் என நல்ல இலக்கியங்களை கற்க வைத்தோம், அவர்களை ஊக்கப்படுத்தி, தமிழ் பரப்பும் தொண்டினை ஐயா நட்பு தமிழ் வட்டத்தின் மூலமாக மிகச் சிறப்பாக செய்து வருகிறார்கள்.


எப்போது வரும் ஞாயிறென்று, ஏங்க வைக்கும் அற்புதமான நிகழ்ச்சியாக வாராவாரம் இணையவழி கூட்டங்களை ஐயா நடத்தி வருகிறார்கள்.


பேசினால் மட்டும் போதாது, அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வாருங்கள், என்று ஊக்கப்படுத்தி ஏராளமான கவிஞர்களையும், கட்டுரையாளர்களையும் எழுத்தாளர்களையும் ஐயா உருவாக்கி தமிழ்த்தொண்டாற்றி வருகிறார். 


நல்ல செயல்பாடுகள், முன் முயற்சிகளை ஊக்குவிப்பது, கருத்துப்பிழை ஏற்பட்டாலோ, ஏதாவது தவறு நிகழ்ந்து விட்டால் மனம் கோணாதவாறு சுட்டிக்காட்டி, சரியான பாதைக்கு அழைத்து வரும் நல்ல ஆசிரியனாய் நாநா ஐயா திகழ்ந்து வருகிறார். 


தனி மரம் தோப்பாகாது என்றொரு பழமொழி இருந்தாலும், நெடி துயர்ந்த ஆலமரமாய் நா ஐயா அவர்கள் நடித்துள்ளார். அவருக்கு பக்க துணையாக தாங்கி நிற்கும் விழுதுகளாக அரும் தொண்டாற்றி வரும் செயலர் நாவினி நாசர் ஐயா, தமிழ் வானம் ராஜேந்திரனார் ஐயா, பொருளர் மு. ஆசை தம்பி மகாலிங்கம் துரைராசு, பாவலர் சுபமுருகானந்தம், சிறீ ராம், செந்தில் குமார், மல்லிகா ஆசிரியை, சர்மிளா, யாழ்க்கோ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படை ஐயா அவர்களுடைய தமிழ் தொண்டிற்கு துணையாக பக்க பலமாக வருகிறார்கள்.

 எல்லாவற்றுக்கும் மேலாக மிகச்சிறந்த முறையிலே தொழில்நுட்ப ரீதியாக உதவிகளை செய்து நட்பு தமிழ் வட்டத்தின் இணை வழி கூட்டத்தை மிகச் சிறப்பாக சிறப்பான முறையில் கொண்டு செல்கின்ற பணியை பாவலர் செல்வ மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் செய்து வருகிறார்கள்.


ஏழு ஆண்டுகள் மிகச் சிறப்பாக வாராவாரம் இணைய வழி கூட்டம் மூலமாகவும், ஆண்டிக்கொரு முறை ஆண்டு விழாவாகவும் தமிழகமெங்கும் உள்ள அறிஞர்களையும் தமிழ் நெஞ்சங்களையும் சந்திக்க வைத்து, கொள்வோரும் கொடுப்போமாக தமிழ் வளர்க்கும் பணியை ஐயா அவர்கள் செய்து வருகிறார்கள்.


கடந்த 10 8 2025 அன்று மதுரை பிரபு மகாலில் நட்பு தமிழ் வட்டத்தின் ஆறாம் ஆண்டு விழா/ ஏழாம் ஆண்டு துவக்க விழா மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.


மிகச்சிறந்த தமிழ் அறிஞர்கள் பங்கேற்று நல்ல உரையும், கவிஞர்கள் பங்கெடுத்த கவியரங்கமும், மிகச்சிறந்த பட்டிமன்றமும், ஒரு சொல் ஆய்வரங்கமும் குழந்தைகள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாக நடைபெற்றன.


மிகச் சிறந்த தமிழ் தொண்டாற்றி வரும் நட்பு தமிழ் வட்டத்தின் நிறுவனத் தலைவர் புலவர் நா ஆறுமுகம் ஐயா உள்ளிட்ட அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் நன்றிகளை உரித்தாக்கி கொள்வோமாக... 

1 comment:

  1. உங்கள் சமுதாயப் பணிக்கு வடிகாலாய் நட்பு தமிழ் வட்டம் மதுரை இருப்பதில் பேருவகை கொள்கிறோம்! தங்கள் உழைப்பு ஒப்புக் கொண்ட வேலையை திறம்படச் செய்வதில் ஆர்வம் உடல்நலிவிலும் உளம்சோர்வடையாத துணிவு அனைத்தும் பாராட்டுக்குரியவை! தொடர்க தொண்டறம் வாழ்த்துகள் கார்த்தி!

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...